
உலகம் முழுவதும் ஏராளமான விலங்குகள் உள்ளன. ஆனால், பிற நாடுகளில் இல்லாத ஐந்து அரிய வகை விலங்குகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. இவை இந்தியாவின் வளமான பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இவை மிக முக்கியமானவை. இவற்றின் தனித்துவம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆசிய சிங்கம்: குஜராத்தின் கிர் வனப்பகுதியில் உள்ள தேசிய பூங்காவிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஆசிய சிங்கங்கள் காணப்படுகின்றன. இவை ஆப்பிரிக்க சிங்கங்களிலிருந்து வேறுபட்ட கம்பீரமான மிருகங்களாகும். ஆப்பிரிக்க சிங்கங்களை விட உருவத்தில் சற்று சிறியவை. ஆண் சிங்கங்களுக்கு குட்டையான, அரிதான கருமையான மேனி இருக்கும். வயிற்றில் நீளமான தோல் மடிப்பு இருக்கும். இவற்றின் நிறம் மணல் நிறத்திலும், சிவப்பு, பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவை வறண்ட காடுகள், முட்கள் நிறைந்த வாழ்விடங்களில் வசிக்க விரும்புகின்றன. காட்டுப் பன்றிகள் போன்ற பெரிய குளம்புகள் உள்ள விலங்குகளையும் கால்நடைகளையும் இவை வேட்டையாடுகின்றன.
2. நீலகிரி வரையாடு (தஹ்ர்): நீலகிரி தஹ்ர் என்பது தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். இது ஒரு தடிமனான, நடுத்தர அளவிலான காட்டு ஆடு ஆகும். வலுவான உடலமைப்பைக் கொண்டுள்ளதால், அதன் கரடு முரடான மலை வாழ்விடத்திற்கு மிகவும் பொருத்தமானது. வேறு சில ஆடு இனங்களைப் போலல்லாமல், நீலகிரி ஆடுகளுக்கு தாடி இல்லை. இவை குட்டையான முட்கள் நிறைந்த ரோமத்தையும், தட்டையான வளைந்த கொம்புகளையும் கொண்டவை. மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான திறந்தவெளி புல்வெளிகளில் இவை காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் (3,900 முதல் 8,500 அடிகள்) வரையிலான உயரங்களில் இவை வாழ்கின்றன. இவை குறைந்த உயரத்தில் உள்ள அடர்ந்த காடுகளைத் தவிர்க்கின்றன.
3. சிங்கவால் குரங்கு: சிங்கவால் குரங்குகள் தென்மேற்கு இந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் வெப்ப மண்டல மழைக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை சமூக விலங்குகள். 4 முதல் 30 வரை எண்ணிக்கையிலான ஒரு குழுவாக இவை வாழ்கின்றன. கருமை நிற மேனியில், முகத்தைச் சுற்றியுள்ள ரோமங்கள் வெள்ளி நிறத்தில் இருக்கும். இவற்றின் வால் நீளமாக, மெல்லியதாக, முடிவில் ஒரு கருப்பு நிற கட்டி போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. சிங்கத்தின் வாலை ஒத்திருப்பதால் இவை சிங்கவால் குரங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. பழங்கள், இலைகள், பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்புள்ள உயிரினங்களை இவை உண்ணுகின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை காடழிப்பு காரணமாக குறைந்து வருகிறது என்பது கவலைக்குரிய விஷயம்.
4. சங்காய் மான்: இவை மணிப்பூரின் மிதக்கும் தேசிய பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன. நீண்ட மற்றும் தனித்துவமான கொம்புகள் இவற்றின் புருவத்திலிருந்து தோன்றுவது போல காணப்படுவதால் இவை, ‘புருவ கொம்பு மான்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோல் கரடு முரடாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். கோடைக்காலத்தில் வெயிலில் மின்னுவது போல இருக்கும். கால்கள் மெலிதாகவும் குளம்புகள் விரிந்தும், கடினமாகவும் இருப்பதால் மிதக்கும் புல்வெளியில் நடப்பதற்கு வசதியாக இருக்கின்றன. அதனால்தான் இதற்கு, ‘நடனமாடும் மான்’ என்ற பெயர் வந்தது.
5. குள்ள பன்றிகள்: இவை உலகின் மிகச் சிறிய காட்டுப் பன்றிகளாகும். அடர் பழுப்பு, கருப்பு நிற தோலையும், குறுகிய வாலையும், கூர்மையான மூக்கையும் கொண்டுள்ளன. அசாமின் டெராய் புல்வெளிகளில், மனாஸ் தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவை வாழ்கின்றன. இவை கூச்ச சுபாவம் உள்ள ரகசிய விலங்குகள். சொந்தப் புல் கூடுகளை உருவாக்கி அதை உண்கின்றன. இவற்றின் உணவில் வேர்கள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகள் உள்ளன. மனித ஆக்கிரமிப்பு, விவசாய விரிவாக்கம், புல்வெளி மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இவை அழிந்து வருகின்றன.