
பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளில் போகி வருகிறது. இது தமிழ் மாதமான மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இது மகர சங்கராந்தியின் போது சூரியன் தனது நிலையை தெற்கிலிருந்து வட அரைக்கோளத்திற்கு மாற்றும் போது கொண்டாடப்படுகிறது.
போகி மண்டலு (Bhogi Mantalu) என்பது சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு சடங்கு. வரட்டி சாணம் மற்றும் விறகுகளால் தீ மூட்டப்பட்டு பழைய பொருட்கள், பழைய பாய்கள், விளக்குமாறு குச்சிகள் போன்றவற்றை தீயில் போட்டு எரியவிடுவார்கள். இந்த புனித தீயை குடும்பத்தில் உள்ள பெண்கள் சுற்றி வருவார்கள். அப்படி சுற்றி வரும்போது மந்திரத்தை உச்சரித்து, கடவுளைப் புகழ்ந்து பாடல்களைப் பாடுகிறார்கள். இந்த நாளில் புனித நீராடிய பிறகு பெண்கள் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை அணிவார்கள்.
தீய பழக்கங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் போன்ற நிகழ்வுகளை, எண்ணத்தில் இருந்து எடுத்து விட்டு, நல்ல பழக்கங்களை செயல்படுத்துவதன் நோக்கமாக போகிப் பண்டிகை அனுசரிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்தது.
தற்போது போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் பனி மூட்டத்துடன் சேர்ந்து கடுமையான புகை மூட்டமும் ஏற்படுகிறது. சாலையில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகிறது. நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாச பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக துண்டுப்பிரசுரம், ஆடியோ செய்திகள் உள்ளிட்ட பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை குறைக்க TNPCB விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டும் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு TNPCB ஏற்பாடு செய்துள்ளது. எனவே, இந்த ஆண்டும் பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத தூய்மையான இந்தியாவை உருவாக்கும் பொருட்டு பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் .
விறகு, வரட்டி சாணம், தேங்காய் ஓடு போன்றவற்றை எரிப்பதால் எந்த காற்று மாசும் ஏற்படாது. நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். போகி பண்டிகைக்கு எதையாவது எரித்து தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலைக் காத்திட அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.