
கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறிமுறையினை ஏற்றம் (Shadoof) என்பர். இதனை துலா (Picottah) என்றும் சொல்வதுண்டு. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கு இந்த ஏற்றம் எனும் துலா பயன்படுகிறது.
துலா எனப்படும் ஏற்றம் என்பது ஒரு நீளமான மற்றும் நேரான மரத் தண்டு ஆகும். இம்மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக் கூடியவாறு தாங்கப்பட்டு, இத்தண்டு அச்சாகச் செயற்படுகிறது. முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும், கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும், அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனப்படுகிறது.
அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியேப் பொருத்தப்படுகிறது. இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப் பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும். அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும், துலா ஆடுகாலில் மீது தாங்கப்படுகிறது. கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது மூங்கில் கம்பு கொண்டு ஒன்றை ஒரு முனையைக் கட்டி, மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்த முனையைக் கீழேக் கொண்டு வரும் போது, பாத்திரம் கிணற்று நீருள் அமிழக் கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்க வேண்டும். பயன்படுத்தாத போது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் எடைகூடிய கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.
இந்தத் துலாவை நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து, அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டு வருவர்.
இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த ஏற்றங்கள், மின்சாரப் பயன்பாடு அதிகரித்த பின்பு காணாமல் போய்விட்டன.