

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகள் எல்லாமே இப்போது இருப்பதை விட பல மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அந்த எண்ணத்தை சுக்குநூறாக உடைக்கும் வகையில் ஒரு அட்டகாசமான உண்மையை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்.
அதாவது, சுமார் 1.2 கோடி ஆண்டுகளாக அனகோண்டா பாம்புகளின் உருவத்தில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவே இல்லை என்பதுதான் அந்த ஆச்சரியமான தகவல். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த பிரம்மாண்டமான ஆய்வின் முடிவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆராய்ச்சி!
தென் அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அனகோண்டா தொல்படிமங்களை வைத்து இந்த மாபெரும் முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். வெனிசுவேலா நாட்டின் Falcon State பகுதியில் கிடைத்த 32 பாம்புகளின் 183 முதுகெலும்பு படிமங்களை அவர்கள் மிகத் துல்லியமாக அளந்து பார்த்துள்ளனர்.
பழைய காலத்தில் பூமியின் தட்பவெப்ப நிலை மிகவும் சூடாக இருந்ததால், அப்போதிருந்த அனகோண்டாக்கள் ஏழு அல்லது எட்டு மீட்டர் நீளம் வரை ரொம்பவே பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்றுதான் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மாணவருமான ஆண்ட்ரெஸ் அல்போன்சோ-ரோஜாஸ் (Andres Alfonso-Rojas) ஆரம்பத்தில் எதிர்பார்த்தார். ஆனால், பழங்கால பாம்புகளும் இன்றைய பாம்புகளைப் போலவே நான்கு முதல் ஐந்து மீட்டர் நீளத்தில் தான் இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
பழங்கால விலங்குகளின் அழிவு!
சுமார் 12.4 முதல் 5.3 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மியோசின் (Miocene) காலத்தில் தான் பல விலங்குகள் மாபெரும் உருவத்தை அடைந்தன. அதிக வெப்பம் மற்றும் பெரிய நீர்நிலைகள் இருந்ததால், 12 மீட்டர் நீளமுள்ள புருஸாரஸ் (Purussaurus) எனப்படும் ராட்சச முதலைகளும், 3.2 மீட்டர் அளவுள்ள ஸ்டுபென்டெமிஸ் (Stupendemys) என்ற பிரம்மாண்ட நன்னீர் ஆமைகளும் ரொம்பவே சௌகரியமாக வாழ்ந்து வந்தன.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல பூமி குளிர்வடைந்து வாழ்விடங்கள் சுருங்கியதால், இந்த மாபெரும் ஊர்வன விலங்குகள் எல்லாமே முற்றிலுமாக அழிந்து போயின. இத்தனை பெரிய அழிவுகள் வந்தும், அனகோண்டாக்கள் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தங்களது ராட்சச உருவத்தோடு அப்படியே தப்பித்துவிட்டன.
உருவம், வாழ்விடம்!
இன்றைய காலகட்டத்தில் வாழும் பச்சை அனகோண்டாக்கள் சாதாரணமாக 4 முதல் 5 மீட்டர் வரையும், மிக அரிதாக 7 மீட்டர் வரையும் வளர்கின்றன. இந்த பாம்புகளின் பரிணாம வளர்ச்சியை Ancestral State Reconstruction என்ற அதிநவீன முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்த போது, 12.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவை தோன்றிய காலத்திலேயே இவ்வளவு பெரிய உருவத்தோடுதான் இருந்துள்ளன என்பது உறுதியாகியுள்ளது.
அமேசான் போன்ற பெரிய நதி அமைப்புகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மீன்கள் முதல் காபிபாரா வரையிலான தடையற்ற உணவுகள் எப்போதுமே இவற்றுக்கு கிடைத்து வந்ததே, இவை இத்தனை கோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் தப்பிப்பிழைக்க மிக முக்கிய காரணமாகும்.