

ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணி சோழன் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை இடிதாங்கி மரம் என்றும் குறிப்பிடுகின்றனர். அந்தக்காலத்தில் ஆத்தி மரங்கள் நிறைந்த பகுதிதான் இன்று ஆற்காடு என்று அழைக்கப்படுகிறது. பழமை வாய்ந்த சோழர்களின் தலைநகராகவும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஆதிகாலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்ததால் ஆரூர் எனப்பட்டது.
காட்டு ஆத்தி என்று அழைக்கப்படும் ஆத்திக்கும் மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கல்லீரல் வீக்கம் நோயை நம்மால் உடனடியாக உணரமுடியாது. வெட்டை நோய், பித்தம், வாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது.
ஆத்திக்கு இலக்கியங்களிலும் இதற்கு தனி இடம் உண்டு. ஆத்தி என்பது ஒரு சிறிய அடர்த்தியான மரமாகும் சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்திலிருந்து 1650மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளது.
இது ஒருவித மந்தாரையாகும். இலைகள் சிற்றிலைகளாக, கூட்டிலைகளாக 1லிருந்து 2அங்குலம் இருக்கும் பூவின் புறவிதழ்கள் 5 ஒன்றாகக் கூடிய மடல் போல் இருக்கும். நுனியில் 5பற்கள் இருக்கும் அக இதழ்கள் 5சற்று சமமின்றி இருக்கும். வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. ஆத்திக்கனி 6லிருந்து 12அங்குல நீளமும் ஒரு அங்குல அகலமும் இருக்கும். இது ஒரு பசுமையான மரம். இலைகள் அரை வட்டவடிவில் ஒன்றை ஒன்று இணைத்ததுபோல் காணப்படும். டிசம்பர் முதல் மார்ச் வரை பூக்கும்.
இந்த மரத்தின் இலை, காய், கனி, பட்டை,வேர் என அனைத்து பாகமும் மருத்துவ குணம் வாய்ந்தது. மரத்தின் பட்டையிலிருந்து நார் எடுக்கலாம். ஆத்திமரத்தின் வேர், பட்டையை இடித்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் வலி இருந்த இடம் தெரியாமல் போகும் நல்ல பசியை உண்டாக்கும். குடற்புழு நீங்கும் ஆத்திக் கனியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரால் வாய் கொப்பளித்தால் நாக்கில் ஏற்படும் புண், தொண்டைப் புண் ஆறும். பித்தம் வாதம் சம்பந்தப்பட்ட நோயும் குணமாகும்.
இம்மரத்தின் பட்டை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ரத்தம் போக்கை நிறுத்தவும், குஷ்ட ரோக தடிப்புகளுக்கும் மருந்தாக கொடுக்கிறார்கள். மாந்தம் இருமலுக்கு நல்லது குடற்புழுக்களை நீக்கும் விஷக்கடி புண்களுக்கு மருந்தாகிறது. பட்டையை நீரில் போட்டு காய்ச்சி அந்நீரில் குளிக்க உடல் படை நீங்கும்.
பல மருத்துவகுணம் கொண்ட ஆத்தி சிவன் கோவில்களில் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இந்த மரத்துக்கும் தாழம்பூவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். இறைவனின் முடியை படைப்புக் கடவுளான பிரம்மன் பார்த்ததாக பொய் சாட்சி அளித்த தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள். பிரம்மாவுக்காக பொய் சொன்னதால் ஏற்பட்ட பாபத்தைச் போக்க தாழம்பூ திருச்செங்காட்டங்குடியில் ஆத்தி மரமாக முளைத்து இறைவனுக்கும் பக்தர்களுக்கும் நிழல் தந்து தன் பாபமத்தை போக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.
அவ்வையார் ஆத்தி சூடி அமர்ந்த தேவனே என்று சிவபெருமானை வணங்கியிருக்கிறார். சிவனை ஆர்புனை சடையோன் என்று குறிக்கிறார்கள். திருச்செங்காடங்குடியில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்ததாக தெரிகிறது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மரமாக ஆத்தி உள்ளது.