
சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை என்ற வேதனை வேகமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது. அதற்கு, இப்போதிலிருந்தே கடுமையான கோடையும் தூபம் போடத் தொடங்கிவிட்டது. அனைவருடைய உள்ளத்திலும் இந்தப் பிரச்னை சோகத்தைத் திணிக்கிறது. தன்னிச்சையின்றி, நம் வாய், ‘இந்த வருஷம் தண்ணீருக்கு என்னபாடு படப்போகிறோமோ தெரியவில்லையே’ என்று யாரும் கேட்காமலேயே புலம்புகிறது.
இந்தக் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்னைக்குப் பல காரணங்களை அடுத்தடுத்து வரிசைப்படுத்தலாம். எல்லாமே நமக்கு நன்கு தெரிந்தவைதான். இந்த வரிசையின் ஒவ்வொரு காரணத்திலும் நம் சுயநலம் மிகப் பெரிதாக வியாபித்திருப்பதையும் குற்ற உணர்வோடு நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
நகரின் பல இடங்களில் ‘குளக்கரைச் சாலை’, ‘ஏரிக்கரைச் சாலை’, ‘பொன்னார் குட்டை’, ‘இரட்டை ஏரி சாலை’, ‘நீர்வழித் திட்ட சாலை’ என்றெல்லாம் அந்தந்த சாலைகளின் பெயர்ப் பலகைகளை மட்டும் காணமுடிகிறதே தவிர, அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி குளத்தையோ, ஏரியையோ, குட்டையையோ, நீர்வழித் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடத்தையோ நம்மால் காணவே முடிவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
தாகமே எடுக்காதபடி, தண்ணீரே குடிக்க வேண்டாதபடி நாமும் எத்தனை நாளைக்குதான் வீட்டிலும், அலுவலகத்திலும், பயணிக்கும் கார், ரயில் போன்ற வாகனங்களிலும், ஓட்டல்களிலும், மருத்துவ மனைகளிலும், ஏன் சில ஊர்களில் பேருந்து நிறுத்தங்களிலும்கூட ஏர்கண்டிஷன் கருவியைப் பொருத்திக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும்?
அந்தக் கருவிகள், வீட்டினுள் ஈரப்பதத்தை உறிஞ்சி வெம்மைக் காற்றாக வெளியேற்றி, நம்மைக் குளிர்விக்கின்றன. அதாவது வான்வெளியில் செயற்கையாக உஷ்ணத்தைப் பரப்பி அங்கு மிதந்துவரும் நீர்ப் பையான மேகத்தையும் வறண்டு போகவைக்கும் கொடுமைக்கும் நாம் கேவலமாக ஆளாகிறோம்.
நீர்நிலைகள் எல்லாம் இப்போது கட்டாந்தரையாக்கப் பட்டு அவற்றின்மேல் கான்க்ரீட் வீடுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறன. ‘ஏரிக்குமேல்தானே வீடு கட்டியிருக்கிறோம், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் நிரம்பவே இருக்கும்’ என்று அந்த வீடுகளில் குடியேறி, இறுமாந்தும் போகிறோம். எத்தனை நாளைக்கு? நிரந்தரமாக, என்றென்றும் வற்றாமல் நீர் சுரந்துகொண்டிருக்க அந்த நிலத்தடி, மகாப் பெரிய ஊற்றா என்ன?
இப்படி நமக்கு குடியிருப்புகள் வேண்டும் என்பதற்காக பறவைகளின் குடியிருப்புகளான எல்லா மரங்களையும் அழித்தோம். நம்மை இளக்காரமாக கேலி செய்யும் வகையில் புயலும் தன் பங்குக்கு, நாம் அங்கே இங்கே என்று விட்டுவைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச மரங்களையும் வேரோடு கீழே சாய்த்து விட்டது. பசுமை வெறும் வார்த்தையில் மட்டும்தான் இப்போது இருக்கிறது!
மழைநீர் வடிகால் பாதை அமைக்கும் திட்டம்தான் நமக்குக் கொஞ்சம் ஆறுதல். ஆனால் அதையும் நாம்தான் நம் சுயநலத்துக்காக எப்படி உருக்குலைத்து விட்டோம்! தரையிலிருந்து ஐந்தடி ஆழத்துக்கு அந்த வடிகால் கட்டப்பட்டிருக்கிறது. சாலையில் தேங்கும் மழைநீர் சாலை நெடுக இருக்கும் துவாரங்கள் வழியாக வடிகாலில் இறங்கி, குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேர, அங்கிருந்து அது சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக நமக்கே விநியோகிக்கப்படுவதுதான் அந்தத் திட்டம்.
ஆனால் அதையும் சென்னையில் சில இடங்களில் கழிவுநீர்க் கால்வாயாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் கொடுமை. ஆமாம், இந்த வடிகாலுக்கும் கீழே இன்னும் சில அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர் குழாய்களுடன்தான் ஒரு தெருவின் கட்டடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் போய்ச் சேரவேண்டும்.
ஆனால் அந்த ஆழத்துக்கான கட்டுமான செலவை மிச்சப்படுத்தும் சுயநலமும், அடுத்தவர் நலன் பற்றிக் கொஞ்சமும் அக்கறை கொள்ளாத அகம்பாவமும்தான் இதுபோன்ற முறைகேடான இணைப்புக்குக் காரணம். துரதிருஷ்டவசமாக அந்தந்தப் பகுதியிலுள்ள சில அதிகாரிகளும் ஊழியர்களும் இதற்குத் துணைபோவது இன்னும் வேதனை தருகிறது.
போதாக்குறைக்குப் புறநகரில், ஏன் நகருக்குள்ளேயும் 40 மாடி, 45 மாடி குடியிருப்பு கட்டடங்களும் உருவாகின்றன. இங்கு குடியிருக்கப் போகிறவர்களுக்குக் குடிநீர் கிடைப்பதை கட்டுமான நிறுவனங்கள் உறுதி செய்கின்றனவா என்பது தெரியவில்லை. அல்லது ‘எப்படியாவது சமாளிச்சுப்பானுங்க, அதான் கேன் வாட்டர் விற்கறாங்க இல்லே!‘ என்ற பொறுப்பற்ற வியாபாரமா என்றும் புரியவில்லை.
ஹும், நீரின்றி அமையாது உலகு; ஆனால் நீரின்றி அழிந்திடுமோ நகரம்?