வேளாண்மையின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண் துறை பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தவும் முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2022 - 2023 வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர், ‘தமிழ்நாட்டின் மண் வளங்களின் நிலையை அறிந்துகொள்ள ஏதுவாக இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ‘தமிழ் மண் வளம்’ என்ற இணையதள முகப்பு தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மை, நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர், உவர், அமில நிலை, அங்ககச் சத்து, தழை மணி சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்து மற்றும் எந்த வகை பயிரை பயிரிட்டு அதிக மகசூலைப் பெறலாம் போன்ற தகவல்களை அறிய முடியும்.
இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள http://tnagriculture in/manvalam என்ற இணைய முகவரியில் விளைநிலத்தின் விவரம், மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு ஆகியவற்றை பதிவு செய்து மண் வள அட்டவணையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணில் 45 சதவிகித தாது, 25 சதவிகித நீர், 25 சதவிகித காற்று, 5 சதவிகித அங்ககப் பொருள் இருந்தால் அது ஆரோக்கியமான மண் என்று கருதப்படும். இவற்றை ஒப்பிட்டு மண் வளத்தை இணையதளம் மூலம் பெற முடியும்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் செம்மண் 39. 34 சதவிகிதம், பழுப்பு நிற மண் 37.89 சதவிகிதம், கரிசல் 10. 38 சதவிகிதம், சாம்பல் நிற மண் 3.5 சதவிகிதம், இதர வகை மண் 2.3 சதவிகிதம் மற்றும் வண்டல் மண் 0.86 சதவிகிதம் உள்ளன.