வெங்காயம் கெடாமல் இருக்க படல் போட்டு பாதுகாப்பு! இது புதுசு இல்ல, பாரம்பரியம்!

Protect Onions
Protect Onions
Published on

வெங்காயத்தை பல மாதங்களுக்கு கெடாமல் பாதுகாக்கும் பாரம்பரிய சேமிப்பு வழிமுறையான வெங்காய படல் முறை குறித்து விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருள்களை விற்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல், அப்பொருள்களை முறையாக சேமித்து வைப்பது அதைவிட முக்கியம். நிலத்தில் கடினமாக வேலை செய்து உருவாக்கிய விளைபொருள்கள் சிலநேரம் மழையால் பாதிப்பைச் சந்திக்கலாம் அல்லது விலை குறைவால் வீழ்ச்சியை சந்திக்கலாம். இம்மாதிரியான நேரங்களில் விவசாயிகள் மிகவும் வேதனைப்பட்டு சாலைகளில் விளைபொருள்களை கொட்டும் பல செய்திகளை நாம் கண்டிருப்போம். இதுபோன்ற ஒரு தவறு ஏன் நடக்கிறது என்று உண்மையில் விவசாயிகளுக்கும் தெரிவதில்லை. ஆகையால் தவறுகள் நடக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி கவலை கொள்ளாமல், விளைபொருள்களை பாதுகாக்கும் முன்முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது.

ஒவ்வொரு விளைபொருளையும் முறையாக சேமித்து வைக்க பண்டைய காலங்களில் பாரம்பரிய வழிமுறைகள் சில இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்தும் வருகின்றன. மூத்த விவசாயிகள் சிலருக்கு மட்டுமே இந்தப் பாரம்பரிய வழிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவ்வகையில் வெங்காயத்தை அறுவடைக்குப் பிறகு பல மாதங்களுக்கும் கெடாமல் சேமித்து வைக்கும் பாரம்பரிய முறையான வெங்காய படல் முறையை இன்றைய கால விவசாயிகள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

வெங்காயத்தை சேமித்து வைக்கும் படல் போடும் முறை கொங்கு வட்டாரப் பகுதிகளில் தான் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும் இம்முறையைப் பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கையானது குறைவாகத் தான் இருக்கிறது. குறிப்பாக கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் பக்கம் இருக்கும் சில கிராமங்களில் இன்றளவும் இம்முறை நடைமுறையில் இருக்கிறது.

படல் போடுவதற்கு முன்னர் ஒரு பள்ளத்தில் செம்மண்ணை நிரப்பி சிறிதளவு மேடாக்கி கொள்ள வேண்டும். இதில் இரண்டு அடி உயரத்திற்கு கருங்கல், செங்கல் அல்லது ஹாலாபிளாக் போன்றவற்றில் ஏதேனும் ஒருவகை கற்களை அடுக்க வேண்டும். இதன் மேல் வெங்காயத்தை போட்டு வைத்து, இரண்டு அடி உயரத்திற்கு மூங்கில் அல்லது பாக்கு மரத்தால் செய்யப்பட்ட தப்பையை போட வேண்டும். அடிபடலின் இருபுறத்தையும் மூங்கில் சிம்பு எனப்படும் மூங்கில் மரத்தால் ஆன மெல்லிய காய்ந்த குச்சிகளைக் கொண்டு மறைக்க வேண்டும். இதனைத் தாங்கிப் பிடிக்க இருபுறமும் மூங்கில் கட்டைகளால் முட்டு கொடுக்கப்படும். படல் போட்டு முடித்தவுடன் தென்னந்தடுக்கு வைத்து வேலி போல் அமைத்து, தார்பாயினால் மூடி விடுவார்கள். சில இடங்களில் தென்னந்தடுக்குக்குப் பதிலாக சிமெண்ட் ஓடுகளும் பயன்படுத்தப்படுகிறது. இருபுறமும் மூங்கில் சிம்பு வைப்பதால் சீரான இடைவெளியில் காற்றும் உள்ளே செல்லும். இதனால் வெங்காயம் நல்ல நிலையில் இருக்கும். இப்படித் தான் வெங்காய படல் போடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
விவசாய மானியங்களை பெற உதவும் 'உழவன்' செயலி!
Protect Onions

தற்போது உடுமலைப்பேட்டையில் தான் மூங்கில் சிம்பு விற்பனைக்கு கிடைக்கிறது. மழைகாலத்தில் வெங்காய அறுவடை செய்தால், படலுக்கு அருகில் இருக்கும் களத்தில் இரண்டு நாட்களுக்கு காய வைத்து, அதன் பிறகுதான் படல் போடுவார்கள். வெங்காயத்திற்கு நல்ல விலை வரும் வரை படலைப் பிரிக்க மாட்டார்கள். அது எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி. படல் போடுவதால், வெங்காயம் பாதுகப்பாக சேமிக்கப்படுவது மட்டுமின்றி, நல்ல விலை வரும் போது விற்பதால் விவசாயிகளுக்கு நல்ல இலாபமும் கிடைக்கும். படலைப் பிரித்து வெங்காயம் விற்கப்பட்ட பின் மீதமுள்ள வெங்காயத்தை அடுத்த சாகுபடிக்கு விதையாகவும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com