உவர் நிலமா? கவலையே வேண்டாம்: நன்னிலமாக மாற்றும் அதிசய மூலிகை!

Herb that changes the salinity of the soil
Sesuvium portulacastrum
Published on

விவசாய விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் பல செயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர். ரசாயன உரங்களால் மண்ணின் தரம் குறைந்து வருவதோடு, மொத்த விளைநிலங்களில்  45 சதவிகிதம் பரப்பளவு உப்பு சத்து நிறைந்ததாக மாறியுள்ளது. இதன் காரணமாக எதிர்காலங்களில் விளைச்சல் குறைவதோடு, விளைபொருட்களின் தன்மையும், தரமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ‘ஓர்பூடு‘ என்னும் உப்பை உறிஞ்சி வளரும் தாவரங்களை பயன்படுத்தலாம்.

கடல் வழுக்கை கீரை அல்லது ஓர்பூடு என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இதன் தாவரவியல் பெயர், ‘செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம்’ ஆகும். இது ஒரு முடிவு இல்லாத மூலிகைத் தாவரம் ஆகும். உலகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் அதிகம் வளருகிறது. உவர் நிலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வ தாவரம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
நம்பிக்கையும் சவால்களும் நிறைந்த மழைக்கால உழவர் வாழ்க்கை!
Herb that changes the salinity of the soil

வழுவழுப்பான, தடித்த இலைகள், ஊதா நிற பூக்களைக் கொண்டு தரையோடு ஒட்டி வளரும், ‘ஓர்பூடு’ என்னும் தாவரத்தை சில வீடுகளில் அலங்காரத்திற்கு வளர்த்திருப்பார்கள். இது அழகுத் தாவரம் மட்டுமல்ல, வேறு பல குணாதிசயங்களும் கொண்டுள்ளது.

இயற்கையாக வளரும் தாவரத்தின் மூலம் உப்பு படிந்து மலடாகிக் கிடக்கும் நிலத்தை செலவே இல்லாமல் விளைநிலமாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் அறிவியல் துறையினர் இந்தத் தாவரத்தின் தனித்தன்மையை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சாயப் பட்டறை மற்றும் கழிவுப் பொருட்கள் மூலம் மாசுபட்ட நிலங்களில் அதிக அளவு உப்பு இருக்கிறது. விளைநிலங்களில் இருக்கும் உப்புத் தன்மையை ஓர்பூடு தாவரம் எடுத்துக் கொள்வதோடு, இந்த மண்ணையும் மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.

ஓர்பூடு தாவரம் இயற்கையாக சதுப்பு நிலங்களில் கிடைக்கக் கூடியவை. ஆற்றின் மணல் படுக்கையில் உப்பை உறிஞ்சி வளரக் கூடியவை. இந்தத் தாவரங்களை விளைநிலங்களில் பயன்படுத்தும் பட்சத்தில் 70 முதல் 80 சதவிகிதம் வரை உப்பை உறிஞ்சும் இயல்பு உடையது என்பதால் ஓர்பூடு தாவரங்களை விளைநிலங்களில் பயன்படுத்த விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மண் வளத்தை மீட்டெடுக்கும் பசுந்தாள் உரப் பயிர் ரகசியம்!
Herb that changes the salinity of the soil

இது இயற்கையாக சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய தாவரம். கடலோரப் பகுதிகளில் இன்றும் கடல் மீனோடு சேர்த்து சமைத்து உண்கின்றனர். மேலும், இந்த இலைகளை மாட்டுத் தீவனமாகவும் உபயோகப்படுத்தலாம். இது ஒரு சிறந்த மருத்துவ பொருளாகப் பயன்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் பிராபர்டி இருப்பதால் புற்றுநோய்களுக்கான மருந்து தயாரிக்கவும் உதவுகிறது.

உப்பு அதிகமுள்ள நிலங்களில் ஆறு மாதங்கள் ஓர்பூடு தாவரங்களை பயிரிட்டு அறுவடை செய்த பின்னர் மற்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதுடன், தரமான விளைச்சலும் பெற முடியும் என அறியப்படுகிறது. காலம் காலமாக இறால் மீனோடு சேர்த்து உண்ணும் தாவரமாக இதை உபயோகப்படுத்துகின்றனர். மீனவர்கள் இதை வங்கராசி கீரை என அழைப்பார்கள்.

ஒரு மண் உப்புத் தன்மையுடன் இருந்தால் அங்கு எந்தத் தாவரமும் வளராது. ஆனால், இந்தத் தாவரமோ அங்கு வளர்வதுடன் மண்ணை வளமாக்கி விவசாயம் மேற்கொள்ளவும் வழி வகுக்கிறது. பல வகை மாசுக்களால் பாழடைந்து கிடக்கும் உப்புப் படிந்த நிலத்தை ஓர்பூடு தாவரம் மெல்ல மெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக மாற்றுகிறது என்பதால் எதிர்காலத்தில் இதன் தேவை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com