
இயற்கை உலகம் மனிதர்களை வியக்கச் செய்யும் அற்புதங்களால் நிரம்பியுள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்காவில் காணப்படும் Sociable Weaver என்ற சிறிய பறவைகள், உலகிலேயே மிகப் பெரிய கூட்டுக் கூடுகளை கட்டும் திறமையால் புகழ் பெற்றுள்ளன. பறவைகள் பொதுவாக தனித்தனி கூடுகளை அமைக்கும் நிலையில், இப்பறவைகள் நூற்றுக்கணக்கான இனத்தாருடன் இணைந்து, ஒரு பெரிய ‘அபார்ட்மென்ட்’ போன்ற குடியிருப்பை உருவாக்குகின்றன. இயற்கையின் பொறியியல் திறமையை வெளிப்படுத்தும் இக்கூட்டுக் கூடுகள், பறவைகளின் சமூக ஒற்றுமையும் பாதுகாப்பும் எவ்வளவு முக்கியமானவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
இப்பறவைகள் பெரும்பாலும் நமீபியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் வறண்ட புல்வெளி பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக, பறவைகள் தங்கள் இனத்திற்கே உரிய தனிக் கூடுகளையே கட்டும். ஆனால் Sociable Weaver பறவைகள் நூற்றுக்கணக்கான பறவைகள் ஒன்றாக சேர்ந்து பெரிய குடியிருப்பு போல் இருக்கும் கூடு கட்டுகின்றன. அதனால் இதற்கு ‘communal nest’ என்று பெயர் வந்துள்ளது.
ஒரு Sociable Weaver கூடு சில சமயம் ஒரு காரின் எடையை விட அதிகமாக இருக்கலாம். அகலம் சுமார் 20 அடி (6 மீட்டர்) வரை, உயரம் 10 அடி (3 மீட்டர்) வரை இருக்கக் கூடும். ஒரே கூட்டில் 100 முதல் 200 ஜோடி பறவைகள் வரை தங்கி வாழும் வல்லமை கொண்டது. ஒரு கூடு பல தசாப்தங்கள் (decades) நீடிக்கும். பழுதுபட்ட இடங்களை பறவைகள் மீண்டும் மீண்டும் பழுது பார்த்து சீரமைக்கின்றன.
புல்வெளிகளில் கிடைக்கும் புல், வைக்கோல், கிளைகள் போன்றவற்றைக் கொண்டு இக்கூடுகள் கட்டப்படுகின்றன. கூட்டின் உள்ளே பல ‘அறைகள்’ போன்று பிரிக்கப்பட்டிருக்கும். உள்ளேயுள்ள அறைகள் சிறிய குளிர்சாதனப் பெட்டிகளைப் போல, வெளியில் இருக்கும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பகல் நேரத்தில் அதிக வெப்பத்தைத் தடுக்கவும், இரவில் குளிரில் பறவைகளை சூடாக வைத்துக் கொள்ளும்படியும் இக்கூடுகள் வடிவகைக்கப்படுகின்றன.
இக்கூடுகள் மிகப் பெரிய அளவு என்பதால், பறவைகளுக்கு பூனைகள், பாம்புகள் போன்ற வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கூடு மிகவும் உயரமான மரங்களில் அல்லது மின் கம்பங்களில் அமைந்திருப்பதால் வேட்டையாடிகள் எளிதில் இக்கூட்டை அணுக முடியாது. சில சமயம் இனப் பறவைகள் மட்டுமல்லாமல், வேறு சில பறவைகளும் இந்தக் கூடுகளில் தங்கிக்கொள்கின்றன.
Sociable Weaver பறவைகளின் கூட்டுக் கூடு என்பது பறவைகளின் சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வு என்பதைக் காட்டுகிறது. உலகிலேயே பெரிய ‘பறவை கட்டடம்’ (bird architecture) என்று இதனை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பறவைகளின் சமூக வாழ்க்கையை ஆராயும் உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இவை ஒரு இயற்கை அதிசயம்.
இந்தக் கூடுகள் பெரிய ‘அபார்ட்மென்ட்’ போல நூற்றுக்கணக்கான பறவைகளை ஒரே இடத்தில் வாழ வைக்கும் தன்மை கொண்டவை. அவை பறவைகளின் சமூக ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இயற்கை பொறியியல் திறமையின் சான்றுக்கு ஆதாரமாகும்.