
சம்மர் வந்துவிட்டது. நம் உடலை நீரேற்றத்துடன் வைத்துப் பாதுகாக்க வேண்டிய காலம். நுங்கு, இளநீர், தர்பூசணி ஆகிய இந்த மூன்றையும் வாங்குவதற்குத்தான் மக்கள் கூட்டம் அலைமோதும். அதிகளவு நீர்ச்சத்தும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய வாட்டர் மெலனை வாங்கும்போது அது நன்கு பழுத்ததா, உடனடியாக உண்ணக் கூடியதா என்று பரிசோதித்து வாங்குவது அவசியம். அதற்கான சில ஆலோசனைகள் இதோ...
1.சுகர் ஸ்பாட் சோதனை: சுகர் ஸ்பாட் என்பது வாட்டர் மெலன் கொடியின் தண்டுப் பகுதி பழத்துடன் இணையும் இடம். அந்த இடம் அளவில் சிறியதாகவும், உலர்ந்தும், கொஞ்சம் பள்ளமாகவும் இருந்தால் அது சரியாகப் பழுத்த பழம். சுகர் ஸ்பாட் பெரிதாகவோ அல்லது ஈரத்தன்மை கொண்டிருந்தாலோ அது சரியாகப் பழுக்காதது அல்லது அதிகம் பழுத்துவிட்டது எனக் கூறலாம்.
2.பழத்தின் நிறம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி உள்ளதா எனப் பார்க்கவும்: நன்கு பழுத்த தர்பூசணி, புள்ளிகளோ, தழும்பு போன்ற தோற்றமோ எதுவுமின்றி நல்ல பச்சை நிறத் தோற்றம் கொண்டிருக்கும். வெளிப்புறத் தோலில் அடர் பச்சை நிறம் கொண்ட கோடுகள் காணப்படும். வெளிரிய நிறமுடைய வாட்டர் மெலன் இனிப்பு சுவை குறைவாக உள்ளதாயிருக்கும். அந்த மாதிரி நிறம் கொண்ட பழத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
3.பழத்தின் எடையை கையில் தூக்கிப் பார்க்கவும்: வாட்டர் மெலன் நீர்ச்சத்து நிறைந்த பழம். இதன் எடை கனமானதாயிருந்தால், உள்ளிருக்கும் ஜூஸ் மற்றும் அதன் சுவையில் அளவு அதிகமாயிருக்கும். அளவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரண்டு பழங்களை கையில் தூக்கிப் பார்த்தால் நன்கு பழுத்த பழம் கனமாகவும் கெட்டியாகவும் உணரப்படும்.
4.பழத்தை விரலால் தட்டிப் பார்த்தல்: நம் முன்னோர்கள் செய்ததுபோல் தர்பூசணிப் பழத்தை கையில் எடுத்து ஒரு விரலின் பின் பக்கத்தால் தட்டினால், பழுத்த பழத்திலிருந்து, வெற்றிடத்திலிருந்து வருவது போன்று கணீரென்ற சத்தம் வரும். அதாவது அந்தப் பழம் அதிகளவு ஜூஸுடன் உண்பதற்கு தயாராக உள்ளது என அர்த்தம் கொள்ளலாம்.
5.ஃபீல்ட் ஸ்பாட் சோதனை: ஃபீல்ட் ஸ்பாட் என்பது வாட்டர் மெலன் நன்கு முதிர்ச்சி அடைந்த பின் மண்ணின் மீது அது அமர்ந்திருக்கும் இடம். பழுத்த தர்பூசணிப் பழத்தின் ஃபீல்ட் ஸ்பாட் மஞ்சள் நிறமாகவும் மிருதுவாகவும் இருக்கும். ஃபீல்ட் ஸ்பாட் வெள்ளை அல்லது பச்சை நிறமுள்ளதாக இருந்தால் அது நூறு சத விகிதம் பழுக்கவில்லை என்று தெரிந்துகொள்ளலாம்.
6.வெளிப்புறத்தோலை பரிசோதித்துப் பார்க்கவும்: வாட்டர் மெலனின் வெளிப்புறத்தோல் ஸ்மூத்தாகவும், சிறு பள்ளமோ, சிராய்ப்பு போன்ற தோற்றமோ கொண்டிராமல் இருந்தால் அது சாப்பிடத் தக்கதாயிருக்கும். பெரிய அளவில் பிளவோ அல்லது வெட்டுப்பட்டது போன்ற தோற்றமோ கொண்டிருந்தால் அது பலபேர் கைபட்டு சிதைவுற்று உண்ணத் தகாத நிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம். அதை வாங்குவதை தவிர்த்து விடலாம்.
மேற்கூறிய ஆலோசனைகளைப் பின் பற்றி வாட்டர் மெலன் வாங்கினால், சிவந்த நிறத்தில், அதிகளவு சுவையான ஜூஸ் நிறைந்த உள்பகுதி சதையை ரசித்து ருசித்து உண்ணலாம்.