

இறைவன் படைப்பில் விதவிதமான நிறங்களும் உருவ அமைப்பும் கொண்ட உயிரினங்கள் பல உள்ளன. அவற்றில் நம்ப முடியாத அளவுக்கு வித்தியாசமான உடலமைப்பும் திறமையும் கொண்ட 5 உயிரினங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. எலக்ட்ரிக் ஈல்: இது தனது உடலிலிருந்து நூற்றுக்கணக்கான வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியேற்றும் திறன் கொண்டது. திடீரென வெளியாகும் மின்சாரத்தால் தாக்கப்படும் பிற உயிரினங்கள் அசைவின்றி நிற்கையில் அவற்றை இது உணவாக்கிக் கொள்ளும். மேலும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் இது மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்கிறது. மின்சாரத்தை உற்பத்தி பண்ணும் இதன் உடலுறுப்புகள் உயிருள்ள பேட்டரியாக செயல்புரிவது வியப்பளிக்கிறது. கலங்கிய நீரில் செல்லும்போது இதன் பார்வைத் திறன் குறையும். அப்போது, தன்னிடமுள்ள மின்சார சக்தியின் உதவியால் இரையை பிடிக்கவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் செய்கிறது ஈல்.
2. மிமிக் ஆக்டோபஸ்: இந்த வகை ஆக்டோபஸானது, கடலில் வாழும் மற்ற உயிரினங்களைப் போல், தனது கலரையும், உருவத்தையும், உடலசைவு மற்றும் குரல் உள்ளிட்ட அனைத்து நடத்தைகளையும் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை கொண்டது. எதிரிகளிடமிருந்து பயமுறுத்தல் வரும்போது, இது ஒரு சாதாரண மீன் போல உலா வரும் அல்லது விஷத் தன்மை கொண்ட லயன் ஃபிஷ் போன்று உருமாறி, தனது நடிப்புத் திறமையால் எதிரியை ஏமாற்றிவிடும்.
3. லீஃபி ஸீ டிராகன் (Leafy Sea Dragon): இதன் உருவ அமைப்பு நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும் கடற்பாசியை ஒத்திருக்கும். வெளியே நீண்டிருக்கும் இதன் உடற் பாகங்கள் இலை போல உருமாறி நீரின் ஓட்டத்தோடு மெதுவாக அசைந்து செல்லும். இதன் எதிரிகள் மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுவர். குறைந்த அளவு வேகமும் குறைந்த பலமும் கொண்ட லீஃபி ஸீ டிராகன் மிதக்கும் இலை போன்ற பிரமையை உண்டுபண்ணி, உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அதிசயம்.
4. ஸ்டார் நோஸ்ட் மோல் (Star nosed Mole): இந்த ஸ்டார் நோஸ்ட் மோலின் மூக்கில் தசைகளாலான 22 உணரிழைகள் உள்ளன. இவை 25,000க்கும் மேற்பட்ட புலனுணர்வு ஏற்பி (Sensory receptors)களை உள்ளடக்கியுள்ளன. இவற்றின் மூலம் இந்த மோல் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தன் இரையைக் கண்டுபிடித்துவிடும். இருண்ட நிலத்தடி சுரங்கப்பாதைகளில் வசித்து வரும் ஸ்டார் நோஸ்ட் மோல், உலக நடப்புகள் அனைத்தையும் உணர்வால் அறிந்துகொள்ளும் திறமை கொண்டுள்ளது இதை ஒரு மாயாஜாலம் என்றே கூறலாம்.
5. டார்டிகிரேடு (Tardigrade): நீர்க் கரடி (water bear) எனவும் அழைக்கப்படும் டார்டிகிரேடு ஓர் அழிக்க முடியாத நுண்ணுயிரி. அதிகபட்ச வெப்பம், உறையச் செய்யும் குளிர், நீரற்ற நிலை, வெப்பக் கதிர்வீச்சு, விண்வெளியின் வெற்றிடம் என்ற எந்தவித வானிலையிலும் சூழலிலும் உயிர் வாழக்கூடியது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகும்போது இவை நீள் உறக்க (Criptobiotic) நிலைக்குச் சென்று, மெட்டபாலிசம் போன்ற வாழ்வியல் செயல்பாடுகளையெல்லாம் நிறுத்தி வைத்துவிடும். நிலைமை சீரானதும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். உண்மையிலேயே இயற்கையின் உச்சபட்ச சிரமங்களை வென்று வாழக்கூடிய வினோதமான உயிரினம் என்று இதைக் கூறலாம்.