மகரந்தச் சேர்க்கையும், பல்லுயிர்ப் பெருக்கமும்: தேனீக்களின் முக்கியத்துவம்!

மே 20: உலக தேனீ நாள்
World Bee Day
World Bee Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. இதனை உலக அளிகள் நாள் என்றும் அழைக்கின்றனர். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகளைக் குறிக்கிறது. இந்த வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும்.

சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதோடு, மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் மற்றும் அளி இனங்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. தேனீக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான வண்டு இனங்களைக் கொண்டாட இந்நாள் தொடங்கப்பட்டுள்ளது.

தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜானியா என்பவர் 1734 ஆம் ஆண்டில் மே 20 ஆம் நாளில் பிறந்ததை நினைவில் கொண்டு இந்நாளினை உலக தேனீ நாள் உருவாக்கப்பெற்றுக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு, டிசம்பரில் சுலோவீனியாவில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு ஐக்கிய நாடுகள் அவையினைச் சார்ந்த உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்த்தைத் தொடர்ந்து, மே 20 ஆம் நாள், உலக தேனீ நாள் என்று ஐக்கிய நாடுகள் அவையினாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய்ச் சொல்லப்படும் தேனீக்கள் ஆறுகால்கள் (Hexapoda) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை, பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்துத் தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கின்றன. தேனீக்கள் பூக்களைத் தேடிச் சென்று மகரந்தத்தைச் (பூந்துகள்) சேகரிக்கையில், அவற்றை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குக் கடத்துவதால், பூக்களிடையே சூலுற உதவுகின்றது. இதனால் சில மரஞ்செடிகள் காய்த்து, விதையிட்டு இனம் பெருக்குவதில் தேனீக்களின் பங்கு பெருமளவில் இருக்கிறது. இதனைப் பூந்துகள் சேர்க்கை அல்லது மகரந்தச் சேர்க்கை என்பர்.

பொதுவாக, தேனீக்களின் வாழ்க்கை முறை கவனிக்கத்தக்கது. தேனீக்கள் கூட்டமாய் ஓரினமாய்ச் சேர்ந்து வாழ்கின்றன. இவைகளைக் குமுகப் பூச்சியினம் என்பர். இத்தேனீக் கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டும் இருக்கின்றன. இவை தவிர, பணி செய்ய பெண் தேனீக்கள் அறுபதாயிரம் வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் மட்டுமே.

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்ச்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்து கிட்டத்தட்ட ஒரு கிழமையில் வெளியே பறந்து சூழலை அறிமுகப்படுத்திக் கொள்ளும். இது ‘அறிமுகப் பறப்பு’ என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு, விரைவில் ‘கலவிப் பறப்பு’ மேற்கொள்கிறது. கலவிப் பறப்பின்போது ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது. தரை மட்டத்திலிருந்து, 65 முதல் 100 அடி உயரத்தில் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது. ஒரு கூட்டில் ஒரு இராணி மட்டுமே இருக்கும்.

ஆண் தேனீக்கள் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களைக் பெற்றுக் கொள்ளும் இராணித் தேனீ, அதன் பின்னர், அது இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. ஆண் தேனீக்களிடமிருந்து பெற்ற உயிரணுக்களைக் கொண்டே, அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இராணித் தேனீயின் உணவுத் தேவையைக் கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை பணியில் அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. இராணித் தேனீ முதுமைப் பருவமானவுடன், அது முட்டையிடும் தகுதியை இழந்து விடுகின்றன. அதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிகின்றன. புதிய இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகளில் சில முட்டைகளைத் தேர்வு செய்து, இராணித் தேனீயை உருவாக்கக் கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகள் வைக்கப்பட்டு, விரைவில் பொரித்து வெளிவர ஏற்பாடுகளைச் செய்கின்றன.

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதில்லை. ஆண் தேனீக்களுக்கு, கொடுக்கு இல்லை என்பதால், தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் திறனும் இவற்றுக்கில்லை. ஆண் தேனீக்கள், தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களையேச் சார்ந்து வாழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
தேனீ வளர்ப்பு சவால்களும், பயன்களும்!
World Bee Day

புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே ஆண் தேனீக்களின் செயலாகும். ஆண் தேனீக்கள் பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்து விடுகின்றன. மேலும், சில வேளைகளில் கூட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் போது, பிற தேனீக்களால் கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுவதும் நிகழ்கின்றன.

தேனீக்களிலிருந்து கிடைக்கும் பலவிதமான பயன்களைக் கருதித் தேனீக்களைச் செயற்கையாகப் பானைகள் வைத்து அல்லது கூடுகள் அமைத்து, தேனீ வளர்ப்பு இருக்கின்றது. இங்கே தேனீக்கள் தங்கியிருந்தாலும், அவை சுதந்திரமாக வெளியேச் சென்று, தேன், மகரந்தச் சேகரிப்பில் ஈடுபடுகின்றன. இதன் மூலம், தாவர இனப்பெருக்கத்தில் தமது பங்கை வழங்குகின்றன. தேனீ வளர்ப்பின் மூலம், குறிப்பிடத்தக்க அளவில் தேன் கிடைத்து வருகின்றது. உலகில் தேனீக்களால் பில்லியன் டாலர் கணக்கில் பணப்பரிமாற்றம் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!
World Bee Day

இருப்பினும், அண்மைய காலங்களில் பெருந்தொகையாகத் தேனீக்கள் அழிந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தேனீக்களின் எண்ணிக்கை மிக விரைவாகக் குறைந்து வருவதாகத் தேனீ வளர்ப்பவர்களும், அறிவியலாளர்களும், சூழலியலாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். தேனீக்களின் அழிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச் சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலியில் தேனீக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கின்றன, தேனீக்களின் அழிவு, பயிர்கள் மற்றும் பழ வகைகளின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படும் என்பதால், தேனீ வளர்ப்பிலும், அதன் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது.

உலக தேனீ நாள் கொண்டாடப்படும் இந்நாளில், தேனீ வளர்ப்பவர்கள் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் தேனீக்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் தேனீ! எப்படி தெரியுமா?
World Bee Day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com