
வேளாண் காடுகள் நம் சமூகத்துக்கு ஏன் அவசியமாகின்றன. அவற்றிலிருந்து நாம் பெரும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வேளாண்மையும் வன வளமும் நம் நாட்டின் இரு கண்கள் போன்றவை. வேளாண்மையை சார்ந்த விவசாயப் பெருமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கும், அவர்களின் நிலங்களை பேணுவதற்கும் நிலையான நீடித்த வேளாண்மையை உறுதிப்படுத்துவதற்கு வேளாண் காடுகளே சிறந்த வழிமுறையாகும்.
நாட்டின் எரிபொருள் தேவையில் சுமார் 50 சதவீதம் அடிமர தேவையில் 2/3பங்கும், ஒட்டுப் பலகை தயாரிப்பிற்கான தேவைகள் 70 முதல் 80 சதவீதமும், காகிதக் கூழ் தயாரிப்பில் 6 சதவீதமும் வேளாண் காடுகளே பூர்த்தி செய்கின்றன. கால்நடை வளர்ப்பும் நம் கிராமப்புறங்களில் காணப்படும் ஒரு முக்கியமான வேலை வாய்ப்பு வருமானமும் தரக்கூடிய தொழில் இதுவே.
இன்று கால்நடை வளர்ப்பு தீவனத் தேவையில் சுமார் 9லிருந்து 11 சதவிகிதம் வேளாண் காடுகள் மூலமாகப் பெறப்படுகின்றன. நாட்டின் வறண்ட பகுதிகளில் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும் மண் வளத்தினை மேம்படுத்துவதற்கும் வேளாண் காடுகளே சிறந்தவை. தொழிற்சார்ந்த வேளாண் காடுகள் மூலம் புதிய மர வகைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் தொழில்நுட்பங்களை கொண்டும் மதிப்பு கூட்டுதல் மூலமாகவும் வேளாண் காடுகள் அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகின்றன.
வேளாண் காடுகளுக்கு ஏற்ற மரப் பயிர்கள்:
மிகவும் வேகமாக வளர்ந்து குறுகிய காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய மரமாக இருக்க வேண்டும்.
நேராக மற்றும் உயரமாக வளர்ந்து மிகச் சிறிய விதானத்தை கொண்டுள்ள மரமாக இருக்க வேண்டும்.
மரங்கள் பல்வேறு வகையான பயன்பாடு கொண்டதாக இருக்க வேண்டும்.
மரங்கள் பல்வேறு வகையான மண் மற்றும் தட்பவெட்ப சூழ்நிலைகளில் வளரும் தன்மை கொண்டுள்ளதாக இருத்தல் வேண்டும்.
மரங்கள் ஆகாயத்தில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தி மண் வளத்தைப் பெருக்க வேண்டும்.
வேளாண் பயிர்களோடு ஒத்து வளரக்கூடிய மரங்களாக இருக்க வேண்டும். மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்பட வேண்டும்.
மரங்கள் காற்றின் வேகத்தை குறைப்பதோடு காற்றில் உள்ள கரியமில வாயுவை அதிகம் உட்கொள்ளும் தன்மை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்.
மரங்களின் வேர்களில் இருந்து வேதிப்பொருட்கள் உருவாகக் கூடாது.
வேளாண் காடுகள் வளர்க்கும் மரங்களுக்கு சரியான சந்தை விலை இருத்தல் வேண்டும்.
இதுபோன்ற பண்புகளைக் கொண்டு தமிழகத்தில் வேளாண் காடுகளை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய வேளாண் காடுகளின் கொள்கையின் அறிவுறுத்தல்படி 20க்கும் மேற்பட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் கடம்பு, மூங்கில், சவுக்கு, தைலம், மலைவேம்பு, பூவரசு, சந்தனம், செஞ்சந்தனம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
வேளாண் காடுகளின் வகைகள்:
வேளாண்மை சார்ந்த வேளாண் காடுகள்: வேளாண் பயிர்களுக்கு ஊறுவிளைக்காதபடிக்கு மரப் பயிர்களான சவுக்கு, தைலம், மலைவேம்பு, கடம்பு, ஐலை போன்றவற்றுக்கு இடையில் நிலக்கடலை, கொள்ளு, பாசிப்பயறு, தட்டைப்பயிறு, உளுந்து, வெங்காயம், கத்தரி, வெண்டை, மிளகாய், கறிவேப்பிலை, சாமை, வரகு போன்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளின் நிகர வருமானத்தைப் பெருக்க முடியும். மேற்குறிப்பிட்ட மரப்பயிர்களுக்கு இடையில் ஊடு பயிர்களை மூன்று வருடங்கள் வரை சாகுபடி செய்யலாம். இது காலம் காலமாக நாம் செய்து வருவதுதான். அதில் சிறிது மாற்றம் செய்கிறார்கள். இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்கனி போல் பயன் தரக்கூடியது அதுதான் இதன் சிறப்பு.
மேய்ச்சல் சார்ந்த வேளாண் காடுகள்: தீவனப் பயிர்களை பயிர் செய்யும்பொழுது பாசன வசதி உள்ள நிலங்களில் கினியா புல் மற்றும் கம்பு, நேப்பியர் புல் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்கிறார்கள்.
வேளாண்மை மற்றும் மேய்ச்சல் சார்ந்த வேளாண் காடுகள்: நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இதைப் பின்பற்றலாம். இதில் மரப்பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், விவசாயப் பயிர்கள், மூலிகைச் செடிகள், பெருந்தோட்ட பயிர்கள் மற்றும் கால்நடைகளை ஒருங்கிணைத்து சாகுபடி செய்வதில் இவ்வகை நிலங்களின் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்க இயலும்.
நன்மைகள்: இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட விளைபொருட்களைப் பெற்று விவசாயிகள் நிகர லாபத்தை அதிகரிக்க முடியும். ஒற்றைப் பயிர் சாகுபடியில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கும் வேளாண் காடுகள் உதவுகின்றன. மேலும், காப்பு காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் வேளாண் காடுகளை ஊக்குவிப்பதன் மூலமாக காப்புக் காடுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களை பெரிதும் குறைக்க முடிகிறது. மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரப்பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் உபரி வருமானத்தையும் பெறுவதற்கு வேளாண் காடுகள் உதவுகின்றன.