வெட்டுக்கிளிகளை வேட்டையாடும் ரெட்டைவால் குருவி!

Two Tailed Sparrow
Two Tailed Sparrow
Published on

இயற்கையின் பேரம்சமாக இருக்கும் ரெட்டைவால் குருவி, வெட்டுக்கிளிகளை அழித்து விவசாயத்திற்கு உதவி புரிகிறது. வெட்டுக்கிளிகள் எப்படி இப்பறவைக்கு உணவாகின்றன? இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இயற்கையில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தை அடக்க பிறப்பெடுத்தவை தான் ரெட்டைவால் குருவி என அழைக்கப்படும் கரிச்சான். உணவுச் சங்கிலியில் ஒரு உயிரினம் மற்ற உயிரினத்திற்கு உணவாக உதவுகிறது. இதில் ஏதாவது ஒரு உயிரினத்தின் அழிவு உறுதி என்றாலும், ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும்.

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்ணும் ரெட்டைவால் குருவி, இயற்கைச் சூழலையும் விவசாயத்தையும் காத்து வருகிறது. கீரிப்பிள்ளை இருக்கும் இடத்தில் பாம்புகள் இருக்காது என்று சொல்வார்கள். அதே போல் கரிச்சான் இருக்கும் இடத்தில் வெட்டுக்கிளிகள் இருக்காது.

கிராமங்களில் ஆடுகள் மற்றும் மாடுகளின் மேல் சவாரி செய்யும் போது இந்த கரிச்சான் குருவியை பார்க்கலாம். பார்க்கவே அற்புதமான காட்சியாக இருக்கும்‌. ஆடுகள் நடக்கும் போது கால்களால் புறங்களில் கிளறி விட, அதிலிருந்து வெளிவரும் வெட்டுக்கிளியை இலாவகமாக பிடித்து தனக்கு இரையாக்கி விடும் திறன் பெற்றவை இந்த கரிச்சான்கள். இது தவிர்த்து மின்கம்பிகள் மற்றும் மின்விளக்கு கம்பங்கள் மீதும் காணலாம். அவ்வப்போது கரிச்சான் சிறிது தொலைவு பறந்து, பிறகு அதே இடத்திற்கு வந்து சேரும்.

கரிச்சான் குருவிக்கு துளியும் பயமிருக்காது. இது மிகவும் தைரியமான பறவையாகும். உருவத்தில் காகத்தை விட சிறிதாக இருந்தாலும் தன்னை விட வலிமையான மற்றும் பெரிய பறவைகளான காகம், பருந்து மற்றும் கழுகு போன்றவற்றை தைரியமாய் விரட்டும் தன்மை கொண்டது. இந்த தைரியத்தால் தான் இப்பறவைக்கு King Crow என்ற பெயரும் வந்தது. பார்ப்பதற்கு பளபளவென மின்னுகின்ற கருப்பு நிறத்தில் இருக்கும். நீளாமான வால் சிறகுகள் இரண்டாக பிரியும். அலகுகள் தொடங்கும் இடத்தில் தான் மீசை போன்ற உரோமங்கள் இருக்கிறது. இந்த உரோமங்கள் தான் இரையைப் பிடிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வெங்காயம் கெடாமல் இருக்க படல் போட்டு பாதுகாப்பு! இது புதுசு இல்ல, பாரம்பரியம்!
Two Tailed Sparrow

அளவுக்கு அதிகமான வெட்டுக்கிளிகளை உண்டு விட்டால், அவற்றை அரைத்து மண்ணில் கக்கி விடும். இது மண்ணிற்கு மிகச் சிறந்த உரமாகவும் பயன்படுகிறது. ஆக மொத்தத்தில் கரிச்சான் குருவி வெட்டுக்கிளிகளை வேட்டையாடியும் விவசாயத்திற்கு உதவுகிறது; வெட்டுக்கிளிகளை உரமாக மாற்றியும் விவசாயத்திற்கு உதவுகிறது.

சில வகையான பறவைகள் தங்களது சிறகுகளில் உள்ள பேன் தொல்லையைத் தவிர்க்க, எறும்புப் புற்றின் மேல் உட்காரும். அப்போது எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலம் பேன்களை அழித்து விடும்‌. கரிச்சான் குருவியும் இதே யுக்திகளைப் பயன்படுத்தி தான் பேன் தொல்லையில் இருந்து விடுபடுகிறது.

தற்போது கரிச்சான் குருவியின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. கரிச்சான் மட்டுமின்றி அனைத்து பறவைகளையும் நாம் பாதுகாத்தால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com