

ஆசியாவின் பல பகுதிகளில் குயில் (Cuckoo) தனது முட்டைகளை காக்கையின் கூட்டில் இட்டுவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம். குயிலின் பழக்க வழக்கங்களைக் கவனித்து வரும் பலரின் கேள்வி, ‘குயில் ஏன் தன் கூட்டை தானே கட்டி, குஞ்சு பொரித்து வளர்ப்பதில்லை’ என்பதுதான். இதற்கான பதிலை இப்பதிவில் பார்க்கலாம்.
குயில் கூடு கட்டி தனக்கான குடும்பத்தை அமைத்துக் கொள்ளாததற்கான காரணம் அதற்கு தாய்மை உணர்ச்சி இல்லாததும் அக்கறை இல்லாததும்தான் என்று கூற முடியாது. குயில், தான் உயிர் வாழ்தலின் அடையாளம் குடும்பப் பொறுப்பில் இல்லை எனவும், தன் இனத்தை, பிறரை ஏமாற்றி எந்த அளவுக்கு பெருகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு, தந்திரமான செயல்களில் ஈடுபட்டு, காரியத்தை சாதித்துக் கொள்வதில்தான் உள்ளது என நினைப்பதும்தான் காரணம்.
இனப்பெருக்கக் காலங்களில் கஷ்டப்பட்டு குச்சிகளைப் பொறுக்கியெடுத்து வந்து, உடலை வறுத்தி கூடு கட்டி தனது குஞ்சுகளை வளர்ப்பதில் செலவிடும் சக்தியை சேமித்து, ஒரே இனப்பெருக்க காலத்தில் அதிகளவு முட்டைகளை, வேறு பறவைகள் கட்டும் கூடுகளில் இட்டுவிட்டால், மற்ற பறவைகளின் பராமரிப்பில் வளரும் தனது குஞ்சுகள் மூலம் தனது இனம் பல்கிப் பெருகும் என்ற எண்ணம்தான் குயிலை இம்மாதிரியான தந்திரச் செயல்களில் திறம்பட ஈடுபடச் செய்கிறது.
இச்செயல் நியாயமற்றதாகத் தோன்றினாலும், பல மில்லியன் ஆண்டுகளாக குறுக்கு வழியைப் பின்பற்றி வெற்றிகரமாக இனப்பெருக்கம் நடைபெறச் செய்து கொண்டிருப்பதும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
குயில் தற்செயலாகவோ அல்லது எப்போதோ ஒருமுறையோ இப்படிப் பிற பறவையை ஏமாற்றி தனது இனத்தைப் பெருக்கும் செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளும் பறவை இல்லை. மந்திர, தந்திர சாகசங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த, இயற்கையாகவே உருவாக்கப்பட்ட பறவை குயில் என்று ஆராய்ச்சி முடிவுகள் உறுதியாகக் கூறுகின்றன. சக்தியையும் நேரத்தையும் செலவழித்து ஒன்றிரண்டு குஞ்சுகளை வளர்த்து ஆளாக்குவதை விட, குறுக்கு வழியில் பல குஞ்சுகளை வளரச் செய்துவிடலாம் என்பதே பெண் குயிலின் எண்ணம்.
குயில் எப்போதும் காக்கை கூட்டைத் தேர்ந்தெடுத்து முட்டை இடுவதற்குக் காரணம் உள்ளது. காக்கைகள் கவனமாகவும், ஆக்ரோஷ குணம் கொண்டும் குஞ்சுகளை காப்பாற்றப் போராடும் தன்மையுடையவை. உணவிற்கு ஆவலாய்ப் பறக்கும் குஞ்சுகளுக்கு அதிக உணவு ஊட்டவும் தவறாது காக்கை. காக்கை கூடுகள் உறுதியானதாகவும் பெரிதாகவும் இருக்கும். சில வகைக் குயில்களின் முட்டைகள் அளவிலும் நிறத்திலும் காக்கை முட்டையை ஒத்திருக்கும். இது சுலபமாக காக்கையை ஏமாற்ற உதவும்.
சில நேரம் குயில், காக்கை முட்டையை கீழே தள்ளிவிட்டு, தனது முட்டைக்கு இடமேற்படுத்திக் கொள்ளவும் செய்யும். சில தினங்களுக்கு முன்பாகவே வெளிவந்துவிடும் குயில் குஞ்சு, காக்கை முட்டையை அல்லது காக்கை குஞ்சை கூட கீழே தள்ளி விடும். பிறகு காக்கை குஞ்சு போல் குரலெழுப்பி, காக்கை பெற்றோரிடமிருந்து அதிக உணவைப் பெற்றுத் தின்று வளரும்.
புத்திசாலித்தனம் நிறைந்த காக்கைகள் எவ்வாறு இப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதற்கும் காரணங்கள் உள்ளன. குயில் முட்டையை நிராகரிப்பதாக நினைத்து தன்னுடைய முட்டையை நிராகரித்து விடும் அபாயமும் இதில் இருப்பதால் அந்த வழிக்கு அவை செல்வதில்லை.
சில பகுதிகளில் வாழும் குயில்கள், தனது முட்டையை காக்கை நிராகரிப்பதை அறிந்தால், காக்கை கூட்டை பிரித்தெறியும் குணம் கொண்டவைகளாக இருப்பதும் உண்டு. எதற்கு வம்பு என்றெண்ணும் காக்கை, குக்கூ மாஃபியாக்களுக்கு பயந்து சமாதானமாகப் போய்விடுவதுண்டு. குயிலின் இந்த நடவடிக்கையை அலட்சியம் என்று கூற முடியாது. திறமை என்றே கூறலாம். இயற்கையின் துணையோடு நீண்ட காலமாக குயில்கள் குறுக்கு வழியில் குடும்பத்தை பெருக்கிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.