பிரம்மாண்டமான அண்டார்டிகா கண்டத்தில் தாவரங்கள் வளர்வது பொதுவாக ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் அது உண்மையில் அழிவுக்கான எச்சரிக்கையாக தான் பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் வெப்ப மயமாவதால் பனியால் ஆன ஒரு கண்டத்தில் அடிக்கடி பெரிய பாறைகள் நீரில் மூழ்கி கடல்நீர் மட்டத்தை உயர்த்துகிறது. உயரும் கடல் நீர் மட்டம் நிலப் பரப்புகளில் புகுந்து மனிதர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும். ஏற்கனவே இட நெருக்கடி உள்ள மனித இனத்திற்கு இது மேலும் துன்பத்தைக் கொடுக்கும்.
பனி படர்ந்த வெண்மையான அண்டார்டிகா கண்டம் தற்போது தாவர வளர்ச்சியால் பச்சை நிறமாக மாறிக் கொண்டே வருகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் கண்டத்தில் பசுமை பரவுதல் தொடர்ச்சியாக 30% அதிகமாகி உள்ளது. 1986 மற்றும் 2021 க்கு இடையில், அண்டார்டிக் கண்டம் முழுவதும் தாவரங்களின் பரப்பளவு பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. செயற்கைக் கோள்களின் தரவுகளின் படி ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்த பாசிகள் தற்போது 12 சதுர கிலோமீட்டர் வரை அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அண்டார்டிக் கண்டத்தில் பனி மற்றும் வெற்றுப் பாறைகள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் தாவரங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்து வருகிறது அண்டார்டிகா. இது உலகமும் வெப்பம் அடைவதற்கான அறிகுறியாகும்.
அங்கு அதிக வெப்பம் ஏற்படுவது சகஜமாகி வருகிறது. குறிப்பாக ஒரு பகுதியில், அதிகபட்ச எண்ணிக்கையிலான தாவரங்கள் வளர்ந்து வருகின்றன.
இதே காலகட்டத்தில் அண்டார்டிகாவில் கடல்பனி அளவில் குறைந்து கொண்டே வருகிறது. பனிப் பாறைகள் தொடர்ச்சியாக உருகிக் கொண்டே வருகிறது. அண்டார்டிக் தீபகற்பத்தில் நாம் காணும் தாவரங்கள் பெரும்பாலும் பாசிகளாக உள்ளன. நிலப்பரப்பின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்னும் பெருமளவில் பனி மற்றும் பாறைகளால் ஆதிக்கம் செலுத்துகிறது.
அண்டார்டிகாவில் மண் பரப்பை பொதுவாக பார்க்க முடியாது அங்கு மண் பரப்புகளும் உருவாகவில்லை. ஆனால், அதன் தற்போதைய பசுமை புதிய கரிமப் பொருட்களைச் சேர்க்கும், மேலும் மண் உருவாவதை எளிதாக்கும் மற்ற தாவரங்கள் வளர வழி வகுக்கும். இந்த சூழல் அண்டார்டிகாவின் எதிர்காலம் குறித்த தீவிர கவலைகளை எழுப்புகிறது.
அண்டார்டிகாவைப் பாதுகாக்க, இந்த மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அவை ஏற்படுவதைத் துல்லியமாக அடையாளம் காண வேண்டும். பசுமையின் போக்கை கட்டுப்படுத்த வேண்டும். அண்டார்டிகா முழுவதும் மனிதர்கள் வாழத் தகுதி பெறும் போது மற்ற கண்டங்கள் பேரழிவை சந்தித்து நீரில் மூழ்கும் வாய்ப்புகள் அதிகம்.