
உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பெருங்கேடு விளைவிப்பதில் முன்னணியில் இடம் பிடிப்பது பிளாஸ்டிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கும் தான்!
உலகெங்கும் வருடத்திற்கு 43 கோடி டன் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்தவுடன் அதை தூக்கிப் போட்டு விடுகிறோம். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்திலும் நீரிலும் விழுந்து சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்துவதோடு மனித உடலிலும் புகுந்து ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கின்றன. இப்போது அறிவியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டும் மிகப் பெரிய அபாயம் மைக்ரோ பிளாஸ்டிக் அபாயம் தான்.
மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பெரிய பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து கிடைக்கும் சிறு துகள்களாகும். இவை ஒரு நானோமீட்டரிலிருந்து 5 மிலிமீட்டர் வரை இருக்கும். ஒரு நானோமீட்டர் என்பது மனித தலைமுடியின் அகலமாகும். இந்தச் சிறு துகள்கள் அங்கிங்கெனாதபடி இப்போது எங்கும் பரவி வருகின்றன.
சிகரெட் ஃபில்டர்கள்
செல்லுலொஸ் அசிடேட் ஃபைபர் எனப்படும் மைக்ரோ பிளாஸ்டிக்கானது சிகரெட் ஃபில்டர்களில் உள்ளது. ஆறு டிரில்லியன் சிகரட்டுகள் நூறு கோடி பேர்களால் வருடா வருடம் புகைக்கப்படுகின்றன (ஒரு டிரில்லியன் என்றால் ஒன்றுக்குப் பின் 12 பூஜ்யங்களைப் போட்டு வரும் எண்).
இந்த ஃபைபர்கள் உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி உள்ளன. கடற்கரையில் அதிகமான மனிதர்கள் சிகரட்டைப் புகைப்பதால் சிகரட்டிலிருந்து வெளிவரும் மைக்ரோ பிளாஸ்டிக்கினால் கடல் நீரும் மாசுபட்டு கடல் வாழ் உயிரினங்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படுகிறது.
துணிகளில் மைக்ரோபிளாஸ்டிக்
நெசவுத் தொழிலில் தயாரிக்கப்படும் துணிகளில் பாலிஸ்டர், அக்ரிலிக், நைலான் முதலியன சுமார் 60 சதவிகிதம் உள்ளது. ஆடைகள் அணியும் போதும் துணிகளைத் தோய்க்கும் போதும் ஏற்படும் உராய்வினால் பிளாஸ்டிக்கானது மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களாக மாறுகிறது. இவற்றை மைகோஃபைபர் என்கிறோம். ஐக்கிய நாடுகளின் சுற்றுப்புறச் சூழல் திட்டத்தின் 2020ம் ஆண்டு அறிக்கையின் படி கடல்களில் ஏற்படும் பெரும் நஷ்டத்திற்கு ஒன்பது சதவிகிதம் இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்களே காரணமாகும் எனத் தெரிகிறது.
இந்த மாசைக் குறைக்க நிபுணர்கள் கூறும் ஒரு வழி துணிகளை முடிந்தவரை திருப்பித் திருப்பி அணியுங்கள்; தோய்த்து உலர்த்துவதைக் குறையுங்கள் என்பதாகும்.
புதிய துணிகள் வாங்கும் போது இது சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காததா என்று கேட்டு வாங்குதல் வேண்டும்.
ஆரோக்கியத்திற்கு ஆபத்து
மனிதன் சுவாசிக்கும் போது சிறு மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உடலில் புகுகின்றன. வருடத்திற்கு ஒவ்வொருவரும் 39000 முதல் 52000 துகள்கள் வரை சுவாசத்தின் மூலம் உடலில் கலக்க விடுகிறோம்.
நம் ஒவ்வொருவரின் உடலிலும் எண்ணற்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இதனால் டயபடீஸ் டைப் 2 வியாதி உள்ளிட்ட பல வியாதிகளால் பீடிக்கப்படுகிறோம்.
ஆகவே இதைத் தவிர்க்க ஒரே வழி : பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம் என்ற மந்திரச் சொற்களை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதேயாகும். இதை மற்றவர்களுக்கும் கூறி அவர்களையும் பிளாஸ்டிக்கிற்கு ‘நோ’ என்று சொல்ல வைக்க வேண்டும். இதற்கான பிள்ளையார் சுழி ஆரம்பம் வீட்டிலிருந்தே துணிப்பைகளைக் கடைக்குக் கொண்டு சென்று தேவையானதை அதிலே வைத்துக் கொண்டு வருவது தான்!