

சுத்தமான ஆடைகள் தீங்கு விளைவிக்குமா?:
புதியதாக இருந்தாலும் சரி, பழையதாக இருந்தாலும் சரி, சுத்தமாகத் துவைக்கப்பட்ட ஆடைகள் பொதுவாக எந்தவிதப் பிரச்னைகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆடைகளைத் தவறாமல் துவைப்பதால் அன்றாடப் பயன்பாட்டின்போது சேரும் வியர்வை, தூசி மற்றும் நுண்ணுயிரிகளை நீக்கிவிடுகிறது.
சில நேரம் ஆடைகளைச் சரியாக உலர்த்தாதபோது மட்டுமே ஆபத்து எழுகிறது. காரணம் ஈரமானத் துணியில் பூஞ்சைகள் (fungus) அல்லது பாக்டீரியாக்கள் இருக்கலாம். எனவே, சுத்தமான ஆடைகள் சூரிய ஒளியிலோ அல்லது திறந்த காற்றிலோ உலர்த்தப்பட்டால் அது என்றைக்கும் பாதுகாப்பானவை.
பழைய ஆடைகள்: நோய்த்தொற்று அபாயம்:
பழைய ஆனால், நன்கு துவைக்கப்பட்ட ஆடை தானாகவே தீங்கு விளைவிப்பதாக மாறிவிடுவதில்லை. முதலில் துணியே நோய்த்தொற்றை உருவாக்குவதில்லை; மாறாக, மோசமான சுகாதாரப் பழக்கங்களே அதை உருவாக்குகின்றன.
ஒரு பழைய துணி சுத்தமாகவும், பூஞ்சை இல்லாமலும் முறையாக சேமித்து வைக்கப்பட்டால், அது அணிவதற்கு பாதுகாப்பானதாகவே இருக்கும். துணி ஈரப்பதம், பூச்சிகள் அல்லது ஒவ்வாமைப் பொருட்களுக்கு ஆளானால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படுகின்றன.
குழந்தைகள் அல்லது முதியவர்கள் உள்ள வீடுகளில் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பழைய ஆடைகளில் தூசிப் பூச்சிகள் அல்லது மறைந்திருக்கும் ஒவ்வாமை (allergy) பிரச்னைகள் உள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும்;
இவை ஆரோக்கியமானவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே, நன்றாகத் துவைக்கப்பட்ட பழைய ஆடைகள் ‘நாம் நன்றாக பராமரிக்கும் வரை’ ஆபத்தானவை அல்ல.
பழைய ஆடைகள்: எப்போது அப்புறப்படுத்த வேண்டும்?
ஆடைகளை எப்போது அப்புறப்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது, அதை வாங்கியக் காலத்தைவிட அதன் நிலையைப் பொறுத்தே அமைகிறது. துணி கிழிந்தாலோ, அதன் நெகிழ்வுத்தன்மை குறைந்தாலோ, அல்லது துவைத்தப் பிறகும் தொடர்ந்து துர்நாற்றம் வீசினாலோ; அதை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் அது.
ஒரு துணி சேதமடையாமல் இருந்தாலும், அது சரும எரிச்சலை ஏற்படுத்தினாலோ அல்லது அசௌகரியமாக உணர்ந்தாலோ, அதை மாற்றுவது புத்திசாலித்தனம். நிறம் மங்குவது மட்டும் ஒரு சுகாதாரப் பிரச்னை அல்ல, அது ஒரு அழகியல் சார்ந்த பிரச்னை.
எனவே, பழைய ஆடைகளை அப்புறப்படுத்துவது என்பது தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல்; சுகாதாரம், சௌகரித்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
அடிக்கடி புதிய ஆடைகளை வாங்குவது நல்லதா?
தொடர்ந்து புதிய ஆடைகள் வாங்குவது நம் சுகாதாரத்தையோ அல்லது ஆரோக்கியத்தையோ உயர்த்த போவதில்லை. பல நேரம் புதிய ஆடைகள் அணிவதற்கு இதமாக இருந்தாலும், அவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் மறைமுக நிதிச் செலவுகள் ஏற்படுகின்றன.
காரணம் ஜவுளி உற்பத்திக்கு நீர், ஆற்றல் மற்றும் ரசாயனங்கள் தேவைப்படுகின்றன; இது மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. ஒரு வாழ்க்கை முறை கண்ணோட்டத்தில் பார்த்தால், சமநிலை (Balance) அனைவர்க்கும் முக்கியமானது. பயன்படுத்தும் ஆடைகள் சுகாதாரமற்றதாகவோ அல்லது அசௌகரியமாகவோ இருக்கும்போது அவற்றை மாற்றுவது விவேகமானது.
ஆனால் ஃபேஷனுக்காக மட்டும் மீண்டும் மீண்டும் வாங்குவது எல்லா நேரமும் நன்மையாக இருக்காது. எனவே, புதிய ஆடைகளைக் கட்டாயத்தின் பேரில் அல்லாமல், சிந்தித்து வாங்கவேண்டும்.
ஆடைகள் நம்மைப் பாதுகாக்கின்றன; ஆனால், அவற்றின் பாதுகாப்புத் தன்மை, அவை எவ்வளவு பழையவை என்பதைவிட எவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதையே சார்ந்திருக்கிறது.
புதியதோ அல்லது பழையதோ; நேர்த்தியாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படும் ஆடைகளால் நோய் தொற்று ஏற்படுவது அரிது.
அவ்வப்போது புதிய ஆடைகளை வாங்குவது புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடும் என்றாலும், உண்மையான தேவையின்றி தொடர்ந்து ஆடைகளை வாங்குவது ஏதோ ஒரு வழியில் நாம் சுற்றுசூழலை பாதிப்படைய செய்கிறோம் என்பதையும் நம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, ஆடைத் தேர்வில் நீங்கள் மேற்கொள்ளும் சிறு மாற்றங்கள், நீண்ட கால அடிப்படையில் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தேவையற்ற மருத்துவச் செலவுகளையும் சிக்கல்களையும் தவிர்க்க உதவும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference