
உயிர் வாழ்வதற்குத் தேவை உடல் பலமும் புத்திசாலித்தனமும் மட்டுமல்ல; சில நேரங்களில் சிறந்த நடிப்பும் தேவைப்படுகிறது. பாம்பு முதல் சிறு பூச்சிகள் வரையிலான சில விலங்குகள் தமக்கு அச்சுறுத்தல் வரும்போது தப்பி ஓட வழியின்றி இறந்தது போல நடிப்பதுண்டு. எதிரிகள் அதை நம்பி, விலகிச் சென்றுவிடும். அப்படி நடிப்பதில் சிறந்த 8 வகை விலங்குகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. த ஈஸ்டர்ன் ஹாக்னோஸ் ஸ்னேக் (The Eastern Hognose Snake): இந்த வகைப் பாம்பு, எதிரிகளிடம் சிக்கிக்கொள்ளும்போது, முதலில் தற்காப்பு முறையாக எதிரியை மிரட்டிப் பார்க்கும். அந்த ஏமாற்று வித்தை தோல்வியுறும்போது, உடம்பைத் திருப்பி மல்லாந்து படுத்துக்கொள்ளும். வாயைப் பிளந்து கொண்டு, அசைவற்று இறந்துவிட்டது போல் நடிக்கும். நம்பிய எதிரி அங்கிருந்து நகர்ந்துவிடும்.
2. பிக்மி கிராஸ்ஹாப்பர் (Pygmy Grasshopper): எதிரிகளால் சுலபமாக பாதிப்படையக்கூடிய இந்த சிறிய பூச்சி, எதிரியைக் கண்டவுடன் தரையில் விழுந்து, கால்களை வெவ்வேறு திசைகளில் நீட்டி இறுக்கமாக வைத்துக்கொண்டு இறந்துவிட்டது போல் நடிக்கும். இதை முழுசாக முழுங்க வரும் தவளை, கால்களைப் பரத்திக் கிடக்கும் இதன் தோற்றத்தைப் பார்த்துவிட்டு விலகிச் சென்று விடும்.
3. நர்சரி வெப் ஸ்பைடர் (Nursery Web Spider): தற்காப்பிற்காக இல்லாமல் தனது துணையைக் கவர்ந்திழுக்க, ஆண் ஸ்பைடர் இறந்து கிடப்பது போல் நடிப்பதும் உண்டு. பெண் ஸ்பைடருக்கு பரிசு கொடுக்க பூச்சி ஒன்றையும் கையில் சுருட்டி வைத்துக்கொண்டு, காதலுடன் கட்டுண்டு கிடப்பது அதன் வழக்கம்.
4. விர்ஜினியா ஓபோஸ்ஸம் (Opossum): எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்த ஓபோஸ்ஸம் பற்களை இறுக கடித்தபடி, வாயில் எச்சிலை ஒழுக விட்டுக்கொண்டு தரையில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளும். உயிரற்ற பிணத்தின் மீதிருந்து வீசும் துர்நாற்றம் ஒன்றையும் வெளியேற்றி, எதிரி ஏமாந்து ஓடும் வரை மணிக்கணக்கில் படுத்துக் கிடக்கும்.
5. மல்லார்ட் டக் (Mallard Duck): எதிரியைக் கண்டதும், உடனடியாக சுருண்டு விழுந்து அசைவற்றுக் கிடக்கும் வாத்து இனம் இது. தூக்கிச் சென்றால் கூட செயலற்ற நிலையிலேயே தொடர்ந்திருந்து எதிரியை குழப்பமடை யச் செய்துவிடும். இம்முறையைப் பின்பற்றுவது, எதிரியின் முரட்டுத்தனமான தாக்குதலிலிருந்து தப்பித்து, உயிர் பிழைக்க வாய்ப்பு உருவாகும்போது, ஓடிவிட அது போடும் அட்டகாசமான திட்டம் என்றே கூறலாம்.
6. கிரே ஃபிஷ் (Crayfish): எதிரிகள் இந்த மீனின் தோலை உரிக்க முயலும்போது இது முற்றிலும் உறைந்து விட்ட நிலைக்குச் சென்று மல்லாந்து படுத்துக்கொள்ளும். அது இறந்து விட்டது போன்றதொரு மாயையை உருவாக்கி விடும்.
7. ஃபயர் பெல்லீட் டோட் (Fire-bellied Toad): இந்த வகை தவளை எதிரியைக் கண்டதும், உடலை முறுக்கி, அதன் அடி வயிற்றிலுள்ள பளீரென்ற நிறங்கள் எச்சரிக்கும் விதத்தில் வெளியே தெரியும்படி அசைவற்று மல்லாந்து படுத்துக்கொள்ளும். அது ஏற்கெனவே இறந்துபோய், அதன் உடல் விஷமாக மாறி வருகிறது என்று எதிரிகளுக்கு உணர்த்தும் குறிப்பாக இது உள்ளது.
8. லீஃப் லிட்டர் ஃபிராக் (Leaf Litter Frog): ஆபத்தை உணரும்போது இவ்வகைத் தவளை மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொள்ளும். கால்களை மெதுவாக அசைத்து, அவை செயலற்றுப்போனது போல் நடித்து, இறந்துபோனது போன்ற தோற்றம் காட்டும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க இது கையாளும் இந்த வகையான தற்காலிக அசைவின்மை. 'டானிக் இம்மொபிலிட்டி' (Tonic Immobility) எனப்படுகிறது.