ஆதி மனிதன் ஒரே இடத்தில் சிறிய கூட்டமாக வாழ்ந்த காலத்தில் மிகக் குறைந்த அளவே இருந்த மாசு, கி.பி. 1000மாவது ஆண்டுக்குப் பிறகு, மனிதன் நிலக்கரியைக் கண்டுபிடித்து, எரிசக்தியாக பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதலே அதிகரிக்க ஆரம்பித்தது. 17ம் நூற்றாண்டில் இரும்புத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதிலிருந்து பல மடங்கு பெருகிவிட்டது.
சுற்றுப்புறச் சூழலை மிக மோசமாக பாதிப்பது காற்று மாசுதான்.
பல காரணங்களால் உருவாகும் காற்று மாசு குறித்தும், அது ஏன், எவ்வாறு உருவாகிறது, எப்படி குறைப்பது, நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது… இவை பற்றி நமக்குள் எழுந்த கேள்விகளுக்கு விளக்கம் பெற,
சென்னை எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி (SIVET) முதல்வர், (Retd) சுற்றுப்புற சூழல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர். ஜி.ராஜா Msc.,M.Phil.,Ph.D அவர்களை அணுகினோம்…
நம்மை வியக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஏராளமான தகவல்களை அளித்தார் ராஜா அவர்கள்.
காற்று மாசு பற்றி சொல்லுங்கள்
தீங்கு செய்யும் வாயுக்கள், தூசி, நுண்துகள்கள் போன்றவை நம் வளி மண்டலத்தில் சேரும்போது காற்று முற்றிலும் மாசடைகிறது.
காற்றில் அதிகரிக்கும் கார்பன்டை ஆக்சைட், நைட்ரஜன் ஆக்சைட்,
குளோரோ ஃப்ளோரோ கார்பன், சல்ஃபர் டை ஆக்சைட், ஒசோன் போன்ற பல வாயுக்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன.
ஓசோன் அடுக்கு என்பது என்ன?
ஓசோன் அடுக்கு (ozone layer) என்பது வளிமண்டலத்தின் (Atmosphere) மேல் பகுதியில் உள்ள இயற்கையான வாயு அடுக்கு. சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (Ultraviolet UV) கதிர்வீச்சுகளை உறிஞ்சி பூமியின் வெளிப்புற மேற்பரப்பில் அவை நுழைவதைத் தடுப்பதன் மூலம் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இந்த ஓசோன் அடுக்கு பாதுகாக்கிறது.
ஓசோன் அடுக்கில் ஓட்டை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தொழிற்சாலைகள், தானியங்கி வாகனங்கள், ஜெட் விமானம் போன்றவற்றிலிருந்து வரும் குளோரோஃப்ளூரோகார்பன்கள் (Chlorofluorocarbons (CFC)) போன்ற பல வாயுக்கள் இந்த ஒசோன் அடுக்குகளை பாதிக்கின்றன. இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏசி, ஃப்ரிட்ஜ், கார் இவற்றிலிருந்தும் வெளிப்படுகின்றன.
ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன; மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதோடு, தோல் புற்றுநோய், கண்புரை போன்ற பிரச்னைகளும் வ்ருகிறது..
மேலும், ஓசோன் படலம் சிதையும்போது மியூடேஷன் (mutation) என்னும் மரபணுச் சிதைவு ஏற்பட்டு உயிரினங்கள் மாற்றம் பெறக்கூடும்.
ஓசோன் பரப்பில் மற்ற பசுமை இல்ல வாயுக்களின் (Green House Gases) குறைபாடுதான் ஓசோன் ஓட்டை என்பது. அதாவது ஓசோன் வாயு மற்ற பசுமை இல்ல வாயுக்களால் சிதைக்கப்படுவது.
பசுமை இல்ல வாயுக்கள் என்பவை எவை? அவை எப்படி பாதிப்பை உருவாக்குகின்றன?
கடல் மற்றும் பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை (Infrared radiation) நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், ஓசோன், நைட்ரஸ் ஆக்சைட் உட்பட சில வாயுக்கள் உறிஞ்சி அவற்றை மீண்டும் பூமிக்கே அனுப்பும்போது (Re radiation) வெப்பம் சமநிலையில் இருக்கும்.
ஆனால், மனித செயல்பாடுகளால், (எரிபொருளுக்காக பாறைப் படிமங்களை எரித்தல், (Fossil Fuel) தொழிற்புரட்சி, வாகனங்கள் பயன்பாடு போன்றவை) காற்றின் மாசு அதிகரித்திருப்பதால் இந்த வாயுக்கள் அதிகம் வெளியிடப்பட்டு, பூமிக்குத் திருப்பி அனுப்பும் அளவும் அதிகமாகி உலக வெப்பமயமாதல் ஏற்பட்டுள்ளது.
