மாசற்ற சூழலே நோயற்ற வாழ்வு. ஒரு பிடி மண் உருவாக பல லட்சம் ஆண்டுகள் ஆகுமாமே!

பகுதி - 2
pollution)...
pollution)...

சுற்றுப்புறச் சூழலைத் தாக்கும் மாசு (pollution), காற்று, நீர், நிலம் தவிர, கதிரியக்கத்தால் வருவது, ஒலி மாசு என்று பல விதங்களாக இருப்பதோடு, இவை நமது உடல் நலத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கிறது என்று பார்த்து வருகிறோம்.

காற்று மாசு என்பதைத் தொடர்ந்து, நீர் எப்படி மாசு அடைகிறது என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும், சென்னை எஸ்.ஐ.வி.டி கல்லூரி முதல்வர்,(Retd) சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர். ஜி.ராஜா Msc.,M.Phil.,Ph.D. அவர்கள் விவரித்தார்.

பேராசிரியர் டாக்டர். ஜி.ராஜா
பேராசிரியர் டாக்டர். ஜி.ராஜா

நீர் எவ்வாறு மாசுபடுகிறது?

நீர் - பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடன், மிக முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்றாகும் இதில் 0.3% மட்டுமே மனித நுகர்வுக்கு கிடைக்கக் கூடியது.

வணிகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாகவும், விழிப்புணர்வு இல்லாததாலும், இந்த சதவீதம் கூட குறைந்து வருகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீர், விவசாயம், சாக்கடை நீர், வீட்டுக் கழிவு நீர், கதிரியக்கநீர்க் கழிவுகள் மற்றும் கச்சா எண்ணெய்க்கசிவு போன்றவை நீரை மாசுபடுத்துகின்றன.

நாம் புழங்கும் நீரோடு, சாக்கடை நீர் கலக்கும்போது, அதில் இருக்கும் ப்ரோடோசோவா கிருமிகள்(Protozoa) மஞ்சள் காமாலை, டைஃபாய்ட், காலரா, ரத்த பேதி போன்ற பல நோய்களுக்குக் காரணமாகிறது.

சுரங்கம், தொழிற்சாலைக் கழிவுகளால் வரும் கிருமிகள் மூலம்,தண்ணீரில் பாதரசம் கலந்து விடுகிறது. இதனால் வருவதுதான் மினாமட்டா நோய் (Minamata). குறிப்பாக கடல் உணவுகளில் இருக்கும் பாதரசத்தால் வருவது.

கால்கள், உதடு, நாக்கு மரத்துப் போதல், பார்வைக் குறைபாடு, உடல் ஊனம், காது கேளாமை, ஏன் மன நோய் கூட வரும் வாய்ப்பு உண்டு.

நீரில் காட்மியம் அதிகமாகும்போது, எலும்பு தேய்மானம், மூட்டு வலி, கல்லீரல் மற்றும் புற்று நோய்க்கு வழி வகுக்கும்.

ஈயச் செம்பில் ரசம் வைத்து சாப்பிட சுவை கூடும் எனப்படுகிறதே...

லெட் எனப்படும் ஈயம், ரத்தசோகையை உண்டாக்குவதோடு, தசை நார்களை பலமிழக்கச் செய்துவிடும். ஈயத்தைத் தவிர்ப்பது நல்லது.

கடல் மாசுபடுதல்...
கடல் மாசுபடுதல்...

நிலத்தடி நீர் மாசுபடக் காரணங்கள் என்ன சார்?

விவசாயத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அளவுக்கதிகமான பயன்பாடு நீர் சிதைவை உருவாக்குகிறது. 

வீடுகளின் கழிவுநீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றின் விளைவாக நிலத்தடி நீரில் நைட்ரேட்டுகள் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கவலை தெரிவித்துள்ளன.

ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்துகள், நிலத்தடி நீரின் தன்மையைப் பாதிக்கின்றன.

‘Blue Baby Syndrome’ உடன் குழந்தைகள் பிறக்க நைட்ரேட் பாய்சன் ஒரு காரணம்.

ஃப்ளோரோஸிஸ் (Fluorosis) என்னும் பற்சிதைவும் அதனால்தான்.

ஆர்செனிக் கலந்த குடிநீரைத் தொடர்ந்து பருகும்போது, கருங்கால் நோய் என்னும் Blackfoot disease வரும் வாய்ப்பு அதிகம். புற்று நோய் அபாயமும் உண்டு.

குரோமியம், ஸிங்க் அதிகமாக இருக்கும் நீர் மூலமாக, குடல் புண், சிறுநீரகக் கோளாறு வரும்.

இவற்றைத் தடுக்க, நாம் என்ன செய்யவேண்டும்?

தொழிற்சாலைகள், அவற்றின் கழிவுநீரை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான திட்டமிடல் உத்தியைக் கொண்டிருக்கவேண்டும்.

அனல் மின் நிலையங்களில் சூடான நீரை, குளிர வைத்துப் பின் வெளியேற்ற வேண்டும்.

கழிவு நீர் சுத்திகரிப்பு அவசியம்.

