

தமிழில், 'அணில் கரடி' என்று அழைக்கப்படும் ரக்கூன் (Raccoon) என்ற விலங்கு வட அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சாம்பல் அல்லது பழுப்பு நிற முடியுடையது. இதன் கண்களைச் சுற்றி முகமூடி போன்ற கருப்புத் திட்டுகள் மற்றும் வால் பகுதியில் கருப்பு வளையங்கள் போன்ற வடிவம் கொண்டது. இரவில் நடமாடும் குணம் கொண்ட ரக்கூன் எல்லா வகையான உணவுகளையும் உட்கொள்ளும். வன விலங்குகளில், ரக்கூன் போன்ற முக அமைப்பு, வளையங்கள் கோர்த்தது போன்ற வடிவம் கொண்ட வால், குறும்புத் தனமும், இரவில் நடமாடும் பழக்கமும் கொண்ட வேறு ஐந்து வகை விலங்குகள் குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1. கோட்டிமுண்டி (Coatimundi): தென்மேற்கு அமெரிக்கப் பகுதிகளில் இருந்து தென் அமெரிக்கா வரை கோட்டிமுண்டிகளைக் காண முடியும். பழுப்பு நிற ரோமம், மேல் நோக்கி வளைந்த நீண்ட மூக்கு மற்றும் வால் பகுதியில் வளையங்கள் போன்ற அமைப்புடையது கோட்டிமுண்டி. பெரும்பாலும் மரத்தின் மீதே இது நேரத்தைக் கழிக்கும் விலங்கு. நெகிழும் தன்மை கொண்ட இதன் மூக்கினால் மரத்தில் உள்ள பழங்கள், சிறு சிறு பூச்சிகளைப் பிடித்து உணவாக்கிக் கொள்ளும்.
2. ஜப்பானிய ரக்கூன் நாய் (Japanese Raccoon Dog): புஸு புஸுவென்று அடர்த்தியான உரோமம், முகமூடி அணிந்தது போன்ற முக அமைப்பு கொண்டது. இரவு நேரத்தில் நடமாடும். ரக்கூன் போலவே அனைத்துண்ணி (omnivorous) விலங்கான ஜப்பானிய ரக்கூன் நாய், தனுக்கி (Tanuki) எனவும் அழைக்கப்படுகிறது.
3. கிங்கஜோ (Kinkajou): தேன் நிற உரோமம், வளையங்கள் போன்ற வடிவமைப்புடன் மற்ற பொருட்களைப் பற்றிக்கொள்ளும் திறனும் கொண்ட வால், குள்ள வடிவம் கொண்ட கிங்கஜோக்கள், இரவு நேரத்தில் மரங்களில் ஏறி சிறு சிறு உயிரினங்களை வேட்டையாடி உணவாக்கிக்கொள்ளும் குணமுடையவை.
4. யூரோப்பியன் பேட்ஜெர் (European Badger): கருப்பு நிற முகமூடி அணிந்தது போன்ற முகம், ரக்கூன் போன்ற கனத்த உடலமைப்பு கொண்டு காடுகளில் சுற்றித் திரியும் மற்றொரு விலங்கு யூரோப்பியன் பேட்ஜெர். ஐரோப்பாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த விலங்கை ஆசியாவின் ஒருசில பகுதிகளிலும் காண முடியும். இது தனது வலுவான நகங்களைக் கொண்டு பூமிக்கடியில் நீண்ட வளைகளைத் தோண்டி மண் புழு, எலி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும்.
5. உல்வேரின் (Wolverine): முகமூடி அணிந்தது போன்ற முகம், கனத்த, பயங்கரமான உடலமைப்பு கொண்டு ரக்கூன் போலவே தோற்றம் கொண்ட மிருகம். தன்னை விட சிறிய மற்றும் பெரிய அளவிலான மிருகங்களையும் அடித்துத் தின்றுவிடும் பலம் கொண்டது. அலாஸ்கா, கனடா மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசித்து வரும் விலங்கு உல்வேரின்.