பூமியில் உள்ள பெருங்கடல்களின் மாற்றத்தை ஒரு உயிரினத்தின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
ஸீல் என்ற உயிரினத்தில் பல வகைகள் உள்ளன. இந்த உயிரினங்கள் அண்டார்டிகாவைச் சுற்றிலும் வாழ்கின்றன. இவை சுமார் 100 அடி வரை உணவைத் தேடி டைவ் செய்யும். இந்த ஸீல்கள் கடல் நீரோட்டங்கள் வழியாக நீந்தி, தெற்கு பெருங்கடல் வரை செல்வதில் வல்லுநர்கள். இந்த உயிரினம் கரடுமுரடான இடங்களை கூட எளிதாக கடந்துவிடும்.
இதன் திறனை பயன்படுத்திக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்தனர்.
தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளின் தரவுகளை சேகரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஸீல்களின் நெற்றியில் டேக் -குகளை இணைத்து வருகின்றனர்.
இந்த கடல் பாலூட்டிகள் ஓய்வெடுக்கும் சமயங்களில் கரைக்கு வருகின்றன. அப்போது இனச்சேர்க்கை காலத்தில் ஸீல் மீது டேக் -கை வைக்கின்றனர். மேலும் அந்த டேக் ஒரு வருடத்திற்கு ஸீலுடன் இணைக்கப்பட்டுகிறது. இது அந்த உயிரினத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஸீலின் ரோமம் ஒராண்டுக்கு ஒருமுறை உதிரும், அப்போது அந்த டேக்கும் விழுந்துவிடும். மீண்டும் அதன்மீது புது டேக் வைக்கப்படும். ஸீல் டைவ் செய்யும் போது டேக் தரவைச் சேகரித்து, அதன் இருப்பிடம் மற்றும் அறிவியல் தரவுகளை செயற்கைக்கோள் வழியாக ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்புகிறது.
ஸீல்களின்மேல் இணைக்கப்பட்ட டேக் மூலம், கடலின் அழுத்தம், உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை ஆகியவை கண்டறியமுடியும். நீரோட்டங்களின் பண்பு மற்றும் நீரின் பைட்டோபிளாங்க்டன் செறிவு பற்றிய தரவை வழங்க முடியும்.
பைட்டோபிளாங்க்டன் என்றால், கடல் உணவு வலையின் தளத்தை உருவாக்கும் சிறிய உயிரினங்கள். அந்த உணவுகளை சிறிய மீன்கள் மற்றும் ஸீல்கள் சேகரித்து உண்கின்றன. சீல் சென்சார்கள் அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பற்றியும் ஆராய்ச்சியாளர்களுக்குச் சொல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் அண்டார்டிகாவில் இருந்து சுமார் 150 பில்லியன் டன் பனி உருகுகிறது.
மேலும் பனி உருகி எவ்வழியாக செல்கிறது, வெப்பம் எவ்வாறு நகர்கிறது போன்றவற்றை இந்த டேக்கின்மூலம் தகவலைப் பெறலாம்.
கடலின் மாற்றங்களின் தரவுகளை வழங்கும் இந்த டேகின் உதவியுடன், வரும்காலத்தில் இன்னும் அதிகமாகவே கடல் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.