
பூமியின் தென்துருவப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தாவது பெரிய கண்டம் அண்டார்டிகா. பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் பத்து சதவிகிதம் அண்டார்டிகா கண்டமாகும். இக்கண்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் தொண்ணுற்றி எட்டு சதவிகித நிலம் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. உலகிலேயே இக்கண்டம்தான் மிகவும் குளிர்ந்த பகுதியாகும். இதனால் இந்தக் கண்டத்தில் மனிதர்கள் வசிப்பதில்லை.
உலகத்திலேயே எங்கேயும் இல்லாத அளவிற்கு தாங்க முடியாத குளிர் இக்கண்டத்தில் நிலவுகிறது. இந்த கண்டமானது சுமார் 6000 அடி ஆழத்திற்கு பனிப்பாறைகளாலே மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இந்தக் கண்டத்திலே மனிதர்களால் வசிக்க முடிவதில்லை. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் இக்கண்டத்திற்கு வந்து ஆராய்ச்சிகளை செய்துவிட்டு திரும்பிச் செல்லுகிறார்கள்.
அண்டார்டிகா கண்டத்தில் நிலவும் தட்ப வெப்பநிலையை அறிந்தால் நமது உடல் சில்லிட்டுப் போகும். அண்டார்டிகா கண்டத்தின் தட்ப வெப்பநிலை குளிர்காலத்தில் -70°C ஆகவும் கோடைக்காலத்தில் -35°C ஆகவும் உள்ளது. 1983ம் ஆண்டில் இக்கண்டத்தில் அமைந்த ‘வோஸ்டாக்’ எனும் இடத்தில் தட்ப வெப்பநிலையானது -90°C எனப் பதிவாகியுள்ளது.
அண்டார்டிகாவில் ஊர்வன இனம் இல்லை. இக்கண்டத்தில் சுமார் நாற்பது வகையான பறவைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அல்பாட்ராஸ், கல்ஸ், ஸ்குஆஸ், டெர்னஸ் போன்ற பறவைகள் இங்கு வாழ்கின்றன. அண்டார்டிகா கண்டத்தில் பூச்சி இனங்கள் சிறிதளவே காணப்படுகின்றன. இறக்கையில்லா ‘மிட்ஜ்’ எனும் ஒரு வகை ஈக்கள் இக்கண்டத்தில் காணப்படுகின்றன.
அண்டார்டிகா என்றாலே நம் நினைவிற்கு வருவது பெங்குயின்கள்தான். இந்த பெங்குயின்கள் இந்தக் கண்டத்தில் மட்டுமே வசிக்கின்றன. இவை கடற்கரைப் பகுதிகளில் தங்கள் கூட்டை அமைத்து வாழ்கின்றன. சுமார் நான்கு அடி உயரம் வரை வளரும் பெங்குயின்கள் பறவை இனத்தைச் சேர்ந்தவை என்றாலும், அவற்றால் பறக்க முடியாது. பெண் பெங்குயின்கள் இடும் முட்டைகளை ஆண் பெங்குயின்கள் ஒன்பது வாரங்கள் கடும் குளிரில் அடைகாக்கின்றன.
அண்டார்ட்டிகா பகுதியில் வாழும் மற்றொரு பாலூட்டி சீல். இவ்வகை பாலூட்டிகள் பெரும்பாலும் தண்ணீரிலேயே வாழ்கின்றன. இவை கடற்கரைப்பகுதியில் தங்கள் இருப்பிடங்களை அமைத்துக் கொள்கின்றன. சீல்கள் மீன்களை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. சீல்களில் லெப்பர்ட் சீல் (Leopard seals), வெட்டெல் சீல் (Weddell seals), ராஸ் சீல் (Ross’s seal), க்ராப் ஈட்டர் சீல் (Crab eater seals) என பல வகைகள் உள்ளன. இதில் அண்டார்டிகா கண்டத்தில் சுமார் 20 மில்லியன் கிராப்ஈட்டர் சீல்கள் காணப்படுகின்றன. லெப்பர்ட் சீல்கள் பெங்குயின் பறவைகளைப் பிடித்து சாப்பிடும் இயல்புடையன. இது மட்டுமின்றி, இவை பிற சீல்களையும் மீன்களையும் சாப்பிடுகின்றன.
அண்டார்டிகா கண்டத்தை ஆராய்வதற்காக பல ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1965ம் ஆண்டில் எந்த நாடும் அண்டார்டிகாவில் தங்களுடைய ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துக் கொள்ளலாம் என்றும் சர்வதேச அளவில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் உலகின் பல நாடுகளும் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிலையங்களை அமைத்து அக்கண்டத்தை ஆராய்ச்சி செய்தவண்ணம் உள்ளன.
நம் இந்தியா 1983ம் ஆண்டில் அண்டார்டிகா கண்டத்தை ஆராயும் பொருட்டு ஓரு ஆராய்ச்சி நிலையத்தை அங்கு அமைத்துள்ளது. அதற்கு ‘தட்சிண் கங்கோத்ரி’ (Dakshin Gangotri) என்று பெயர். இப்பகுதியானது உறைபனியால் மூடப்பட்ட காரணத்தினால் 1989ம் ஆண்டில் வேறொரு இடத்தில் இந்தியா ‘மைத்ரி’ (Maitri) என்ற இரண்டாவது ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது. பின்னர் 2012ல் ‘பாரதி’ (Bharati) என்ற ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது.
கோடைக்காலத்தில் பல மாதங்கள் தொடர்ந்த பகல் பொழுதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். குளிர்காலத்தில் தொடர்ந்து பல மாதங்கள் இரவாகவே இருக்கும்.