
வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் வயல்கள், இயற்கையின் அருமையான ஆச்சரியங்களுள் ஒன்றாகும். அவை மண்ணின் வளத்தையும், மனிதனின் உழைப்பையும் சேர்த்து ஒரு உயிர்ப்புள்ள படைப்பாக உருவாகின்றன. வயல்களின் தோற்றம் என்பது வெறும் பசுமை அல்ல; அது வாழ்க்கையின் ஓர் அழகான பக்கத்தை பிரதிபலிக்கும் காட்சிப் பொக்கிஷமாகும்.
வயல்களின் தோற்றம்
வயல்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. தெற்கு தமிழகத்தில் காணப்படும் நெற்பயிர் வயல்கள், நீளமாகப் பரந்து விரிந்த பச்சை தரையுடன் மனதை கவரும். வெயிலில் ஒளிரும் நீர் நிலைகள், அதில் பிரதிபலிக்கும் மேகங்கள், பசுமையான நெல் செடிகள், இவை அனைத்தும் சேர்ந்து ஒரு ஓவியமாக வயல்களை மாற்றுகின்றன. மண்ணில் வியர்வை சிந்தும் வஞ்சமில்லா ஏருழவன் காளை மாடுகளை ஏர் பூட்டி ஓட்டி செல்லும் அழகு ஒரு காவியமாக வயல்களை காட்டுகின்றது.
நாற்று நடுதல்
நாற்று நடுதல் என்பது நெற்பயிர் செய்கையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டமாகும். நெல் விதைகள் முதலில் தனி முறையில் நன்கு வளரும் வகையில் சிறு நெற்சாலை வயல்களில் முளைக்க வைக்கப்படுகின்றன. சில வாரங்களுக்கு பின் அவை சிறிய நாற்றுகளாக வளரும்போது, அவற்றை வயலில் மாற்றி நட்டல் நடக்கிறது. இந்த நாற்றுகளை கைகளைப் பயன்படுத்தி வரிசையாக, இடைவெளியுடன் நட்டல்தான் நாற்று நடுதல் எனப்படுகிறது. இது நெற்பயிரின் வளர்ச்சிக்காகவும், சிறந்த அறுவடைக்கு அடித்தளமாகவும் அமைக்கிறது. சரியான நேரத்தில், சரியான முறையில் நாற்று நடுதல் மிகவும் முக்கியம்.
வயல்களின் வனப்பு
வயல்கள் ஒவ்வொரு பருவத்திலும் வித்தியாசமான அழகைக் காட்டுகின்றன. விதைகள் விதைக்கப்பட்ட காலத்தில் முளைக்கும் பருவத்தில் விதைக்கப்பட்டுள்ள விதைகள், மெல்ல மெல்ல முளைத்து பசுமை பரப்பை உருவாக்குகின்றன. இடை இடையே வரப்புகளின் வரிசை மற்றும் சலங்கை ஒலிபோல் தண்ணீர் பாயும்போது கதிர்கள் நடனமாடும் காட்சி மகிழ்ச்சியூட்டும். வளர்ச்சி நிலை என்பது ஒரு பசுமை திருவிழா போலவே.
இளநிற பசுமை, பரந்த நிலத்தின் மேல் விரிந்து கொண்டு செல்லும்போது, அது ஒரு பசுமை போர்வையைப் போல் தெரிகிறது. நாற்றின் மேல் தென்றல் வீசும்போது கடல் அலை போல் பச்சை நிற அலைகள் அசைவது கண்கொள்ளா காட்சி ஆகும். அறுவடை பருவத்தில், பச்சைத் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறி, முத்துக்களை சுமந்ததுபோல் நெற்கதிர்கள் வெறும் கண்ணிற்கு அல்ல, வாழ்விற்கே நிறம் தருகிறது.
வயல்களின் இயற்கைத் தொடர்பும், வாழ்வியலும்
வயல்கள் ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறை மற்றும் பண்பாட்டுடன் நெருக்கமாக இணைந்தவை. அவை சீரான மழையை, நல்ல சூரிய ஒளியையும் நாடுகின்றன. காலநிலை, மண் தன்மை, நீர் நிலைகள் ஆகியவை வயல்களின் தோற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஊர்களின் புறநகர் பகுதிகளில், ஒரு பசுமையான வயலின் நடுவே ஓடும் சிற்றாறு, அதன் சீரான ஒழுங்கமைப்பு, வளர் பயிராய் செழித்து வளரும் காட்சி, மலை பின்னணியில் மறையும் சூரியன் இவைகள் ஒரு கவிதைபோல் அல்லாமல் கண்கண்ட காட்சியாகவே அமைகிறது.
வயல்கள் மனிதனுக்கு உணவு வழங்கும் புனித நிலங்களாக மட்டுமல்ல; அவை ஒரு அழகிய தத்துவமாகவும், இயற்கையின் ஒரு அற்புதமான நிகழ்வாகவும் பார்க்கப்படலாம். அவற்றின் தோற்றமும், வனப்பும் நம்மை கவர்ந்திழுக்கும், மனதிற்கு அமைதியளிக்கும். நம் இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், வயல்களின் இழக்க முடியாத அழகையும், அவற்றின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பது நம் கடமையாகும்.