ஒரு சொட்டு எரிபொருள் கூட இல்லாமல் தினமும் 50,000 பேருக்கு உணவு சமைக்கப்படும் இடம் எங்குள்ளது தெரியுமா?
ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மா குமாரிஸ் அமைப்பின் சாந்திவன் வளாகத்தில், தினமும் 50,000 பேருக்கு உணவு சமைக்கப்படுகிறது. ஆனால், இதற்காக ஒரு சொட்டு கேஸ் அல்லது மின்சாரம் கூட பயன்படுத்தப்படுவதில்லை. ஆம், இங்கு சமைப்பதற்கு சூரிய ஒளி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த சோலார் கிச்சன், உலகிலேயே மிகப்பெரிய சூரிய சமையலறையாக சாதனை படைத்துள்ளது.
இந்த சமையலறையின் பிரதான எரிபொருள் சூரிய ஒளி. ஆனால், இது சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, சோலார் தெர்மல் எனர்ஜி எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெப்பத்தை உருவாக்குகிறது. இங்கு நிறுவப்பட்டிருக்கும் 84 பிரம்மாண்டமான ஷெஃப்லர் ரிஃப்ளெக்டர்கள் (Scheffler reflectors) தான் இந்த ரகசியத்திற்கு காரணம்.
ஒவ்வொரு ரிஃப்ளெக்டரும் 9.2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இது சூரியனைப் பின்தொடர்ந்து, அதன் கதிர்களை ஒரே புள்ளியில் குவித்து, அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த ரிஃப்ளெக்டர்கள் தானாகவே சூரியனின் நகர்வுக்கு ஏற்ப நகர்ந்து, அதிகபட்ச சூரிய சக்தியை சேகரிக்கின்றன.
சூரிய ஒளிக் கதிர்கள் ஒரு புள்ளியில் குவியும்போது, அதன் வெப்பம் 800°C வரை உயர்கிறது. இந்த தீவிர வெப்பம், நீரை ஆவியாக (Steam) மாற்றுகிறது. தினமும் 3,500 கிலோகிராமுக்கு மேல் நீராவி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நீராவியே சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மொத்தமாக 6 பெரிய குழாய்கள் வழியாக சேகரிக்கப்படும் நீராவி, சமையலறைக்குள் உள்ள பிரம்மாண்ட பாத்திரங்களுக்குள் அனுப்பப்பட்டு அரிசி, பருப்பு வகைகள், கறிகள் போன்ற அனைத்தும் சமைக்கப்படுகின்றன.
இந்த சமையலறை ஒரு அரை-தானியங்கி (semi-automated) அமைப்பு. ஒவ்வொரு நாளும் மாலையில், ரிஃப்ளெக்டர்கள் அடுத்த நாளுக்காக தானாகவே சூரியனை நோக்கி திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீராவியின் அழுத்தத்தை சீராக வைத்திருக்க ஒரு அழுத்தக் குறைப்பான் (pressure reducer) மற்றும் தண்ணீரில் உள்ள கனிமங்களை நீக்க ஒரு வாட்டர் சாஃப்டெனிங் யூனிட்டும் (water softening unit) இங்கு உள்ளது. மழை மற்றும் மேகமூட்டமான நாட்களில், உணவு சமைக்க டீசல் மூலம் இயங்கும் ஒரு மாற்று அமைப்பும் இங்கு உள்ளது.
ஆரம்பத்தில், இந்த சமையலறை தினமும் 20,000 பேருக்கு உணவு சமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதன் திறன் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக இருந்தது.
இன்று, இது தினமும் 50,000 பேருக்கு உணவு வழங்குகிறத. பிரம்மா குமாரிஸ் வளாகத்தில் வசிப்பவர்கள், தொண்டர்கள், விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலருக்கும் இந்த சமையலறை உணவளித்து வருகிறது.
இந்த அற்புதமான சோலார் கிச்சன், மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் (MNES) ஆதரிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய சமையலறையின் தனித்துவமான அம்சம், இது பூஜ்ய உமிழ்வு (zero-emission) கொண்டது. அதாவது, சமையலுக்குப் புகை, தீ அல்லது வேறு எந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களும் பயன்படுத்தப்படுவதில்லை. இது சுத்தமான மற்றும் புதுமையான, சுற்றுச் சூழலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுத்தாத சமையல் முறைகளுகு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.