பால்கனியில் தோட்டம் அமைக்க ஆசையா? இதோ குறைந்த பராமரிப்பில் செழித்து வளரும் ரகசியங்கள்!

balcony-gardening-
balcony-gardening-
Updated on

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து டிஜிட்டல் யுகமாக மாறி உள்ள இன்றைய அவசர யுகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இயற்கை என்பது எட்டாத விஷயமாக இருக்கிறது. செடி, கொடிகள், மரங்கள் நிறைந்த தோட்டத்தின் நடுவில் அமர்ந்து காபி அல்லது தேநீர் குடிப்பது என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலும், ஜன்னல் ஓரங்களிலும் செடிகள் வளர்த்து குட்டி தோட்டமாக்க உதவும் எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

தோட்டம் அமைக்க இருக்கும் பால்கனியில் சூரிய ஒளி எவ்வளவு நேரம் படுகிறது என்பதை முதலில் கவனிக்கவேண்டும். ஏனெனில் செடிகளின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் இன்றியமையாதது.

சூரிய ஒளி அதிகம் படும் பால்கனியில் நாள் முழுவதும் சூரிய ஒளி அதிகம் தேவைப்படும் செடிகளை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.

சூரிய ஒளியே படாத பால்கனியில் நிழலில் வளரும் தாவரங்களை தேர்வு செய்து வளர்த்தால் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பால்கனியில் போதிய இட வசதி இல்லாதவர்கள் பழைய நீர் பாட்டில்கள், உடைந்த வாளிகளைக் கொண்டு தொங்கும் அமைப்பில் செடிகளை வளர்க்கலாம். இது சுவர்களுக்கு இயற்கையான அழகைக் கொடுப்பதோடு இடத்தையும் மிச்சப்படுத்தும்.

இயற்கையான உரங்கள், தென்னை நார்கழிவு, மணல் கலந்த தரமான மண் கலவையில் செடிகளை நட்டு வைத்தால் மண்கள் இலகுவாக இருந்து வேர்கள் நன்றாக ஊடுருவி செடிகள் நன்கு வளரும்.

செடி வளர்ப்பின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் மணி பிளான்ட், கற்றாழை, துளசி போன்ற செடிகளை நட்டு வைத்து வளர்ப்பதில் இருந்து பால்கனி தோட்டத்தை தொடங்கலாம்.

இதையும் படியுங்கள்:
மடகாஸ்கர்: மாயாஜாலத் தீவும்... அழியக் கூடாத அதிசய மரங்களும்!
balcony-gardening-

கோடைகாலத்தில் செடிகளுக்கு வெப்பம் குறைவாக இருக்கும் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றுவது சிறந்தது. வெயில் அதிகம் இருக்கும் மதிய நேரத்தில் தண்ணீர் ஊற்றினால் அதிக வெப்பத்தின் காரணமாக வேர்கள் காய்ந்துபோக வாய்ப்புள்ளது.

தண்ணீரை செடிகளின் வேர்களில் நேரடியாக ஊற்றும்போது செடி நன்கு செழித்து வளரும்.

கோடை காலத்தில் வெளியூர் செல்பவர்கள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் சிறிய துளையிட்டு தலைகீழாக மண்ணில் நட்டு வைப்பதன் மூலம் செடிகளுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்குமாறு செய்யலாம்.

காய்கறி தோல், பழத்தோல், டீ தூள் போன்ற சமையலறை கழிவுகளை ஒரு வாளியில் போட்டு மூடி வைக்க சில நாட்களிலேயே செடிகளுக்கு தேவையான இயற்கை உரம் கிடைத்து விடும். இவற்றை செடிக்கு பயன்படுத்த செடி செழித்து வளர்ந்து மனதிற்கு இதமாக அமையும்.

செடிகளில் பூச்சி தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் கரைசல், சோப்பு கரைசல், மஞ்சள் கரைசல் கலந்து செடிகள் மீது தெளிக்க பூச்சிகள் காணாமல் போய்விடும்.

செடிகளின் இலைகள் சூரிய ஒளியை உறிஞ்ச வாரத்திற்கு ஒரு முறை மென்மையான துணியால் மெதுவாக துடைக்கவேண்டும்.

செடி நன்கு வளர்ந்த உடன் காய்ந்த மற்றும் பழுத்த இலைகளை வெட்டி அப்புறப்படுத்துவது செடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

இதையும் படியுங்கள்:
ஊருக்குப் போறீங்களா? கவலை வேண்டாம்! உங்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற இதோ சூப்பர் ஐடியா!
balcony-gardening-

பழைய மண் பாண்டங்களுக்கு வண்ணம் தீட்டி செடிகளை வைப்பது, மாலை நேரத்தில் சிறிய மின் விளக்கை எரியவிடுவது, வண்ணக் கற்களை கொண்டு அலங்காரம் செய்வது போன்றவற்றை செய்யும் போது அந்த இடம் ரம்மியமாக மாறி பார்ப்பவர்களின் கண்களுக்கு இதமாக அமைந்து மன அழுத்தத்தையும் போக்கிவிடும்.

மேற்கூறிய எளிய வழிகளை மனதில் கொண்டு பால்கனி தோட்டம் அமைக்க வீடும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com