
கோடைமழையே! கோடைமழையே!
கொஞ்சிடப் பெய்திடும்
கோடை மழையே!
சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களை
சுகம்பெறச் செய்யும்
அழகிய மழையே!
உந்தன் வரவால்
உளமது மகிழ்ந்தோம்!
நன்றியுணர்வுடன்
நாளுமுனை நினைப்போம்!
ஆனாலும், உன்மேல்
அன்பான கோபம்
எங்களுக்கு உண்டு!
எப்படி என்கின்றாயா?
நீமட்டும் வந்தால்
நிம்மதி நிலைக்கும்!
கூடவே நீயும்
சூறைக் காற்றை…
அழைத்தே வந்து
அமைதியைக் கெடுக்கிறாய்!
நெல்லை நாங்கள்
அறுவடை செய்கையில்…
பெய்தே நீயும்
பெருந்துன்பம் செய்தாய்!
போகட்டும் என்று
வாழையை வளர்த்தோம்!
தாரை ஈந்து
தக்க பலனை
நல்கும் வேளையில்…
ஒடித்தே போட்டு
உயிரை வதைக்கிறாய்!
இயற்கையே உன்னை
நம்பித்தானே எங்கள்வாழ்க்கை?!
துரோகியைப்போல் நீ
சுகங் கெடுக்கலாமா?
வாழ்க்கை நெடுகிலும்
வந்தே உதவி…
எங்கள் வாழ்வை
இனிதாக்கிக் கொடுத்திடே!
நீரும் காற்றும்
நீண்ட உலகின்
உயிர் மூச்சென்பதை
உலகே அறியும்!
பக்குவம் அறிந்து
பயன்தரும் விதத்தில்
எதுவும் இருந்தால்தான்
என்றைக்கும் பெருமை!
எங்களை என்றும்
காக்கும் விதமாய்
உந்தன் நடவடிக்கையை
உயர்த்திடு நீயும்!
பிறவி முழுதும்
போற்றுவோம் உன்னை!