
திருச்சியில் 75 ஏக்கரில் ஒருங்கிணைந்த வன உயிரியல் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்.
திருச்சியில் முக்கிய சுற்றுலா தலங்களாக கருதப்படுவது ஆன்மீக தலங்களே. அதே சமயம் பொழுதுபோக்கு என்று வனத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, பச்சைமலை போன்ற சில இடங்களே உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் வனத்துறை திருச்சியில் ஒருங்கிணைந்த வன உயிரியல் பூங்காவை அமைக்க திட்டமிட்டு இருக்கிறது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள சிறுகனூர், எம் ஆர் பாளையம் பகுதியில் யானைகள் காப்பகம் மற்றும் குரங்கு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு 75 ஏக்கர் பரப்பளவில் வன உயிரியல் பூங்கா அமைக்க தமிழ்நாடு வனத்துறைக்கு மத்திய வன பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.
இதன் மூலம் 75 ஏக்கர் பரப்பளவில் வன உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டப் பணிக்காக 60 கோடி ரூபாய் செலவில் 2.40 ஏக்கர் பரப்பளவில் மான்களுக்கு என்று தனி வனப்பகுதி அமைக்கப்பட உள்ளது. மேலும் இவற்றின் பாதுகாப்பிற்காக சுற்றுப்புற பகுதி முழுக்க ஆழமான அகழிகள், இரும்பு வேலிகள், செயற்கை மலைகள், நீர் ஊற்றுகள், நீர் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாமல் நரி, முள்ளம்பன்றி, ஆமை, கரடி, காட்டுநாய், புள்ளிமான், பாம்பு வகைகள், ஆந்தை, காட்டு பூனை போன்ற 24 வகையான உயிரினங்களுக்கான நீண்ட வனப் பகுதியாக இது அமைய உள்ளது.
மேலும் பூங்கா அலுவலகம், நுழைவு வாயில், கடைகள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற உற்கட்டமைப்பு பணிகளும் 7 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வன உயிரியல் பூங்கா திருச்சி சுற்றுலா தலமாக மாறும் என்றும், ஓரிரு ஆண்டு காலங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.