
அமேசான் நதி பூமியில் உள்ள வேறு எந்த நதியையும் போலல்லாது, அதன் மிகப்பெரிய அளவிலான நீர், அருகிலுள்ள அமேசான் மழைக்காடுகளுக்கு உணவளிக்கிறது. இது கரீபியன் கடலின் உயரத்தை கூட உயர்த்துகிறது.
நதிகள் இறுதியில் கடலில் கலக்கும். ஒவ்வொரு நதியின் தண்ணீரும் கடலில் கலக்கும் அளவு மாறுபடும். உலகளவில் அமேசான் நதிதான் அதிக அளவு தண்ணீரை கடலில் கலக்க செய்கிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவின் அடிப்படையில் அமேசான் நதி உண்மையில் உலகின் மிகப்பெரிய நதியாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலில் உலகளாவிய நதி வெளியேற்றத்தில் தோராயமாக 20% ஐ சுமந்து செல்கிறது. அதுவும் ஒரு விநாடிக்கு சராசரியாக 2 லட்சத்து 9 ஆயிரம் கன மீட்டர் முதல் முதல் 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் வரை நீரை கடலுக்குள் தள்ளுகிறது. அமேசான் நதி நைல், யாங்சே மற்றும் மிசிசிப்பி ஆறுகளை விட அதிக நீரைக் கொண்டுள்ளது.
இது அமேசானுக்கு அடுத்தபடியாக பெரிய நதிகளாக கருதப்படும் 7 நதிகள் கடலுக்குள் கலக்கும் தண்ணீரை விட அதிகமாகும். உலகின் எந்த நதியிலும் இல்லாத அளவுக்கு அதிக நன்னீர் அளவை அமேசான் நதி கொண்டுள்ளது.
சுமார் 4,000 மைல்கள் நீளமுள்ள அமேசான் நதி உலகின் இரண்டாவது மிக நீளமான நதியாகும். அமேசானின் ஈர்க்கக்கூடிய நீளத்தை 4,132 மைல்கள் நீளமுள்ள நைல் நதி மீறுகிறது. அமேசானுக்குப் பிறகு, அடுத்த மிக நீளமான நதி யாங்சே நதி, இது அமேசானை விட சுமார் 85 மைல்கள் குறைவாக உள்ளது.
அமேசான் நதியில் 1000க்கும் மேற்பட்ட துணை நதிகள் உள்ளன, அவற்றில் 25க்கும் மேற்பட்டவை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. சுமார் 3000 வகையான மீன்கள் இந்த ஆற்றில் வாழ்வதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமேசான் படுகை உலகின் மிகப்பெரிய வடிகால் படுகையாகும். இது தென் அமெரிக்காவின் பரந்த பகுதியை உள்ளடக்கியது.
அமேசான் நதி தென் அமெரிக்காவின் வெப்பமண்டல காடுகள் வழியாக, முக்கியமாக பிரேசிலில் பாய்கிறது. மேலும் பூமத்திய ரேகைக்கு அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் கிழக்கு நோக்கி பாய்கிறது. உலகின் மிகப்பெரிய வடிகால் படுகையைக் கொண்டுள்ள இது, கிட்டத்தட்ட 7.05 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பூமியில் வெளியேற்றப்படும் நதிகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது.
குறைந்த நீரோட்டக் காலத்தில் 1.6 கிலோமீட்டராக இருக்கும் இந்த ஆற்றின் அகலம் மழைக்காலத்தில் 190 கிலோமீட்டராக இருக்கும். அமேசான் ஆறு அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்ந்து 240 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு கழிமுகத்தை உருவாக்குகிறது. இது அட்லாண்டிக்கில் அதிக தண்ணீரை வெளியேற்றுகிறது, இதனால், ஆற்றின் முகத்துக்கு எதிரே உள்ள திறந்த கடலில் 160 கிலோமீட்டருக்கும் அதிகமாகச் சென்றாலும், கடலில் இருந்து நன்னீரைக் குடிக்கலாம்.
மழைக்காலத்தில், அமேசான் நதி அதன் கரைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி, ஆற்றின் அளவை வியத்தகு முறையில் விரிவுபடுத்துகிறது. அமேசான் மழைக்காடுகளில் பெய்யும் மழையால் அமேசான் நதியின் நீர் வெளியேற்றம் இயக்கப்படுகிறது.
அமேசான் மழைக்காடுகள் பூமியின் ஈரப்பதமான இடங்களில் ஒன்றாகும். சராசரியாக ஆண்டுக்கு 2,000 மில்லிமீட்டர் (மிமீ) க்கும் அதிகமான மழைப்பொழிவைக் கொண்டுள்ளன. இந்த மழைப்பொழிவு அதிக அளவு ஓடைகளை உருவாக்குகிறது... இது அமேசான் நதியில் பாய்கிறது.