அமேசான் காடுகளில் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான அனகோண்டா பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுகுறித்து வெளியான காணொளியில், அந்த அனகோண்டா பாம்பின் அருகே ஒரு நபர் தைரியமாகச் செல்வது நமது நாடி நரம்புகளை சிலிர்க்கச் செய்கிறது.
உலகில் உள்ள மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக அமேசான் மழைக்காடுகள் விளங்குகிறது. அங்கு விஞ்ஞானிகள் இன்றளவும் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படிதான் தற்போது அமேசான் காட்டில் ராட்சத அளவிலான அனகோண்டா பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அனகோண்டா குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகளைக் கண்டுபிடித்திருந்தாலும், இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு சராசரி அனகோண்டா பாம்பை விட இரு மடங்கு பெரியதாக உள்ளது.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அனகோண்டா பாம்புகள் சதன் கிரீன் அனகோண்டா வகையைச் சார்ந்தவை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டது நார்த்தன் கிரீன் அனகோண்டா வகை. National Geographic சேனல், அமேசான் காட்டில் நடத்திய படப்பிடிப்பின் போது, உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசானில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை முழுவதுமாக ஒரு காணொளியில் படம் பிடித்துள்ளனர். இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த காணொளியை வைத்து பார்க்கும்போது, மிக பிரமாண்ட அளவில் இருக்கும் பாம்பின் எடை சுமார் 500 கிலோவுக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 26 அடிக்கு மேல் நிளமாக உள்ளது. இந்த அளவு பிரம்மாண்ட வகை பாம்பை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே இந்தப் பாம்பு மிகவும் அரிதான வகையைச் சேர்ந்தது என விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அனகோண்டா பாம்புகள் பெரு, பொலிவியா, பிரேசில் மற்றும் பிரெஞ்சு டயானாவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த பிரம்மாண்ட அளவிலான ராட்சத அனகோண்டாவால், அமேசான் காடுகளில் மேலும் பல மர்மங்கள் ஒளிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.