

மனிதர்களின் கண்களுக்கு பகல் நேரத்தில் நல்ல பார்வைத் திறனுண்டு. ஆனால், சில விலங்குகளும் பறவைகளும் மனிதர்களை விட அற்புதமான பார்வை திறனைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பதிவில் சிறந்த கண் பார்வைத் திறன் கொண்ட 8 விலங்குகளைப் பற்றி பார்ப்போம்.
1. கழுகு: துல்லியமான பார்வைக்கு உதாரணமாக விளங்கும் கழுகின் காட்சித் திறன்கள் வியக்கத்தக்கவை. மனிதர்களை விட நான்கு முதல் ஐந்து மடங்கு சிறந்த பார்வைக் கூர்மை இவற்றுக்கு உண்டு. மூன்று கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்தும் தனது இரைகளை இவற்றால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.
2. இறால்: இறால்களுக்கு சிக்கலான கண்கள் உண்டு. 16 வகையான ஒளியை கண்டறியும் செல்கள் இறால்களுக்கு உண்டு. மனிதர்களுக்குத் தெரியாத பரந்த அளவிலான வண்ணங்களையும் இவற்றால் உணர முடியும். அவற்றின் கண்கள் சுவாதீனமாக நகரும் தன்மையுடையவை. நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வண்ணங்களை இவற்றால் கண்டறிய முடியும்.
3. பச்சோந்திகள்: இவற்றால் தங்களது உடலின் நிறத்தை மாற்ற முடிவதோடு இவற்றின் கண்களும் உலகை நம்ப முடியாத விதத்தில் பார்க்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பார்க்க முடியும். தனது தலையை அசைக்காமல் முழுமையான 360 டிகிரி காட்சியை இவற்றால் காண முடியும். கூர்மையான பார்வையுடன் வேட்டையாடும் பறவைகளைப் போல் அதிகமாக இல்லாவிட்டாலும் அவற்றின் தனித்துவமான கண் அமைப்பு பூச்சிகளை வேட்டையாட உதவுகிறது. இவற்றின் சுழலும் கண் அமைப்பு துல்லியமான கவனத்துடன் பார்க்க அனுமதிக்கிறது.
4. ஆந்தை: இரவு நேர வேட்டைக்காரர்கள் என அழைக்கப்படும் ஆந்தைகளின் பெரிய கண்களால் குறைந்த வெளிச்சத்தில் கூட நன்றாகப் பார்க்க முடியும். அவற்றின் பெரிய கண்கள் குழாய் வடிவில் இருக்கும். இருண்ட சூழலில் கூட நன்றாகப் பார்க்கக்கூடிய செல் அமைப்பை கண்களில் பெற்றுள்ளன. மனிதர்களை விட 35 முதல் 100 மடங்கு சிறப்பாக இவற்றால் பார்க்க முடியும். இவற்றின் பைனாகுலர் பார்வை இரவு நேரத்தில் தங்களது இரையை திறமையாக வேட்டையாட உதவுகின்றன.
5. தட்டாம்பூச்சி: தட்டாம்பூச்சிகள் சுமார் 30,000 முகங்களைக் கொண்ட மிகப்பெரிய கூட்டுக் கண்களைக் கொண்டுள்ளன. அவை கிட்டத்தட்ட 360° பார்வையை வழங்குகின்றன. வேகமாக நகரும் இரையை துல்லியமாகக் கண்காணிப்பதில் நிபுணர்களாக விளங்குகின்றன. திறமையாக வான் வழியே வேட்டையாடுகின்றன. அவற்றின் கண்கள் வான் வழியே இயங்கும் ஒரு ஜெட் விமானத்தைப் போல வேட்டையாடுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.
6. ஆடுகள்: இவற்றின் செவ்வக வடிவக் கண்கள் சுமார் 320 முதல் 340 டிகிரி வரை நம்ப முடியாத பரந்த காட்சியை அளிக்கின்றன. கண்கள் மேய்ச்சல் நிலம், செங்குத்தான மலைகளில் ஏறும்போதும், கடினமான நிலப்பரப்பில் செல்லும் போதும் தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து ஸ்கேன் செய்து கொள்ள அனுமதிக்கிறது.
7. பூனை: இரவு நேர பார்வைக்கு வீட்டுப் பூனையின் கண்கள் பெயர் பெற்றவை. இவற்றின் கண்களில் அதிக எண்ணிக்கையிலான செல்கள் உள்ளன. இவற்றால் மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட பார்க்க முடியும். இரவு நேர வேட்டைக்கு மிக முக்கியமான இவற்றின் கண்கள் ஒரு பிரதிபலிப்பு அடுக்கைக் கொண்டுள்ளன. விழித்திரை வழியாக ஒளியைத் திருப்பி இருட்டில் பார்க்கும் திறனை மேம்படுத்துகிறது. இவற்றின் கண்கள் இருட்டில் ஒளிர்வதற்குக் காரணம் இதுதான். குறைந்த வெளிச்சத்தில் மனிதர்களை விட ஆறு முதல் எட்டு மடங்கு சிறப்பாக இவற்றால் பார்க்க முடியும். அதனால் இவை இரவில் நன்றாக வேட்டையாடுகின்றன.
8. டார்சியஸ் (Tarsiers): தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த சிறிய விலங்குகளின் மிகப்பெரிய உடலோடு ஒப்பிடும்போது மிகப்பெரிய கண்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கண்ணும் அதன் மூளையைப் போலவே பெரியது. சிறந்த இரவு பார்வை உள்ளதால் மங்கலான வெளிச்சத்தில் கூட கிளையிலிருந்து கிளைக்கு துல்லியமாகத் தாவிச் செல்கின்றன.