

நம்மில் பலர், தம் வீடுகளில் சில வகை விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவதைக் காண்கிறோம். அவை பொழுதுபோக்கிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பிற உயிர்கள் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாகவும் வளர்ப்பதுண்டு. அவற்றுள் முதன்மையானது நாய் இனம் என்று கூறலாம். நாய்கள் இனத்தில், பல வகையான குணாதிசயங்கள் கொண்டவை உண்டு.
சில வகை நாய்கள் ஒரு நாளின் பெரும் பகுதியை தூக்கத்திலேயே கழிப்பதுண்டு. அவ்வாறான நாய்களில் ஐந்தைப் பற்றி இப்பதிவில் காணலாம். முழு வளர்ச்சியடைந்த இந்த 5 வகை நாய்களின் தூக்க நேரம், சராசரியாக ஒரு நாளில் 16 முதல் 18 மணியாக உள்ளது.
1. புல் டாக்ஸ் (Bull dogs): இங்கிலிஷ் மற்றும் பிரெஞ்ச் புல் டாக்ஸ் இரண்டுமே மாலை நேர தூக்கதில் அதிக விருப்பமுடையவை. அகலமான தலையுடன் குள்ளமான, அடங்கிய உருவம் கொண்ட புல் டாக்ஸ் அனைவராலும் விரும்பப்படுபவை. மற்ற நாய்களைப் போல் இல்லாமல் இவை விரைவிலேயே சோர்வடையும் தன்மையுடையவை. வேடிக்கை விளையாட்டுகளில் சிறிது நேரம் கழித்துவிட்டு, உடனடியாக தரையில் கால்களைப் பரத்தியபடி படுத்து, லேசான குறட்டை ஒலி எழுப்பியபடி நீண்ட நேரம் தூங்கிவிடும்.
இதன் உடல் சீக்கிரமாக உஷ்ணமடைந்து சக்தியிழந்து போவதே இதற்கான காரணமாகும். சிறிய நடைப்பயிற்சி, சிறிது நேர விளையாட்டு இவை மட்டுமே புல் டாக்கின் அதிகபட்ச செயல்பாடுகள் எனலாம். மற்ற நேரங்களில் கவுந்து படுத்து, உறங்கியபடி உடலில் சக்தியின் அளவை சேமித்துக் கொண்டிருக்கும்.
2. மஸ்டிஃப்ஸ் (Mastiffs): முழுமையாக வளர்ந்து விட்ட மஸ்டிஃப் இன நாய் ராட்சத வடிவம் கொண்டு, 55 முதல் 105 கிலோ வரை எடை உடையதாக இருக்கும். அதிகளவு எடை காரணமாகவே இதன் செயல்பாடுகள் மெதுவாகவும் குறைவாகவும் இருக்கும். இயற்கையாகவே இது அமைதியான, அன்பான, விழிப்புணர்வு கொண்ட விலங்கு. மெதுவாக வீட்டை ஒரு முறை சுற்றி வந்துவிட்டு, தன்னை வளர்ப்பவரின் அருகில் படுத்துக்கொண்டே மிச்ச நேரத்தைக் கழித்துவிடும். இதை சுறுசுறுப்பில்லாமல், தூக்கத்திலேயே அதிக நேரத்தை செலவிடச் செய்வதற்கான காரணம் இதன் எடை மட்டுமே எனலாம்.
3. கிரேகௌண்ட் (Greyhound): இந்த வகை நாய் இனம் 40 mph வேகத்தில் ஓடக்கூடிய திறமை கொண்டது. ஆனால், குறுகிய தூரத்தை விரைவாக கடந்தோடிவிட்டு வந்து அமைதியாக சோபாவில் படுத்துக்கொள்ளும். சுறுசுறுப்போடு நீண்ட தூரம் ஓடுவதெல்லாம் இதற்கு சாத்தியப்படாது. வேகமாக, எலி, கோழி போன்ற எதையாவது துரத்திச் சென்று பிடித்துவிட்டு வீட்டுக்குள் வந்துவிடும். இதனாலேயே இதை ‘கவுச் பொட்டட்டோ’ (Couch Potato) என்றும் அழைக்கின்றனர். ஒரு நாளில் ஒருமுறை வீட்டைச் சுற்றி வருவது அல்லது சிறிது தூரம் நடைப்பயிற்சி சென்று திரும்புவது என ஏதாவதொன்றைச் செய்துவிட்டு, அன்றைய சோலி முடிந்ததென்ற திருப்தியுடன் சோபா அல்லது படுக்கையை தேடிச் சென்று உறங்குவதிலேயே மிச்ச நாளை கழித்து விடும்.
4. செய்ன்ட் பெர்னார்ட் (St. Bernard): இதுவும் உருவத்தில் பெரிதான இனத்தைச் சேர்ந்த நாய் இனம். ஆரம்ப காலங்களில் பனி சூழ்ந்த பெரிய மலைப் பகுதியில் உள்ள கணவாய்கள் அருகே, அமைதியாக கூர்நோக்கும், சகிப்புத்தன்மையும் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்தன இவ்வகை நாய்கள். தற்காலத்தில், மூர்க்கத்தனமான செயல்பாடுகள் எதிலும் ஈடுபட வேண்டிய அவசியமின்றி, தொடர்ந்து குளிர்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றன. இவற்றின் உருவ அமைப்பே இவை தொடர் ஓய்வும் உறக்கமும் பெற்று வசதியாக வாழ்ந்து வருவதை உறுதிப்படுத்தும்.
5. பஸ்ஸெட் கௌண்ட்ஸ் (Basset Hounds): குட்டையான கால்களுடன் பார்வைக்கு இவை சிறியதாக தோன்றினாலும், இவற்றின் கனமான எலும்புகளின் காரணமாக எடை அளவு அதிகமாகவே உள்ள நாய்கள் இவை. இதனாலேயே இவை எந்த வகையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் விரைவிலேயே சோர்வடைந்து விடுகின்றன. வாசனையை முகர்ந்து எதையாவது கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும்பொழுது தவிர மற்ற நேரங்களிலெல்லாம், அமைதியாக வீட்டில் ஒரு ஓரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். ஒரு சிறிய நடைப்பயிற்சி, வசதியான படுக்கை இருந்தால் போதும், இங்கும் அங்கும் முகர்ந்து பார்த்துவிட்டு குறட்டை விட ஆரம்பித்து விடும்.
தூக்கத்தை விரும்பும் நாய்கள், வீட்டில் செல்லப்பிராணிகளாய் இருக்கும்போது, அவை வீட்டில் உள்ளவர்களுக்கு ஓர் அன்பான துணையாய் இருப்பதுடன் வீட்டில் அமைதி நிலவவும் உதவி புரியும். அவற்றைப் பார்க்கும்போது நாமும் பரபரப்பின்றி நம் வேலைகளை நிதானமாகச் செய்யலாமே என்று நினைக்கத் தோன்றும்.