
கோடைக்காலம் ஆரம்பித்த உடன் முதலில் நினைவுக்கு வருவது வெயில். அடுத்தது விடுமுறை. கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், பணிச் சுமையிலிருந்து ஆறுதல் தேடவும் பெரும்பாலான மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அத்தகைய நேரங்களில் வீட்டில் இருக்கும் தாவரங்களை ஈரப்பதத்தோடு, வாடிப் போகாமல் பராமரிக்கும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தேங்காய் ஓடுகள்:
கோடை காலத்தில் மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் செடிகளின் வேர்களில் உலர்ந்த தேங்காய் பொடியை தூவலாம். தேங்காய் ஓடுகளை உலர வைத்து அவற்றிலிருந்து தயார் செய்யப்படும் பொடியை செடிகளின் வேர்களில் போட்டு, நன்கு கலந்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றிவிட்டு செல்லலாம்.இப்படிச் செய்வதன் மூலம் தாவரங்கள் நீண்ட நாட்கள் ஈரப்பத்துடன், குளிர்ச்சியான நிலையிலும் இருந்து வாடிப் போகாமல் இருக்கும்.
தண்ணீருக்கான ஏற்பாடு:
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மிகவும் முக்கியம் என்பதால் வீட்டை விட்டு கிளம்பும்போது சில நாட்களுக்கு நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் செடியை கொடுத்து தண்ணீர் ஊற்றச் சொல்லலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் , கடைகளில் விற்கப்படும் தானியங்கி நீர் இறைக்கும் இயந்திரத்தை பொருத்தலாம். இத்தகைய செயல்கள் மூலம் தண்ணீர் ஊற்றாமல் தாவரங்களை நீண்ட நாட்கள் பராமரிக்க முடியும்.
சூரிய ஒளியில் வைக்காதீர்கள்:
சில நாட்களுக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளப் போகிறோம் என்றால், பயணத்திற்கு வீட்டை விட்டு கிளம்பும் முன் பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ செடிகளை விட்டுச்செல்லாமல், அதற்கு பதிலாக, தாவரங்களை குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். அதாவது வீட்டின் மற்ற இடங்களை விட குளியலறை குளிர்ச்சியாக இருப்பதால், குளியலறையில் தாவரங்களை வைப்பது சிறந்தது.
உரத்தைப் பயன்படுத்தலாம்:
நீண்ட நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலில் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பாக,செடிக்கு ஊட்டச்சத்து வழங்கக் கூடிய உரத்தைப் பயன்படுத்துங்கள். இது தாவரங்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதோடு, தாவரங்களின் வளர்ச்சியையும் ஊக்குவித்து செடியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
கோடைக்கால விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் மேற்கூறிய முறைகளை கையாண்டால் செடிகள் நாம் திரும்பி வரும்போது நம்மை வரவேற்கக் காத்திருக்கும்.