காற்றில் உள்ள மாசு என்ன தீமைகளை உண்டாக்குகிறது?
வாகனங்கள் வெளியிடும் புகை, நம் சுவாசம் வழியே சென்று, உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து சுவாசிக்கக்கூடிய சக்தியைக் குறைத்து, மனித உடலில் இருக்கும் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்து விடுகிறது.
முதலில் முக்கியமாக சொல்ல வேண்டியது பிளாஸ்டிக் எரிப்பு.அதை எரிக்கும்போது வரும் டயாக்ஸின், கல்லீரலை பாதிப்பதோடு, நுரையீரல் புற்று நோய் மற்றும் பார்வைக் கோளாறையும் ஏற்படுத்துகிறது. பலருக்கு ஒவ்வாமை வருவதற்கும் காரணமாகிறது .
காற்றில் கலந்திருக்கும் உலோகத் துகள்கள், நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா, மார்பு சளி, போன்றவையும், பசியின்மை, ரத்த சோகை, கருச் சிதைவு, தலைவலி, தூக்கமின்மை இவற்றுக்கும் காரணமாகிறது.
பல உதாரணங்கள் சொல்லலாம்.
ஆஸ்பெஸ்டாஸ் இழை தயாரிப்பில் இருப்பவர்களுக்கு, Asbestosis என்னும் நுரையீரல் பாதிப்பு வரும். நீண்ட காலம் உடலை வருத்தும்.
கல் உடைக்கும் தொழில் செய்பவர்களுக்கும் நுண்துகள்கள் பாதிப்பைத் தரும்.
பருத்தித் தொழில் செய்வோருக்கு, நுரையீரல் நார்க் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
ஆட்டோமொபைல் வெளியிடும் கார்பன் மோனாக்சைட் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
சல்ஃபர் டை ஆக்சைட், கண் எரிச்சலைத் தருவதோடு, உடம்புக்குள் சென்று, அமிலமாகி திசுக்களை அழித்து விடும்.
சிகரெட் புகையினால் வருடம்தோறும் 40 லட்சம் பேர் இறந்து போகிறார்கள்.அதைப்
பிடிப்பவர் மட்டுமல்ல, சுற்றி இருப்பவருக்கும் அந்த துகள்களால் நுரையீரல் பாதிக்கப் படுகிறது.
காடுகள் அழிக்கப் படுகின்றனவே…
மிகவும் தவறான செயல்… ஒரு ஏக்கர் காடு, 10 டன் கார்பனை உறிஞ்சிக்கொண்டு, நம் சுவாசத்துக்குத் தேவையான 25 டன் ஆக்சிஜனை வெளிப்படுத்துகிறது. இதை நாம் உணர வேண்டும்.
காற்று மாசுபடுவதைத் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் காடுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் மரங்கள் நட வேண்டும். வேம்பு, கொய்யா போன்ற சில மரங்கள் காற்றில் அதிகம் உள்ள குளோரின், அம்மோனியா போன்றவற்றை உறிஞ்சி விடும்.
தொழிற்சாலைகள் நாட்டு முன்னேற்றத்துக்குத் அவசியம் தேவைதான்.
ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்வது அதைவிட அவசியம். உபகரணங்களை சரியாக பராமரிக்கவேண்டும்.
தொழிற்சாலைக் கழிவுகளைத் தகுந்த முறையில், அழிக்கவோ, ரீசைக்கிள் செய்யவோ ஏற்பாடுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அரசாங்கமும் இதை கவனத்தில்கொண்டு ஆலைகளைக் கண்காணிக்க வேண்டும்.
வாகனங்களில், பையோடீசல் அல்லது மின்சாரம் உபயோகித்து ஓட்டினால், பெருமளவு மாசு குறையும். சமீபத்திய கண்டுபிடிப்பு பசுமைப் பெட்டி.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அல்கே என்னும் பாசியை, ஒரு பெட்டியில் நிரப்பி, வாகனங்களில் புகை வெளிவரும் பைப் அருகே வைத்து விட்டால் அவை, வேண்டாத வாயுக்களை உறிஞ்சி பையோ டீசலாக மாற்றி விடுகிறது.
மின்சாரத்துக்காக நிலக்கரி எரிப்பதைக் குறைத்து, கடல், காற்றாலை, சூரிய சக்தி மூலம் தயாரிக்க வேண்டும். விமானங்களை மின்சக்தியால் இயக்க வேண்டும். ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்த வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணி புரிவோர், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
இன்னும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த பூமியையும் நம்மையும் காற்று மாசு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கலாம்.