உரமிடுவதில் 5 வகைகளா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Fertilizer
Fertilizer
Published on

பயிர்களுக்கு எப்போது தண்ணீரை விட வேண்டும்; எப்போது உரத்தை இட வேண்டும் என்று விவசாயிகளுக்குத் தெரியும். ஒவ்வொரு பயிருக்கும் உரமிடுதலின் நேரமும், அளவும் மாறுபடும். அவ்வகையில் உரமிடுதலில் இருக்கும் 5 வகைகளை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

விவசாயிகள் பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த உரங்களைப் பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு தண்ணீர் விடுவது என்றாலும் சரி; உரமிடுவது என்றாலும் சரி, தகுந்த நேரத்தில் அளவாக இட வேண்டும். நேரம் தவறினால் அது பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்து விடும். விதைப்புக்கான பயிர்களை தேர்வு செய்யும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியமாகும். இது உரமிடுதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் விவசாயிகள் பலரும் மண் பரிசோதனை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால் இவர்கள் வேளாண் துறையின் ஆலோசனைப்படி பொதுவான உரங்களை இடுவது நல்லது. உரங்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 5 விதமான உர மேலாண்மைகளைக் கையாள்வது மிகவும் அவசியமாகும்.

1. அடியுரமிடுதல்:

எந்தப் பயிரை விவசாயிகள் விளைவித்தாலும் மண்ணில் அடியுரம் இடுவது மிகவும் முக்கியமானது. இவை வேர்களின் வளர்ச்சியை வேகப்படுத்த உதவும். இதன்படி பரிந்துரைக்கப்பட்ட அளவில் மணிச்சத்தை முழுமையாகவும், தழைச்சத்தில் பாதியளவும் இட வேண்டும். தேவை ஏற்படின் சாம்பல் சத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடலாம். பயிர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டத்தை மண்ணில் இருந்து எடுத்துக் கொண்டு வேகமாக வளரும். இதனால் தக்க சமயத்தில் பயிர்கள் அறுவடைக்கு வந்து விடும்.

2. விதைக்கு அருகில் உரமிடுதல்:

விதைக்கு அருகிலோ அல்லது செடிகளின் அருகிலோ உரத்தை இடுவதன் மூலம், உரங்கள் வீணாவது தடுக்கப்படும். மேலும் களைகள் மட்டுப்படும்‌. சொட்டு நீர்ப் பாசனத்தின் வழியாகவும் உரத்தை இடலாம். இதனால் பயிர்கள் நன்றாக வளர்வது மட்டுமின்றி, உர உபயோகிப்புத் திறன்‌ விவசாயிகளிடத்தில் மேம்படும்.

3. மேல் உரமிடுதல்:

நெல் உள்ளிட்ட தானியப் பயிர்களில் 25 மற்றும் 45வது நாளில் மேல் உரமிடுவது நல்லது. பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து அளவில் ஒரு பாகத்தை அடியுரமாக இட்ட பின், இரண்டாம் பாகத்தை 25வது நாளிலும், மூன்றாம் பாகத்தை 45வது நாளிலும் இட வேண்டும். இப்படி தழைச்சத்தைப் பிரித்து இடுவதன் மூலம் பயிர்களில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் குறையும். பயிர்களுக்கு தழைச்சத்து முழுமையாக கிடைத்திட 1:4:5 என்ற அளவில் ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் யூரியாவை கலந்து இட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளே! DAP உரத்திற்கு மாற்று உரம் எது தெரியுமா!
Fertilizer

4. இலை வழித் தெளிப்பு:

தோட்டக்கலைப் பயிர்களுக்கு அதன் வளர்ச்சிக்கு ஏற்ப இலை வழியாக உரமிடுவதால், சுற்றுச்சூழல் மேம்படும். இந்த உரம் மண்ணைத் தொடும் வாய்ப்புகள் குறைவு என்பதால், மண் வளம் பாதுகாக்கப்படும். மேலும் பயிர்களின் தேவைக்கேற்ப உரமிடுவதால், உரச்செலவைக் குறைக்கலாம்.

5. இலை வண்ணத்திற்கேற்ப உரமிடுதல்:

இலை வண்ண அட்டையில் பயிர்களின் ஒவ்வொரு நிறத்திற்கும் எந்தெந்த உரங்களை இட வேண்டும் என்ற குறிப்பு இருக்கும். பயிர்த் தோகையின் வண்ணத்தை இந்த அட்டையுடன் ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்ற உரத்தை இடுவதால் வீண் விரயம் தவிர்க்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com