

உலகில் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கும். சில மரங்களின் வேர், மரம், பட்டை, இலைகள், பூக்கள், பழங்கள், விதைகள் ஆகியவை நறுமணமாக இருந்தால் அவை நறுமண தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆனால், ஒரே மரம் கிராம்பு, கருப்பு மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றின் நறுமணத்தை தனது இலைகளில் கொண்டுள்ளது. அத்தகைய நறுமண மரத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பிமெண்டா டியோகா (Pimenta dioica) என்று அழைக்கப்படும் ஆல் ஸ்பைஸ் மரம் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் ஆகிய மூன்றின் மணத்தை ஒருங்கே பெற்றிருப்பதால், ‘அனைத்து மசாலா’ என்ற பெயர் வந்தது. இது, ‘ஜமைக்கா மிளகு மரம்’ (Jamaica pepper tree) எனவும் வேறு பெயரால் அழைக்கப்படுகிறது.
மிர்டில் குடும்பத்தைச் சேர்ந்த பசுமையான மரமாக இருக்கும் ஆல் ஸ்பைஸ் மரம் மிதமான களி மண்ணில் நன்கு வளரும். உலகளவில் வெப்ப மண்டலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி மற்றும் குற்றாலம் பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.
பொதுவாக, 20லிருந்து 30 அடி வளரக்கூடிய மரமாக ஆல் ஸ்பைஸ் மரம் இருக்கிறது. மேலும், அதன் நறுமணமிக்க இலைகள் மற்றும் பழங்கள் சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலர்ந்த பழுக்காத பழங்கள் மற்றும் இலைகளில் இருந்து மசாலா பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆல் ஸ்பைஸ் மரத்தின் இலைகள் உலர்ந்த பின்பு பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாக மாறும்பொழுது சமையலுக்கு இதனை அரைத்து பயன்படுத்தலாம். மேலும், உலர்ந்த இலைகளை தேநீரில் கொதிக்க வைத்து குடிக்கும்போது மசாலா டீ போன்ற சுவையைக் கொடுக்கிறது.
ஆல் ஸ்பைஸ் மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செரிமானத்தை தூண்டி வாயு கோளாறை நீக்கி, மலச்சிக்கல் மற்றும் மூட்டு வலிகளைக் குறைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. தற்போது கேரளாவில் இருந்து ஆல் ஸ்பைஸ் மரத்தை கன்றுகளாக வாங்கி வந்து சுய தொழில் செய்யும் விவசாயிகள் தென்காசி, குற்றாலம் மற்றும் செங்கோட்டை பகுதிகளில் வளர்த்து வருகின்றனர்.
இந்திய மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத இந்த மரம் பூச்சிகளை விரட்டும் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அதிசய மரத்தை காணும்போது அதன் இலைகளை பறித்து உண்மையை அறிந்து கொள்வோம்.