பிளாஸ்டிக் அரக்கனின் அராஜகம்!

Plastic Waste
Plastic Waste

- தா. சரவணா

வளர்ந்து வரும் நாகரீகச் சூழலில், உலகம் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, பிளாஸ்டிக் பிரச்னை என்றால் மிகையாகாது. ஏனெனில், பிளாஸ்டிக் அரக்கன், நமது அனைவரின் வாழ்விலும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறான்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், நாம் கடைகளுக்குச் செல்லும்போது, மஞ்சள் பைகளை எடுத்துச் சென்றோம். அதன்பின்னர் இப்போது,வெறும் கைகளை வீசி கடைகளுக்குச் சென்று, பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வாங்கி வருகிறோம். அதன்பின்னர் அந்தப் பிளாஸ்டிக் கவர்கள், கழிவுநீர் கால்வாயில், குப்பைகளாகப் போடப்படுகிறது. இப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பார்ப்பதற்கு மெலிதாக, அழகிய தோற்றத்தில் காணப்பட்டாலும், அதன் கோர முகத்தை நம்மில் பலரும் அறிந்திருக்கவில்லை. இதன் பாதிப்புகளில் முக்கியமானது, மழை நீர், பூமிக்கடியில் செல்வதை இது தடுப்பதுதான். நிலத்தடி நீர் மட்டம், உயர்வதை பிளாஸ்டிக் தடை செய்கிறது. இதனால் எதிர்காலத்தில் கடும் குடிநீர் பிரச்னைக்கு வழி ஏற்படும்.

பிளாஸ்டிக் பொருட்கள் ஆறுகள் வழியாக கடலில் சென்றடைகின்றன. அப்போது பிளாஸ்டிக் துகள்களின் தடிமன் 0.5 மிமீ அளவுக்கு குறைந்த அளவில் காணப்படும். பின்னர் கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் உப்பின் மூலமாகவும், மீன்களின் மூலமாகவும் மீண்டும் நமது உடலுக்குள் பிளாஸ்டிக் துகள்கள் வந்தடைகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும்போது, அதிலிருந்து உருவாகும் நச்சு வாயுக்கள், நாம் சுவாசிக்கும்போது, நுரையீரல் மூலமாக உடலுக்குள் சென்று, கொழுப்பு சேமித்து வைக்கப்படும் அடிபோஸ் திசுக்களின் இடையே சேகரித்து வைக்கப்படுகிறது. இவை நம் உடம்பில் இருந்து வெளியேற 11 ஆண்டுகள் ஆகும் என்கிறது விஞ்ஞானம்.

இதையும் படியுங்கள்:
அரச மரம் வழங்கும் மருத்துவ நன்மைகளை அறிவோம்!
Plastic Waste

நாம் ரோட்டில் செல்லும்போது பல இடங்களில் சாலையில் சுற்றித் திரியும் பசு போன்ற கால்நடைகள், உணவு என நினைத்து, பிளாஸ்டிக் கேரி பேக்குகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும். இது மிகவும் கொடுமையான ஒன்றாகும். பறவையினங்களும் இதற்கு விதி விலக்கல்ல.

இப்படி கொடூர முகம் கொண்ட பிளாஸ்டிக்கை அரசு நினைத்தால் உடனடியாக தடை செய்ய முடியாதா? என இதைப் படித்துக்கொண்டிருப்பவர்கள் மனதில் கேள்வி எழலாம். ஆனால், அரசுகளுக்கு இதைக்காட்டிலும் முக்கியப் பணிகள் பல உள்ளதால், அவர்கள் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்ய மட்டும் முன்வருவார்கள். நாம் நமது சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்றால், நாம்தான் களத்தில் இறங்கி, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முன் வர வேண்டும். முக்கியமாக நாம் கடைகளுக்குச் செல்லும்போது, கைகளில் துணிப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பொருட்கள் கொடுத்தால், உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். மீண்டும், மீண்டும் கடைக்காரர்கள் அதே தவறை செய்யும்பட்சத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம் புகார் தரலாம். இப்படி செய்தால் பிளாஸ்டிக் அரக்கன் மெல்ல, மெல்ல ஒழிக்கப்படுவான் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com