
மழை பெய்த உடன் அதனுடைய இனிமையான அனுபவத்தை அனுபவிக்க விடாமல் கொசுக்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடும். மழையின் காரணமாக தேங்கியிருக்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தி அல்லல்படுத்தும். இந்த கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வைப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும் வீட்டில் வளர்க்க வேண்டிய 5 மூலிகைச் செடிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. துளசி: பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கும் துளசி மருத்துவ குணம் கொண்டது. இந்த துளசி செடியில் இருந்து வரும் வாசனை கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. ஆகவே, துளசி செடியை வீட்டின் ஜன்னல் அருகிலோ அல்லது பால்கனியிலோ வைத்தால் அதனுடைய மணம் ஒரு கொசுவைக் கூட வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காது.
2. புதினா: சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா கொசுவை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது. புதினாவில் இருந்து வரும் கடுமையான வாசனையை கொசுக்களால் தாங்க முடியாது. ஆகவே, புதினா செடியை வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்தால் கொசுவை விரட்டி அடித்து நன்மையை ஏற்படுத்தி விடும்.
3. எலுமிச்சைப்புல்: ஆரோக்கியத்தின் துணைவனாக எலுமிச்சைப்புல் கருதப்படுகிறது. ஆகவே, இதனுடைய இலைகளை கிழித்து வீட்டை சுற்றி முழுவதும் பரப்பி வைத்தால் ஒரு கொசுவை கூட வீட்டிற்குள் அண்ட அனுமதிக்காது.
4. சாமந்திப்பூ: சாமந்திப்பூ நல்ல மணம் உடையது. இந்த மணம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. அதனால் சாமந்திப்பூ செடியை வீட்டின் பின்புறம் அல்லது பால்கனியில் வளர்த்து வந்தால் அதனுடைய வாசனை கொசுக்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் விரட்டியடிக்கும்.
5. சின்ட்ரோனெல்லா செடி: இயற்கையாகவே கொசுக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது சின்ட்ரோனெல்லா செடி. ஆகவே, மழைக்காலங்களில் வரும் அதிகமான கொசுக்களை கட்டுப்படுத்த வீட்டில் இந்த செடியை ஒரு மூலையில் வைத்திருந்தால் கொசுக்கள் ஒழிந்து விடும்.
மேற்கூறிய ஐந்து செடிகளையும் வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியம் ஏற்படுவதோடு, கொசு தொல்லையிலிருந்தும் விடுபட்டு நிம்மதியாக வசிக்க முடியும்.