ஜாகுவார் என்ற வார்த்தை யாகுவார் என்று பழங்குடி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து கொல்பவன் என்று அர்த்தம். உலகில் சுமார் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஜாகுவார்கள் உள்ளன. இவை பெரிய பூனை இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவை அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. வெப்ப மண்டல மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் புதர்க்காடுகளிலும் வாழ்கின்றன.
1. உடலமைப்பு: இவை மிகவும் சக்தி வாய்ந்த விலங்குகள். ஆண் ஜாகுவார்கள் 100 முதல் 250 பவுண்டுகள் வரை எடை இருக்கும். இதனுடைய வால் தவிர்த்து. ஐந்து முதல் ஆறு அடி நீளம் வரை இருக்கும். கருப்புப் புள்ளிகளால் மூடப்பட்ட மஞ்சள், பழுப்பு நிற பின்னணியைக் கொண்ட ஒரு தனித்துவமான கோர்ட் இதனுடைய உடலில் போர்த்தி இருப்பது போன்ற அமைப்பில் உள்ளது. ஒவ்வொரு ஜாகுவாரின் உடலில் இருக்கும் புள்ளிகள், வரிகள் வடிவமும் மனிதக் கைரேகை போலவே தனித்துவமானது.
2. மாமிச உண்ணிகள்: ஜாகுவார்கள் மாமிச உண்ணிகள். பாலூட்டிகள், பறவைகள், ஆமை, ஊர்வன மற்றும் மீன்களை உள்ளடக்கிய பல வகையான உணவுகளைக் கொண்ட ஒரு சந்தர்ப்பவாத வேட்டையாடிகள். இதனால் மழைக்காடுகள் முதல் புல்வெளிகள் வரை பல்வேறு வாழ்விடங்களில் இவற்றால் வாழ முடிகிறது. மான் மற்றும் அனகோண்டாக்கள் உட்பட பல்வேறு வகையான விலங்குகளை தனித்துவமான முறையில் இவை வேட்டையாடுகின்றன.
3. நீந்தும் திறன்: இவை சிறந்த நீச்சல் வீரர்கள். ஈரமான சூழலில் வாழும் திறமை பெற்றவை. ஏரிகள், பெரிய ஆறுகள் மற்றும் ஈர நிலங்களில் நன்றாக நீந்தும் திறன் பெற்றவை. பெரும்பாலும் நீச்சல் மூலமே தங்களுடைய இரையை வேட்டையாடுகின்றன. இவற்றின் வலிமையான கால்கள் மற்றும் மிதக்கும் உடல்கள் நீர் மற்றும் நிலம் இரண்டிலும் திறமையாக செல்ல அனுமதிக்கின்றன.
4. இரை பிடிக்கும் திறன்: இவை பெரும்பாலும் மறைந்த நிலையில், பதுங்கியிருந்து இரையைத் தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. தாங்கள் பிடிக்கும் இரையின் மண்டை ஓட்டைத் துளைத்து ஒரு அபாயகரமான கடியை வழங்குகின்றன. இதன் சக்தி வாய்ந்த தாடைகள் மற்றும் கூர்மையான பற்கள் மிக எளிதாக அவற்றை கடித்துத் தின்ன வசதியாக இருக்கிறது.
5. உடல் கட்டமைப்பு: ஜாகுவார்கள் பொதுவாக தனித்து வாழும் விலங்குகள். இனச்சேர்க்கைக்கு மட்டுமே ஒன்று சேரும். அந்தி வேளையிலும் இரவு நேரத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவற்றின் சக்தி வாய்ந்த உடல் கட்டமைப்பு மரங்களில் ஏறவும் நீந்தவும் நீண்ட தூரம் தாண்டிக் குதிக்கவும் அனுமதிக்கின்றன. இவற்றின் வலிமையான மூட்டுகள் மற்றும் தசைகள் வேட்டையாடும் நுட்பங்களை ஆதரிக்கின்றன. ஜாகுவார் குட்டி போடும்போது அவை ரொட்டியின் எடையை போல சிறிதாக இருக்கும். ஆனால், நம்ப முடியாத அளவு அவை விரைவில் வளரும்.
6. கலாசார முக்கியத்துவம்: பல பூர்வீக அமெரிக்க கலாசாரங்களில் ஜாகுவார்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவை வலிமையின் சக்தி வாய்ந்த சின்னங்களாகக் கருதப்படுகின்றன. பாதாள உலகத்தின் பாதுகாவலர்களாக கருதப்படுகின்றன. அமெரிக்கா முழுவதும் பல்வேறு தொன்மங்கள், கலை மற்றும் நாட்டுப்புற கதைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன.
7. குறைந்து வரும் எண்ணிக்கை: காடுகள் அழிப்பு, வேட்டையாடுவது, வாழ்விட இழப்பு, மரங்களை வெட்டுவது போன்ற காரணங்களால் ஜாகுவார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் ஜாகுவார் அமெரிக்க மெக்ஸிகோ எல்லை வரை சுற்றித் திரிந்தன. ஆனால், இப்போது பெரும்பாலான ஜாகுவார்கள் அமேசான் நதிப்படுகையில் மட்டுமே காணப்படுகின்றன
8. சிறுத்தைகள் அல்ல: ஜாகுவார்கள் பெரும்பாலும் சிறுத்தைகள் என்று தவறாக கருதப்படுகின்றன. ஆனால். இரண்டும் வேறு வேறு. ஜாகுவார்களின் உடலில் பழுப்பு ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் இருக்கும். அவை ரோஜாக்கள் போன்ற வடிவத்தில் இருப்பதால் ரொசெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த புள்ளிகள் சிறுத்தைகளுக்கு இல்லை.