மண்ணில் தொடர்ச்சியாக ஒரே பயிரை பயிரிடுவதால் மண் விரைவில் மலட்டுத்தன்மை அடைவதாக மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையின் மிக முக்கிய சக்தி வாய்ந்த பொருள்களில் ஒன்று மண். ஏனென்றால் சிறிய விதையை விருச்சம் ஆக்கி பயிராக தரும் அற்புத ஆற்றல் கொண்ட மண் தற்போது தன்னுடைய சத்துக்களை இழந்து வருகிறது.
அதிகரித்து வரும் தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள், கெமிக்கல்கள், அணு ஆயுதங்கள் போன்றவை மண்ணை மாசுபடுத்தி மண்ணின் ஊட்டச்சத்துக்களை குறைத்து மண்ணை மரணிக்க செய்கின்றன. இது மட்டுமல்லாது விவசாயமும் தற்போது மண்ணுக்கு மிகப்பெரிய ஆபத்தான ஒன்றாக மாறி இருக்கிறது.
தற்போதைய விவசாய முறை தொடர்ச்சியாக மண்ணின் சத்துக்களை குறுகிய காலத்தில் விரைவாக உறிந்து சுரண்டுகின்றன. இப்படி அதிவேகமாக சுரண்டப்படும் மண் சத்தற்ற மண்ணாக மாறிவிடுகிறது. இதனால் வருங்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடும் விவசாயிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள், கெமிக்கல்கள் போன்றவையும் மண்ணை மலடாக்குகின்றன. அதோடு மண்ணுக்கடியில் இருக்கும் நுண்ணுயிரிகள், புழு, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இப்படி உணவு சங்கிலியும் சிதைக்கப்படுகிறது.
வருங்காலத்திலும் இதே போன்ற விவசாய முறை தொடரும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக சத்தற்ற ஒன்றாக மண் மாறி விடும். இதனால் ஒட்டுமொத்த பூமியும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.