
சில வகை மரங்கள் இடி, மின்னலைத் தாங்கும் வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன. மின்னல் தாக்குதலின்பொழுது மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு, சிறப்பு திசுக்கள் மூலம் அதை பூமிக்குக் கடத்தி விடுகின்றன. இப்படி இடி, மின்னலை கொலையாளிகளாகப் பார்க்காமல் நட்பு சக்திகளாகப் பயன்படுத்தும் இந்த மரங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இதுபோன்ற மரங்கள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அல்மெண்ட்ரோ மரம் (Almendro): இடி, மின்னல் தாக்குதலின்போது பெரும்பாலான மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன. ஆனால், பனாமாவின் வெப்ப மண்டல காடுகளில் 55 மீட்டர் உயரம் வரை வளரும் அல்மெண்ட்ரோ மரம் (Dipteryx oleifera) மின்னல் தாக்குதல்களில் இருந்து மீள்தன்மை கொண்டதாக உள்ளது.
இந்த மரங்கள் இடி கொண்டு வரும் உயர் மின்னழுத்த அதிர்ச்சிகளை தாங்கும் வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன. மரங்கள் மின்னலால் தாக்கப்படும்பொழுது, மின்னோட்டம் பொதுவாக மரப்பட்டைகளுக்கு கீழே செல்லும். அங்கு சாறு மற்றும் நீர் அடுக்கு இருக்கும். இடி தாக்குதல்கள் மரப் பட்டைகளில் பிளவுகளை ஏற்படுத்துவதால் மரங்கள் வேகமாக திசுக்களை, பட்டைகளை புதுப்பித்துக் கொள்ளத் தூண்டப்படுகின்றது.
இடியால் செறிவடைந்த கனிமச்சத்து மிக்க நிலத்தடி நீரை உறிஞ்சும் திறனையும் இம்மரங்கள் பெற்றுள்ளன. அல்மெண்ட்ரோ மரங்கள் மின்னல் தாக்குதலுக்குப் பிறகு நன்கு செழித்து வளர்கின்றன. இந்த மரங்கள் மத்திய அமெரிக்காவிலும், கோஸ்டாரிகா காடுகளிலும் வளரும் மரமாகும். இளம் சிவப்பு மலர்களும், சதைப்பற்றுள்ள பாதாம் வடிவ பழங்களும் கொண்டு விளங்கும் இவை வறண்ட காலங்களில் 100க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு முக்கிய உணவாகின்றன.
ஊசியிலை மரங்கள்: ஊசியிலை மரங்கள் கடினமான மரங்களை விட மின்னலால் தாக்கப்படுவது குறைவாக உள்ளது. ஆனால், கூம்புகள் மின்னலால் தாக்கப்படும்பொழுது அவை கடினமான மர இனங்களை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.
பனை மரங்கள்: பனை மரங்கள் புல்லினத்தைச் சேர்ந்த தாவரப் பேரினமாகும். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் இவை பாதுகாப்பு அரணாக உள்ளன. இவற்றின் அடர்த்தியான பட்டை மற்றும் கடினமான இலைகள் தாக்குதலின் வெப்பம் மற்றும் சக்தியிலிருந்து இவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன.
பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களை தணிக்கும் தனித்துவமான திறனைப் பெற்றுள்ளன. பனை மரங்களின் தண்டுகளில் நீர் மற்றும் சாறு நிரம்பியுள்ளது. இது மின்னல் தாக்கத்திலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி வெளியேற்றும். இம்மரத்தில் உள்ள அதிக ஈரப்பதம் இயற்கையான கடத்தியாக செயல்படுகிறது. இவை இயற்கை மின்னல் கம்பிகளாக செயல்படுகின்றன.