நீரிலிருந்து விரும்பத்தகாத ரசாயனங்கள், உயிரியல் அசுத்தங்கள், அதாவது தேவையற்ற பேக்டீரியாக்கள், தீங்கு விளைவிக்கும் திடப்பொருட்கள் மற்றும் அசுத்த வாயுக்கள் போன்றவை மூன்று நிலைகளாக சுத்திகரிக்கப்படுகின்றன.

நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை வளர்த்தல் நல்லது. அது நச்சுப் பொருட்களை நீக்க வல்லது.

நிலம் எவ்வகைகளில் மாசடைகிறது?

நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

ஒரு காடு உருவாக, ஒரு லட்சம் வருடங்கள் ஆகும் என்றால் மண் உருவாக பல லட்சம் ஆண்டுகள் ஆகும். உலகில் புதுப்பிக்க முடியாத பொருள் மண்தான். நாம்தான் எவ்வளவு குப்பைகளை இந்த மண் மீது கொட்டுகிறோம்?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொழிற்சாலை ரசாயனம் மற்றும் உலோகக் கழிவுகள்,

எண்ணெய், விஷக் கழிவுகளாலும் நிலம் எளிதில் மாசுபடுகிறது.

திரவ மற்றும் திடக்கழிவுகளை முறையற்றவாறு மண்ணில் கொட்டுவதால் நிலம் அசுத்தமடைகிறது.

கடந்த நூற்றாண்டின் நில மாசுக்கு பெரும் பங்கு பிளாஸ்டிக் காரணம்.

சராசரியாக ஒரு பாலித்தீன் பை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கு 10 சதவீதம் மட்டுமே உபயோகமாகிறது . மற்றவை எரிக்கப் படுகின்றன. அப்போது வரும் டயாக்ஸின் என்ற நச்சு வாயு காரணமாக,

சரும நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக மகசூல் வேண்டுமென்று போடப்படும் ரசாயன உரம், உப்புக்கள் நிலத்தின் தன்மையை உப்பாக மாற்றி, உணவுச் சங்கிலி முறையினால், மீண்டும் தனக்கே நோய்களாகத் திரும்புகிறது என்பதை மனிதன் உணர வேண்டும்.

குப்பைக் கூளங்களை ...
குப்பைக் கூளங்களை ...

எப்படி இதைத் தடுப்பது?

குப்பைக் கூளங்களை மறு சுழற்சி செய்து உரமாக்குதல், விலங்குகளின் கழிவுகளிலிருந்து பையோ கேஸ் தயாரித்தல், உயிரி உரங்களை பயன் படுத்துதல், காகிதம், கண்ணாடி போன்றவற்றை மறு சுழற்சி செய்தல் இவையெல்லாம் ஓரளவு மண் மாசைக் குறைக்கும்.

ஒலி மாசு ஏன்றால் என்ன? அது எத்தகைய பாதிப்பை உண்டாக்கும்?

மனிதரின் கேட்கும் திறன், நார்மலாக 35 டெசிபல் முதல் 60 வரை இருக்கலாம். 120 டெசிபல் வரை போகும்போது, காது கேளாமை, மனநலம் பாதிப்பு, ஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன

இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களின் இயந்திரங்கள், தொடர் வண்டிகள் போன்ற போக்குவரத்து அமைப்பால் உண்டாகிறது. வெடிச் சத்தம்,வாகனங்களின் ஹார்ன் ஒலி இவற்றைக் குறைக்க வேண்டும்.

கதிர்வீச்சு மாசு பற்றி…

அணுசக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளிலிருந்து வரும் ரேடியேஷன் பாதிப்புக்கள் பற்றி நாம் அறிவோம்.

ஆலைகள் சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொள்வதுதான் நிவாரணம்.

கழிவு வெளியேற்றம், தொழிலாளர் பாதுகாப்பு இவற்றுக்கு அதிக கவனம் வேண்டும்.

அணு ஆயுதங்கள் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப் பட வேண்டும். (நடக்குமா?)

இதையும் படியுங்கள்:
மாசற்ற சூழலே நோயற்ற வாழ்வு கொடியதிலும் கொடியது காற்று மாசு!
pollution)...

கடல் நீர் மாசுபாடும் அதிகரித்துள்ளதே..

ஆமாம்… இருக்கிற எல்லாக் கழிவுகளையும் கொண்டு போய் கடலில் கொட்டினால் என்ன ஆகும்? எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்ற சொலவடை போல, எல்லா நீரும் கடலில்தானே கலக்கிறது! மாசு நீர் சேரும்போது, அது கடல் வளத்தையே அழித்து விடுகிறது. கடலில் ஏற்படும் எண்ணை கசிவு, மீன் வளத்துக்கு ஆபத்து.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாம் என்ன வளத்தை விட்டுச் செல்லப் போகிறோம்?

காற்று, நிலம், நீர் எல்லாவற்றிலும் மாசு ஏற்படாமல், எதிர்கால சந்ததிகளையும், மானுடரல்லாத பிற உயிர்களையும், இயற்கைச் சூழலையும் பற்றிய அக்கறையோடு பொறுப்போடு இருப்போமா?

மாசுபாடு குறித்த சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் குறித்து விரிவான விளக்கம் அளித்த டாக்டர். ராஜா அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com