ஸிலிகான் வாலி என்று சொன்ன உடனேயே அமெரிக்கவிலுள்ள கணினிக் காடுதான் நினைவுக்கு வரும். இது செயற்கை. கணினிப் பொறியாளர்களின் தனி சாம்ராஜ்யம். ஆனால் இயற்கையே உருவாக்கியிருக்கும் அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley) என்ற ஒன்றும் இருக்கிறது!
அமைதி என்பது என்ன? ஓசையற்ற சூழல். ஆனால் அருவிகளின் வீழ்ச்சி, ஆறுகளின் ஆரவார ஓட்டம், மரங்களின் அசைவு, விலங்குகளின் உறுமல், பறவைகளின் கீச்சொலி இவையெல்லாம் சேர்ந்த இன்னிசைக் கலவையை வெளியிடும் ஒரு பள்ளத்தாக்கு எப்படி ‘அமைதி‘ பள்ளத்தாக்கு ஆகும்? இந்த ஓசைகள் மனதுக்கு அமைதி தருகின்றனவே, அதனால்தான்! இந்த அமைதி, ஒரு சந்தோஷ நிம்மதி!
எங்கே இருக்கிறது இந்த அமைதி பள்ளத்தாக்கு?
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் நீலகிரி மலைச் சரிவில் சுமார் 250 கி.மீ. சதுர பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வனப்பகுதி இது.
இது சைரந்திரி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. (பஞ்ச பாண்டவர்களின் நாயகியான திரௌபதியின் இன்னொரு பெயர்தான் சைரந்திரி. அஞ்ஞாதவாச காலத்தில் தன் கணவன்மார்களோடு திரௌபதி இங்கே சில நாட்கள் வசித்தாளாம். அதனால் இந்தப் பெயர்!)
இப்படி ஒரு இயற்கை அற்புதம் இருப்பதை 1847ம் ஆண்டு, ராபர்ட் விட் என்ற ஆங்கிலேய தாவரவியல் வல்லுநர்தான் முதன் முதலில் உலகுக்கு அறிவித்தார். அதுமுதல் செயற்கையான எந்த இரைச்சலும், ஓசையும், விசையொலியும் இல்லாத இந்த இயற்கையான தியான பூமிக்குப் பலரும் வருகை தந்து மனதிலும், உடலிலும் உறுதியை வளர்த்துக் கொண்டார்கள். அதனாலேயே இப்பகுதிக்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயரிட்டர்கள்.
இந்தப் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான தாவர வகைகள் உள்ளன. இன்றும்கூட சில தாவரங்களை அடையாளம் தெரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
எண்பது வகை மரங்கள் விண்ணைத் தொட முயன்று கொண்டிருக்கின்றன.
பிற எங்குமே காண முடியாத அபூர்வ மலர்கள் பூக்கும் பல லட்சம் மலர்ச் செடிகள் அங்கே மகரந்த மணம் பரப்புகின்றன.
சின்னஞ்சிறு பாசி வகைகளிலிருந்து நெடிதுயர்ந்த மரங்கள்வரை நிலத்தடி நீரைப் பாதுகாக்கின்றன. பாதுகாப்பது மட்டுமல்லாமல், மழை தருவிக்கும் இயற்கை எந்திரங்களாகவும் செயல்படுகின்றன. இவை நில அரிப்பைத் தடுக்கும் அரண்கள்.
இங்குள்ள மூலிகைகள் மருத்துவச் சிறப்பு கொண்டவை.
இங்கே வாழும் நூற்றியெட்டு வகை பறவைகளின் கூவல், லயம் தப்பாத இனிய சங்கீதமாக ஒலிக்கின்றன.
பெரிய, சிறிய, கொடூர, அப்பாவி விலங்குகள் என்று முப்பத்து நான்குவகை பாலூட்டிகள் சுதந்திரமாக உலவுகின்றன. (தமக்குள்ளே பசி காரணமாக பகை என்று கொண்டிருந்தாலும், மனித அரக்கத்தனத்திலிருந்து கிடைத்திருக்கும் விடுதலை!)
விதவிதமான ரீங்கார ஒலி எழுப்பும் எழுநூற்று முப்பது வகை பூச்சிகள் இங்கே சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் இரவில் ஒளிரும் பூச்சிகளும் உண்டு.
ஆராய்ச்சியாளர்களே திகைக்கும் வகையில் ஐநூறு வகையான மண்புழுக்கள் இந்த அடர் வனத்தை வளமுள்ளதாக, செழிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
இயற்கையில் இத்தனை வண்ணங்களா என்று அதிசயிக்க வைக்கும் வகையில் எத்தனையோ விதமான பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன.
இவற்றோடு, புலிகள், சிறுத்தைகள், பலவகை பாம்புகள், மலபார் அணில்கள், நீலகிரி மான்கள் ஆகியனவும் சுற்றுலாவாசிகளின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைக்கின்றன.
இறைவனின் குறிப்பிடத் தகுந்த இன்னொரு படைப்பு – சிங்கவால் குரங்குகள்!
வேறெங்கும் காணக் கிடைக்காத கரும் புல்புல் பறவை, ராஜநாகம் இரண்டுமே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே குடியேறியிருக்கின்றன என்றும் தெரிவிக்கிறார்கள்!
1970ம் ஆண்டு, கேரள அரசு, குந்திப்புழா ஆற்றில் ஓர் அணை கட்டத் தீர்மானித்தது. அதனால் இந்த அமைதி பள்ளத்தாக்கு, ஆரவாரப் பள்ளத்தாக்காக மாறிவிடும் என்று பதறிய வன ஆர்வலர்கள் அவ்வாறு அணை அமையக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு, இவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதால் அணை கட்டும் திட்டம் அணைந்து போனது. அதாவது 1982ம் ஆண்டு அமைதி பள்ளத்தாக்கு, மனிதரின் ஆக்கிரமிப்புத் தாக்குதலிலிருந்து தப்பித்து, தேசிய பூங்கா என்ற மதிப்பையும் பெற்றது.
இப்போது இந்த அமைதிப் பள்ளத்தாக்கு மிகவும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் இயற்கை மாறாத எழிலுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஐந்து கோடி ஆண்டுகளாக தன் எல்லைக்குள்ளேயே தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது இந்த அதிசய வனம்!