
நமக்கு நேரிடையாகத் தெரிந்து தனது ஒளி மூலம் நமக்கு ஆற்றலை வழங்குகிறது சூரியன். ஆனால், அதன் ஒளியை நேரடியாக பெறக் கூடாது. அப்படிப் பெற்றால் அதன் புற ஊதா கதிர்கள் நம் சருமம் மற்றும் கண்களை பாதிக்கும் என்பதால். அதனைத் தடுக்க இயற்கை அதுவாகவே ஒரு பாதுகாப்புக் கவச அமைப்பை வானில் ஏற்படுத்தி உள்ளது. அதுதான் ஓசோன் படலம். சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை முழுமையாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரியோ டி ஜெனிரோவில் 1992ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில், ‘இந்த பூமியை காக்கும் ஓசோன் வீழ்ச்சிக்கு வளர்ந்த நாடுகளான தாங்கள்தான் ரசாயன கலவைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது இதற்கு முக்கியக் காரணம்’ என்று ஒப்புக்கொண்டனர். பின்னர் மாண்ட்ரியலில் நடைபெற்ற மாநாட்டில் ஓசோனை பாதுகாக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்நாளை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் 16 உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக ஐ.நா.வால் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம். அது நீல நிறத்தைக் கொண்ட ஒரு வாயு. நாம் குடிக்கும் தண்ணீருக்கு சுவை சேர்ப்பது, கடற்கரை காற்றுக்கு ஒருவித வாசனையை தருவது எல்லாம் ஓசோன்தான். 1940ம் ஆண்டு 'ஸ்கூன்டின்' எனும் விஞ்ஞானிதான் அதற்கு 'ஓசோன்' எனப் பெயரிட்டார். காக்கும் - அழிக்கும் இரட்டைக் குணங்களை கொண்டது ஓசோன். புவியின் மேல் 20 முதல் 30 கி.மீ. உயரத்தில் வளி மண்டலத்தில் ஓசோன் போர்வை போல் உள்ளது. ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 90 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேட்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.
பொதுவாக, வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஓசோன் வாயு உருவாக்கும் அளவும், அதன் பிறகு அது சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும். அதனால் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் இருந்தன. வளர்ந்த நாடுகளின் தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவை வெளியிடும் கார்பன் வாயு மேலே சென்று ஓசோன் படலத்தில் துளைகளை ஏற்படுத்தி விடுகின்றன. வீட்டில் பயன்படுத்தும் பிரிஜ்ஜிலிருந்து வெளிவரும் சி.எப்.சி என்ற வாயும் ஓசோன் படலத்தை பாதித்து வந்தன.
ஐ.நா.வின் ஒப்பந்தப்படி தற்போது வீடுகளில் ஏசி மற்றும் பிரிட்ஜில் தற்போது சி.எப்.சி வாயு பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், ஏற்கெனவே ஏற்பட்ட ஓசோன் படல துளைகளால் பூமியில் பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு 10 ஆண்டிலும் ஏறத்தாழ இரண்டு சதவீத ஓசோன் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பூமி வெப்பமடைந்து கடல் மட்டம் உயரும். தற்போது கடல் மட்டம் முன்பு இருந்ததை விட 25 செ.மீ. உயர்ந்துள்ளது. இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால் சருமப் புற்றுநோய் மனிதர்களுக்கு அதிகம் வரும்.
இதற்கு ஒரே தீர்வு நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் சுற்றுச்சூழல் சேதம் அடையாதவாறு பார்த்துக்கொள்வதுதான். அதன் மூலம் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க நாம் பங்களிக்கிறோம் என்பதை உணர்த்துவதே உலக ஓசோன் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம். ஓசோன் படலத்தை பொத்தல் ஏற்படாமல் பாதுகாக்க அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு அளவை குறைக்கலாம்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வர வேண்டும். வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தாமல் இருந்தாலே உலகில் கார்பன் அளவு பாதி குறையும். எனவே, முடிந்து மட்டும் வாகனப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
இந்த நெறிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்றும் பட்சத்தில் அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலத்தின் அடர்த்தி அதிகமாகி இயல்பு நிலைக்குத் திரும்பும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்புவியை அதன் தன்மை மாறாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளிலும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவே ஓசோன் பாதுகாப்பு தினம் போன்ற விழிப்புணர்வு தினங்கள் கொண்டாட ப்படுகின்றன.