விலங்குகளை கல்லாக மாற்றும் அதிசய நேட்ரான் ஏரி!

Miracle Lake
Natron Lake
Published on

கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் (Tanzania) உள்ள நேட்ரான் ஏரி (Natron Lake) விலங்குகளை கல்லாக மாற்றுவதாகக் கூறப்படுகிறது. இது மந்திரத்தால் அல்ல. மாறாக, ஏரியின் நீரில் உள்ள அதிக காரத்தன்மை மற்றும் சோடியம் கார்பனேட் உப்பு காரணமாக ஏற்படுகிறது. இந்த உப்புத்தன்மை ஏரியில் விழும் விலங்குகளின் உடல்களைக் கல்லாக மாற்றுகிறது; அதிலும் குறிப்பாக பறவைகளை மாற்றுகிறது. இந்த ஏரியில் அதிக அளவு சோடியம் கார்பனேட் உப்பு உள்ளதால் இது விலங்குகளின் உடலில் படிந்து அவற்றை மெதுவாக கல்லாக மாற்றுகிறது. அத்துடன் இந்த ஏரியின் நீர் அதிக காரத்தன்மை கொண்டதால் விலங்குகளின் உடலை விரைவாக பழுதடையச் செய்கிறது.

இந்த நேட்ரான் ஏரி கென்ய எல்லைக்கு அருகில், தான்சானியாவின் அருஷா பகுதியில் அமைந்துள்ளது. இது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கின் கிழக்கு கிளையிலும், ஒரு செயலில் உள்ள எரிமலையான ஓல் டொயின்யோ லெங்காய் அடிவாரத்திலும் அமைந்துள்ளது. நேட்ரான் என்பது உலர்ந்த ஏரிப் படுகைகளில் காணப்படும் ஒரு உப்பு.

இதையும் படியுங்கள்:
ஆப்பிரிக்காவின் பிளவு: ஒரு கண்டத்தின் பிரிவும், புதிய கடலின் உருவாக்கமும்!
Miracle Lake

எனவே, ஏரியின் நீரில் மிகுதியாகக் காணப்படும் கனிமத்திலிருந்து நேட்ரான் என்னும் பெயர் ஏரிக்கு வந்தது. இந்த ஏரி தோராயமாக 58 சதுர மைல்கள் (150 சதுர கிலோ மீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 10 அடிக்கும் (3 மீட்டர்) குறைவான ஆழம் கொண்டது.

நேட்ரான் ஏரியின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் சிவப்பு நிறம். இதன் நிறத்திற்கு முதன்மையான காரணம் அதன் தீவிர காரத்தன்மையாகும். மிகவும் பயங்கரமான ஏரி அல்லது தான்சானியாவின் கொடிய சிவப்பு ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரியில் விழும் பறவைகள், விலங்குகள் இறக்கும்பொழுது அவற்றின் உடல்களில் உள்ள ஈரத்தன்மை, கொழுப்பு உறிஞ்சப்பட்டு விரைவாக உலர்கிறது. இதில் கால்சியம் படிவதால் கடினமான எச்சங்களாக மாறுகின்றன. இதனால் இவை கல் சிலைகள் போல் காட்சி தருகின்றன.

Natron Lake with Flamingo bird
Natron Lake with Flamingo bird

இந்த ஏரி கருஞ்சிவப்பு - சிவப்பு தோற்றத்தில் விசித்திரமாகக் காணப்படுவதால் கொடிய சிவப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. இதனைச் சுற்றியுள்ள எரிமலை மண்ணிலிருந்து ஏரிக்குள் கசியும் தாதுக்கள், பெரும்பாலும் சோடியம் கார்பனேட் ஆகியவற்றின் அதிக செறிவு காரணமாக இந்த தோற்றம் ஏற்படுகிறது. நேட்ரான் ஏரியின் கடுமையான வேதியியல் கலவை காரணமாக பிற விலங்குகள், பறவைகள் கடுமையான பாதிப்பை கொண்டிருந்தாலும், இங்கு உயிர் வாழும் உயிரினங்களான எக்ஸ்ட்ரீமோஃபைல்களின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒரே செடியில் மேலே தக்காளி, கீழே உருளைக்கிழங்கு: இதென்ன அதிசயம்?
Miracle Lake

மிகவும் பிரபலமான உயிரினங்களில் ஒன்றான லெஸ்ஸர் ஃபிளமிங்கோ எனும் இந்த குறிப்பிடத்தக்க பறவைகள் ஏரியின் கார சகிப்புத்தன்மை கொண்ட நீல - பச்சை ஆல்கா மற்றும் சயனோ பாக்டீரியாவை உண்கின்றன, அவை தீவிர pH  நிலைகளில் செழித்து வளர்கின்றன. இந்த பிளமிங்கோக்கள் அவற்றின் உணவில் இருந்து உறிஞ்சப்படும் அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவும் சிறப்பு உப்பு சுரப்பிகளை உருவாக்குகின்றன.

இந்த நேட்ரான் ஏரி சிறிய ஃபிளமிங்கோக்களின் முதன்மை இனப்பெருக்கத் தளமாக விளங்குகிறது. இந்த ஏரியின் நீரின் தன்மை வேட்டையாடுபவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. இந்த இடம் ஃபிளமிங்கோ கூடுகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமைகிறது. உப்பு நீரில் செழித்து வளரும் பாசிகள் இந்த பறவைகளுக்கு தேவையான உணவு ஆதாரத்தை வழங்குகின்றன. ஃபிளமிங்கோக்கள் இந்த சூழலில் உயிர் வாழ்வதற்கு பொருத்தமாக அவற்றின் கால்களில் கடினமான தோல் மற்றும் செதில்கள் உள்ளன. அவை தீக்காயங்களை தடுக்கின்றன. மேலும், அவற்றின் தலையில் சுரப்பிகள் உள்ளன. அவை தண்ணீரிலிருந்து உப்பை அகற்றி, அவற்றின் மூக்கு குழியிலிருந்து அவற்றை வெளியேற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் தரும் வைக்கோல் வியாபாரம்!
Miracle Lake

இந்த ஏரியின் நீர் காஸ்டிக் தன்மை கொண்டது. இதன் அதிக காரத்தன்மை காரணமாக மனித சருமம் மற்றும் கண்களில் தீக்காயங்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அத்துடன் நேட்ரான் ஏரி மிக அதிக வெப்ப நிலைக்கு ஆளாகிறது. அதன் நீர் வெப்பநிலை 100 டிகிரி F (38 டிகிரி C)க்கு மேல் உயரக்கூடும் என்பதால் இந்த ஏரி ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

நேட்ரான் ஏரியை பார்வையிட சிறந்த நேரம்: ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான குளிரான மாதங்கள் நேட்ரான் ஏரியை பார்வையிட சிறந்த நேரமாகும். இருப்பினும், ஃபிளமிங்கோக்களை பார்க்க ஆர்வமுள்ளவர்கள் அதன் இனப்பெருக்க காலத்தில் தங்கள் பயணத்தை திட்டமிடலாம். இது பொதுவாக செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நிகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com