அதிவேக வளர்ச்சியுடன் அசத்தும் அசோலா!

Azolla
Azolla

அசோலா எனப்படுபவை தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சார்ந்த தாவரம். தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படும். இவை சிறிய இலைகளையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர் பகுதி நீரில் மூழ்கி இருக்கும். அதி வேக வளர்ச்சி கொண்டவை. அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான 35 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

ஒரு கைப்பிடி அசோலாவை தண்ணீரில் போட்டுவைத்தால் அது பெருகி வளர்ந்துவிடும். இதில் அதிகமான புரோட்டீன் இருக்கிறது. இந்த அசோலாவை ஆடு, மாடு, கோழி இவற்றிற்கு பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கொடுக்கலாம். அதிக சத்துக்கள் இதில் உண்டு. நைட்ரஜன் சத்து அதிகமாக இருப்பதால் இதைச் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.

நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்தும் அசோலாவை உண்ணும் கோழியின் முட்டையானது அதன் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோட்டின் அளவு சாதா தீவனம் சாப்பிடும் கோழி முட்டையின் சத்தின் அளவைவிட அதிகமாக இருக்கும். இதை உண்ணும் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அசோலா சாப்பிடும் கோழிகள் 5 மாதத்தில் நல்ல மஞ்சள் கருவோடு முட்டை இடும். அசோலா சாப்பிடும் பசுக்கள் 1 லிட்டர் பால் வரை கூடுதலாகத் தரும்.

இந்த அசோலாவை வாங்கியதும் அப்படியே போடக்கூடாது. ஏனெனில் அதில் தவளை முட்டைகள், நத்தை முட்டைகள் இருக்கும். அதை அப்படியே தாவரங்களுக்குப் போட்டுவிட்டால் தாவரங்களை அரிக்க ஆரம்பிக்கும். இதைத் தடுக்க காப்பர் சல்பேட்டை(Copper Sulphate) உரக்கடைகளில் வாங்கி சிறிய துண்டை எடுத்து, ஒரு வாளியில் 20 லிட்டர் தண்ணீர் பிடித்து அதில் போட்டு கலக்கி விடவும். நன்றாக கரைந்தபின்னர் இது இளநீலக்கலரில் வரும். பின்னர் அசோலாவை இதற்குள் போட்டு 2 மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஊறுகின்ற நேரத்தில் தவளை முட்டை, நத்தை முட்டைகள் இறந்துவிடும். பின்னர் அசோலாவை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து செடிகளுக்குப் போட்டுவிடலாம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் ஃபேஷன் மோகம் தவிர்ப்போம்!
Azolla

இப்போது அசோலாவை பலரும் வீட்டிலேயே வளர்க்கிறார்கள். இதை எப்படி வளர்க்கலாம் என்றால் ஒரு பெரிய டப் எடுத்து அதில் களி மண்ணை பாதி அளவில் போட வேண்டும். அதுகூடவே மாட்டு சாணத்தைத் தண்ணீரில் போட்டு கரைத்து ஊற்றவேண்டும். பின்னர் ஃபோர் போடும்போது கிடைக்கும் மண் கிடைத்தால் போடலாம். அல்லது 1 லிட்டர் கோமியம் அல்லது பாஸ்பரஸ் பெர்டிலைசரை போட்டு நன்கு கலந்துவிட்டு ஒரு கைப்பிடி அளவு அசோலாவை போட்டுவிட்டால் 2 வாரத்தில் நன்றாக பெருகி வளரும்.

இதை நேரடியாக சூரிய ஒளியில் வைக்காமல் மரங்களின் கீழ் வைக்கலாம். இது நிறைய வளர்ந்ததும் எடுத்து காப்பர் சல்பேட் தண்ணீரில் போட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவிவிட்டு ஆடு, மாடு, கோழி, பறவைகளுக்கும் இதை உணவாகக் கொடுக்கலாம். மீன் தொட்டியில் போட்டுவிட்டால் மீனுக்கு உணவாகவும், நிழலாகவும் இருக்கும். இதில் விதைகள் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com