விவசாயிகளே! DAP உரத்திற்கு மாற்று உரம் எது தெரியுமா!

DAP fertilizer
DAP fertilizer
Published on

பயிர் வளர்ச்சியை ஊக்கவித்து மகசூலை அதிகரிக்க உதவும் டிஏபி உரங்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் டிஏபி உரத்திற்கு மாற்று உரம் எது என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

விவசாயம் செழித்து வளர தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு உரங்களும் முக்கியம். உரத்தின் தன்மையைப் பொறுத்து தான் மகசூலின் அளவு இருக்கும். முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட இயற்கை உரங்கள், இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டன. முற்றிலும் செயற்கை விவசாயத்தில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு டை அமோனியம் பாஸ்பேட் எனும் டிஏபி உரம் தான் தற்போது பிரதான உரமாகப் பயன்பட்டு வருகிறது. இதன் விலை பன்னாட்டுச் சந்தையில் உயரும் போது, அது விவசாயிகளை வெகுவாக பாதிக்கிறது. சில விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்த முன் வந்தாலும், மகசூல் குறைந்து விடுமோ என்ற பயத்தில் செயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக செயற்கை உரங்களைப் பயன்படுத்தியதில் நிலத்தின் தன்மை மாறியிருக்கக் கூடும். ஆகையால் இயற்கை உரத்தின் தன்மையை ஏற்க நிலத்திற்கு சிறிது காலம் தேவைப்படும். இடைவிடாது இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வந்தால் தான் நிலத்தில் நல்மாற்றங்கள் ஏற்பட்டு, மகசூல் கணிசமாக உயரும். உரங்களின் விலையேற்றத்தால் செயற்கை உரங்களை நம்பியிருக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அரசு தரப்பில் உர இருப்பு இருந்தாலும், அது அனைத்து விவசாயிகளுக்கும் போதுமானதாக இல்லை.

விலை உயர்ந்து வரும் டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களைப் பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரைக்கின்றனர். அதிலும் தற்போது பருவமழை காலம் என்பதால் அதிக அளவு விவசாயம் நடைபெறும் இந்நேரத்தில், உரத்தின் விலையேற்றம் எவ்வகையிலும் விவசாயிகளை பாதிக்காமல் இருக்க மாற்று உரங்களை விவசாயிகள் கையாள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
செடிகளின் வளர்ச்சிக்கு உதவும் வாழைப்பழத் தோல் உரம்!
DAP fertilizer

டிஏபி உரத்தில் இருக்கும் சத்துகளுக்கு இணையான சத்துகளையும், கூடுதலாக சல்பர், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துகளையும் கொண்டுள்ள காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை வாங்கி விவசாயிகள் பயன்படுத்தலாம். எண்ணெய் வித்துகளில் சூப்பர் பாஸ்பேட் உரங்களைப் பயன்படுத்துவதால், அறுவடையின் போது மகசூல் அதிகரிப்பதோடு எண்ணெய் அளவும் உயரும்.

விவசாய மண்ணில் டிஏபி உரங்கள் உப்புத் தன்மையை அதிகமாக ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சூப்பர் பாஸ்பேட் உரங்கள், டிஏபி உரங்களை விடவும் குறைவாகத் தான் உப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை விடவும் டிஏபி உரங்களின் விலை இருமடங்கு அதிகம் என்பதால், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் விவசாயிகளுக்கு நல்ல தேர்வாக இருக்கும்‌.

தற்போதைய விலை நிலவரம்:

50 கிலோ டிஏபி உரத்தின் விலை - ரூ.1,350

50 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தின் விலை - ரூ.610

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com