பொதுவாக இருட்டு என்றாலே பலருக்கும் பயம் வரும். ஆனால், அப்படிப்பட்ட இருட்டில்தான் பல்வேறு அதிசயங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மறைந்துள்ளன. பூமியில் இருக்கும் சில இருள் சூழ்ந்த இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
அட்டகாமா பாலைவனம், வடக்கு சிலியில் அமைந்துள்ளது, தீவிர வறட்சிக்கு பேர் போனது. அதன் உயரம், தெளிவான வானம் மற்றும் குறைந்தபட்ச ஒளி மாசுபாடு ஆகியவை வானியல் ஆராய்ச்சிகளுக்கு சிறந்த சூழலை உருவாக்குகின்றன. உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் அரே(Atacama Large Millimeter Array) (ALMA) உட்பட பல கண்காணிப்பு மையங்கள் அட்டகாமாவில் இருக்கிறது. விஞ்ஞானிகள், பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள்(Black Holes) மற்றும் பிற அண்ட நிகழ்வுகளை இங்கு ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். இங்கு வரும் பார்வையாளர்கள் பால்வீதி(Milky way galaxies) மற்றும் விண்மீன்களின் பரவசமூட்டும் காட்சிகளைக் காணலாம், ஆனால், இங்குள்ள கடுமையான பாலைவன நிலைமைகள், குறைந்த அளவிலேயே உள்ள சுவாசிக்கக்கூடிய காற்று, தீவிர வெப்பநிலை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு ஆகியவை பயணிகளுக்குச் சவால்களை ஏற்படுத்துகின்றன.
நியூசிலாந்தின் தெற்கு தீவில் அமைந்துள்ள அராக்கி மெக்கன்சி சர்வதேச டார்க் ஸ்கை ரிசர்வ் 4,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் அழகிய வானம் தெற்கு அரைக்கோளத்தில்(Southern Hemisphere) சில இருண்ட காட்சிகளை வழங்குகிறது. இந்த இடம் குறைந்த ஒளி மாசுபாட்டுடன் இருப்பதால், பார்வையாளர்களால் நட்சத்திரங்கள், மாகெல்லானிக் மேகங்கள் (Magellanic Clouds) மற்றும் பால்வெளி போன்ற வான் அதிசயங்களைக் கண்டு வியக்க முடியும். இருப்பினும், இந்த ரிமோட் ரிசர்வ் பகுதியை அடைவதற்கு கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கடந்து குளிர்ந்த இரவுகளைத் தாங்கிகொண்டு செல்ல வேண்டும்.
பென்சில்வேனியாவில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது செர்ரி ஸ்பிரிங்ஸ் ஸ்டேட் பார்க். இந்த இடம், அதன் தனித்துவமான இருண்ட வான் பார்வைக்குப் பிரபலமானது. அங்கு பின்பற்றப்படும் கடுமையான லைட்டிங் விதிமுறைகள்தான் ஒளி மாசுபாட்டைத் தடுக்கின்றன. இது நட்சத்திரங்களைக் காண வருவோருக்கு ஒரு புகலிடமாக அமைகிறது. பார்வையாளர்கள் இரவு நேரத்தில், வானத்தை வெறும் கண்களாலோ அல்லது பூங்காவில் வழங்கப்படும் தொலைநோக்கிகள் மூலமாகவோ பார்க்கலாம். தொலைதூர விண்மீன் திரள்கள் மற்றும் நெபுலாக்களின்(Nebula) பிரமிக்க வைக்கும் படங்களைப் பிடிக்க வானியல் புகைப்படக் கலைஞர்கள் இங்கு அதிகமாக வருகை தருவர். இந்தப் பூங்கா சற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இங்கு வரும் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அவர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கேனரி தீவுகளில் உள்ள Roque de los Muchachos ஆய்வகம் பூமியின் இருண்ட இடமாக சமீபத்தில்தான் அடையாளம் காணப்பட்டது. உயரமான இடத்தில் அமைந்துள்ள இது, வானியல் ஆராய்ச்சிக்களுக்கான ஏற்ற அழகிய வான்வெளியைக்கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொலைதூர கண்காணிப்பு மையத்தை அடைவதற்கு மலைப்பாதைகளைக் கடக்க வேண்டும்.
ஆப்பிரிக்காவின் நமீபியாவில் அமைந்துள்ள நமிப்ராண்ட் நேச்சர் ரிசர்வ், அழகிய வனப்பகுதியின் பரந்த விரிவாக்கமாகும். அதன் தொலைதூர இடம் மற்றும் அங்கு கடுமையாக பின்பற்றப்படும் பாதுகாப்பு, இந்தப் பகுதியை பாதுகாக்கின்றன. பால்வெளியில் இருக்கும் ஓரியன்(Orion) மற்றும் ஸ்கார்பியஸ்(Scorpius) போன்ற விண்மீன்கள் பிரகாசமாக ஜொலிப்பதை இங்கு பார்வையாளர்கள் காணலாம். அங்குள்ள நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கே சிலர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார்கள்.
இருப்பினும், அரசு இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், அங்கு தங்குபவர்கள், பழைமையான தங்குமிடங்கள் மற்றும் குறைவான அடிப்படை வசதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.