தெருநாய்கள் தொல்லைத் தீருமா? நாய்களின் இனப்பெருக்கம் அடங்குமா?

street dogs
street dogs

சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு நாய்களாலும் தெரு நாய்களாளும் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. இது சமூக ஆர்வலர்களுக்கு பெருத்த கவலையை அளிக்கிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில், நாய்களை பொது இடங்களில் திரிய விட்டால், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இவற்றை மீறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவிவித்துள்ளது. விதிகளை கடைப்பிடிக்காத நாய்களின் உரிமையாளர்கள் பற்றி புகார் அளிக்க 1913 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

நாய்களுக்கான கணக்கெடுப்பானது சென்னையில் 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் நாய்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்படாத நிலையில், இப்போது இவற்றின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்திருக்கலாம்.

சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே வீட்டு நாய்கள் மட்டுமல்ல. தெருநாய்கள் தரும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. தெருவுக்கு எப்போதும் பத்து நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை யாரை எப்போது கடிக்கும் என்பது தெரிவதில்லை. எனவே, இவற்றைக் கடக்கும் மக்கள் பயத்துடனேயே நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சிக்கலிலிருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக கையில் பிஸ்கெட் பாக்கெட்டுடன்தான் பலரும் போகின்றனர். இவற்றுடன் ஆங்காங்கே சுற்றித் திரியும் கால்நடைகள் வேறு நம்மை பயமுறுத்துகின்றன.

இருசக்கர வாகனங்களில் போகும்போது தெரு முழுவதும் ஆங்காங்கு படுத்துக் கிடக்கும் நாய்கள் ஒட்டுமொத்தமாக பாய்ந்து வருகின்றன. அவை நம்முடைய காலைத்தான் பெரும்பாலும் குறி வைக்கின்றன. இதனால் பலரும் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

நாய்களைப் பிடித்துச் செல்லும் புளூகிராஸ் அமைப்பினர், நாய்களுக்கு இனவிருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, அப்பகுதியிலேயே கொண்டு வந்து விடுகின்றனர். அதனால் அந்த நாய்கள் இப்பகுதியிலேயே சுற்றுகின்றன. எனவே, நாய்களை முழுமையாகத் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓநாய் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றிய நாய்கள் கூட்டமாகவே செயல்படுபவை. ஒரு நாய் ஒருவரை துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓடிப்போய் காரணமின்றி அவரைக் கடிக்கும். இது இயற்கையாகவே இவற்றின் மரபணுவில் கலந்த ஒரு செயல்.

ரேபிஸ் கிருமி ஒருவரை தாக்கி, அதன் அறிகுறி தென்பட தொடங்கிவிட்டால், உலகில் எந்த சிறந்த மருத்துவராலும் அவரை காப்பாற்ற முடியாது. நாய்க்கடி விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஒவ்வொரு நிமிடமும் நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களில் சிலருக்கு நாய்க்கடியின் ஆபத்து தெரிவதில்லை. நாய் கடித்துவிட்டால் ஏதோ பூரான் கடித்துவிட்டதை போல சுண்ணாம்பு வைத்துவிட்டு செல்பவர்கள், இன்னும் கிராமங்களில் உள்ளனர். இதனால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

நாய் கடித்துவிட்டால் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

நாய் கடித்துவிட்டால் உடனே குழாய் தண்ணீரை மிக வேகமாக திறந்து விட்டு, அதில் காயத்தை கழுவ வேண்டும். முதலில் ஒரு நிமிடத்திற்கு குழாய் தண்ணீரில் காயத்தை காட்டிவிட்டு, பிறகு சோப்பு போட்டு அந்த இடத்தை நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். நாய் கடித்ததால், அதன் உமிழ் நீரில் இருக்கும் ரேபிஸ் வைரஸ், அந்தக் காயத்தில் சோப்புபட்டதும் இறந்து விடும். இப்படி கழுவிய பிறகு, சிறிதும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு சென்று ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ,அவ்வளவு விரைவாக ஊசி போட்டு கொள்வது நல்லது. வீட்டு நாய் கடித்தாலும், இந்த ரேபிஸ் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது தெரியுமா?
street dogs

நாய் கடித்த அன்றைய தினத்தில் இருந்து ஐந்து தவணைகளாக மருத்துவரின் அறிவுறைப்படி, முறையான கால இடைவெளி விட்டு இந்த ரேபிஸ் ஊசியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். காயம் அதிகமாக இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி 90-வது நாளும் ஆறாவது தவணையாக ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

கடிபட்ட இடத்தை துணியை வைத்து மூடக்கூடாது.

ஐந்து தவணை ஊசி முடியும் வரை மருத்துவர்கள் அறிவுரைப்படி உணவு பத்தியம் இருக்க வேண்டும்.

முக்கியமாக, கடித்த நாயை அடித்துக் கொல்வதோ, அதை விரட்டுவதோ கூடாது. அடுத்த 15 நாட்களுக்கு, அந்த நாயை கண்காணிக்க வேண்டும். ரேபிஸ் பாதித்த நாய் ஒருவரைக் கடித்தால், அந்த நாய் ரேபிஸ் வைரஸ் தாக்கி 15 நாட்களில் இறந்து விடும். அதிலிருந்து அந்த நாய் ரேபிஸ் நாய்தான் என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

ஆனால், முதலில் ஊசி போட்டுக் கொண்ட பிறகுதான், இந்த ஆராய்ச்சியையெல்லாம் செய்ய வேண்டும்.

ண்மையில் தெருநாய்களின் பெருக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம்,''தெரு நாய்கள் சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது. அத்தகைய நேரங்களைக் கையாள்வதில் சமநிலை தேவை''என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள அரசும் உச்ச நீதிமன்றத்தில், ’மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக வரும் புகார்களின் எண்ணிக்கையில்,தெருநாய்த் தொல்லைகள் குறித்த புகார்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வீட்டு நாய்களின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்ற, வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள தமிழக அரசு, எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தெருநாய்கள் சார்ந்தும் முறையான அரசாணைகளை வெளியிட்டால் நல்லது.

இதுவே பொதுமக்கள் அனைவரின் உடனடி எதிர்பார்ப்பும் ஆகும்.

ஆவனச் செய்யுமா அரசு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com