இறைச்சி, பால் மற்றும் முட்டை உற்பத்தி போன்ற விலங்கு விவசாயமானது நமது உணவு அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இருப்பினும் இந்த நடைமுறையுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை புரிந்து கொள்வதால் நமது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத விலங்கு விவசாய முறையை தேர்ந்தெடுத்து, நிலையான எதிர்காலத்தை நோக்கி செயல்பட முடியும். விலங்கு விவசாயத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
விலங்கு விவசாயமானது கிரீன் ஹவுஸ் வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக பசுக்கள், காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் சக்தி வாய்ந்த பசுமை இல்ல வாயுவான மீத்தேனை உற்பத்தி செய்கின்றன. மேலும் கால்நடை தீவனத்தின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து, விலங்கு பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் குளிரூட்டுதல் போன்றவற்றால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.
விலங்கு விவசாயத்திற்கு நிலம், நீர் மற்றும் பிற வளங்கள் தேவை. கால்நடை வளர்ப்புக்கு மேய்ச்சல் நிலம் மற்றும் தீவனப் பயிர்களை பயிரிடுதல் ஆகியவை தேவைப்படுகின்றன. இது காடழிப்பு மற்றும் வாழ்விட அழிவுக்கு வழிவகுக்கிறது. மேலும், உணவுக்காக விலங்குகளை வளர்ப்பதற்கு கணிசமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இது பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
தீவனப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரம் மற்றும் ரசாயனங்கள் நீர் ஆதாரங்களை மாசு படுத்தலாம். மேலும் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலில் கலந்து நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும்போது, மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
விலங்கு விவசாயம் அதிகரிப்பதால் இயற்கை வாழ்விடங்கள் அழிக்கப்படலாம். இதன் விளைவாக பல்லுயிர் இழப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கால்நடை வளர்ப்பிற்கு காடுகளை அழிக்கும்போது, பல தாவரம் மற்றும் விலங்கு இனங்களின் உயிர்கள் பறிப்போகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது.
மேலும், விலங்குகளை வளர்க்கும் போது நோய் பரவுவதை தடுக்கவும் விலங்குகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அத்தகைய விலங்குகளில் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகமாக வளர்ந்து, அந்த பொருட்களை உட்கொள்ளும் மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
விலங்கு விவசாயத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, விலங்குகள் சார்ந்த உணவைக் குறைத்து தாவர அடைப்படையிலான உணவுகளுக்கு மாறுவது நல்லது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவு முறையை நோக்கி முறையான மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.